Saturday, October 18, 2008

கர்ண மோட்சம்

http://www.youtube.com/watch?v=siG-AL5mAF8

http://www.youtube.com/watch?v=-OlJ--rWWEQ

கர்ண மோட்சம் ,இந்த படத்தை விமர்சிக்கும் அளவுக்கு உலக சினிமாக்களை கரைத்து குடித்த ஞானி இல்லை நான் , ஆனால் என்னளவில் தோன்றியவற்றை எடுத்துரைக்க முனைகிறேன் .நலிந்த நாட்டுபுற கலைகளில் ஒன்றான , கூத்து கலையை ஒட்டி எடுக்கப்பட்ட அருமையான "குறும்படம்".படத்திற்கு எஸ்.ரா தான் கதை மற்றும் உரையாடல் , நான் அவரின் துணை எழுத்தை தான் முதலில் படித்தேன் . அவர் எதையுமே ஒருவிதமான குற்ற உணர்சியை ( guilty consciousness) மய்யமாக வைத்து எழுதுபவர் . அவர் கோவில்பட்டியில் பாவை கூத்து பிரபலம் என்றும் அதற்காகவே மந்திதோப்பில் தங்கியிருந்து அதை பார்த்தார் என்பதையும் அவரது எழுத்து மூலம் அறிந்தேன்.நானும் எங்கள் ஊரில் நிறைய பேரிடம் விசாரித்து பார்த்தேன் பாவை கூத்து இருந்ததற்கான அறிகுறியே இல்லை. வீட்டின் அருகாமயில் இருக்கும் அயர்ன் தாத்தா மட்டும் " சின்ன வயசுல பார்த்ததுபா .....இப்போலாம் எங்குட்டு நடக்கும் , மறந்தே போச்சு " என்றார்.

இந்த கதையும் ஒரு கூத்து கலைஞனின் வலியை , கலை நலிவடைந்து போனதை ஒரு அழகான , ஆழமான கவிதை போல் சொல்கிறது .முதல் காட்சியிலேயே காலி பெப்சி டப்பாவை குடிக்க முயலும் மகனை தந்தை தண்டிக்கும்போதே அவர்களை சூழும் வறுமை நம்மையும் ஆட்கொள்கிறது . மகன் ஒருபுறம் கிரிக்கட் மட்டை வாங்கி தர சொல்லி நச்சரிக்க , கர்ணனாக எல்லாம் தருகிறேன் என்று வாக்கு கொடுக்கும் தந்தை , பள்ளயில் கூத்து இல்லை என்ற செய்தியில் நொடிந்து போகிறார் . கூத்து கட்டமுடியாமல் , மகனை த்ரிப்திபடுத்த முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பும் , அந்த ஒப்பனையை மீறிய அவர் முக பாவனையும் .......ஆஹா , அனாயாசம் ! யாரய்யா அந்த நடிகர் ?

இன்னுமொரு முக்கிய கதாபாத்திரம் அந்த டீக்கடை சிறுமி , மௌன மொழி பேசி அவர் அடி வாங்கும் கதாபாத்திரங்களில் விழியில் நீர் வழிவதை தடுப்பது சிரமம். ஆர்வத்துடன் அந்த பெண்ணிற்கு கூத்து கற்று கொடுப்பதிலும் , உடைந்த குரலில் கூத்து கலையின் வீழ்ச்சியை சொல்வதிலும் , அந்த பெண்ணை கடைகாரர் இழுத்து செல்லும் பொது ஒரு விதமான சோக இழையோடு பார்ப்பதிலும் , அந்த கூத்து நடிகர் ஜொலிக்கிறார் . கதைக்கு உயிரோட்டம் தருவதென்றால் இது தானோ ?கடைசியில் அந்த ஒரு ரூபாவை அந்த பெண் கொடுத்து குரு தச்சனை தருவது படத்திற்கு முத்தாய்ப்பு .

என்ன செய்ய நிஜ கர்ணர்களுக்கு கொடுக்க வசதியில்லை .ஆமாம் படத்தின் இசை யார் அந்த பிரபாகர் ? சக்கை போடு போடுகிறார் . ஆரம்ப காட்சியின் வரும் மிருதங்கத்தில் இருந்து , படத்தில் சோக இழையோடு வரும் அந்த மெல்லிய ராகம் தொடர்ந்து , கூத்தின் இசை வரை புகுந்து விளையாடி இருக்கிறார் . குறும்படத்திற்கு இவ்வளவு தரமான இசையை தந்திருக்கும் அவரது உழைப்பும் , அர்பணிப்பும் போற்ற தக்கது .நான் நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது கூத்து பார்த்தது , இப்பொழுது மான்கள் மயில்கள் என்ற பெயரில் நடக்கும் " கூத்துகளை" தான் பார்க்க வாய்த்திருக்கிறது .

நம் மண்ணின் கலையை , நம் வாழ்வியலை , நம் பாரம்பரியத்தை , நம் வரலாற்று சிறப்பை , நமது கலைஞர்களை பாதுகாக்காமல் போனது நமது குற்றமா ? அரசின் குற்றமா ? ஊடகங்களின் குற்றமா ? தெரியவில்லை , எஸ்.ராவுடன் சேர்ந்து நானும் அதே குற்ற உணர்ச்சியின் பிடியில்.........

No comments: