Wednesday, June 24, 2009

வெகு நாள் ஆசை


எல்லா இரவுகளும் போல அந்த இரவு இல்லை. குளிர் ஆள் மனதில் கூடுதலான பயத்தை உண்டாகி இருந்தது. நெஞ்சுக்குள் யாரோ கத்தியை இறக்குவது போல் குளிர் என்மீது பாய்ந்து கொண்டிருந்தது. இருட்டு முழுவதுமாக பரவியிருந்தது.


வெளியே எட்டி வானத்தை பார்த்தேன் , அடை மழை. மழையை மிஞ்சும் அளவு கதறி அழலாம் போல் இருந்தது. அதற்கும் தெம்பற்று மனம் இறக்கை ஒடிக்கப்பட்ட பறவை போல் முடங்கி கிடந்தது. தனிமை , நானே தேடிக்கொண்டது இல்லை. சபிக்கப்பட்ட தனிமை. மரணத்தை தீண்ட மனம் எவ்வளவு எத்தனித்தாலும் உடலளவில் தைரியம் இல்லை. எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு வீறு கொண்டு எழ நினைத்தாலும் கண்ணீர் துளியில் ஒடுங்கிப்போகிறேன். எனது வண்டி நேராக நான் பள்ளிபருவத்தில் படித்த இடத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது மறுநாள் மதியத்தில்.

மாலதி , நான் உனக்கு என்ன குறை வைத்தேன்.இந்த கேள்வியை நான் அவளிடம் கேட்டிருந்தால் அவள் கூறும் பதிலின் ரணத்தை விவரிக்க இயலாது. படிப்பு மட்டுமே குறியாக இருந்தது கல்லூரியில் எனக்கு , இரண்டாவாதாக வந்தேன் கல்லூரியில்.உடன் வேலை , எதிர்பாரா சம்பளம். எல்லோர் போலும் நான் வீணாக குடி கும்மாளம் என்று காசை சீரழிக்கவில்லை , மாறாக சேர்த்தேன். சென்னையில் சொந்த வீடு பன்னிரண்டு லட்ச ருபாய் கொடுத்து வாங்கும் அளவிற்கு , அக்கா கல்யாணத்தை தனி ஆளாக தடபுடலாக நடத்தி காட்டும் அளவிற்கு சேர்த்தேன் . அடுத்தது எனக்கு ! வருபவளை ராணி போல் வைத்திருக்க வேண்டும் , தேடி தேடி முழுவதும் இயந்தரமயமாக்கப்பட்ட வாஷிங் மெஷீன் வாங்கினேன் , சோபா , இத்யாதி , இத்யாதி.

மாலதி நான் படித்த அதே படிப்பை படித்திருந்தாள் . பெண் பார்க்கும் போதே மனம் விட்டு பேசினோம். ஆசையாக நடந்த கல்யாணம். தலையில் வைத்து கொண்டாடினேன், மனசெல்லாம் மாலதி.அவளுக்கும் சந்தோஷத்திற்கு குறை இல்லை. அவ்வபொழுது உடலுறவில் நான் சோர்வடையும் பொழுது அவள் எரிச்சல் பட்டுக்கொள்வதை நான் பெரிதாக எடுக்க வில்லை. தனிமையில் மருத்தவரிடம் போனபொழுது எனக்கு ஒரு குறையும் இல்லை என்றார்.

"என்னன்னா இந்தாண்ட வந்திருக்க , எத்தினி நாள் ஆச்சு ? "நான் பன்னிரண்டாம் படிக்கும்பொழுது மெக்கானிக் கடையில் வேலைபார்த்த காளி இப்பொழுது கடை முதலாளி.

"நல்லா தாண்டா இருக்கேன். ராஜன் எப்டி இருக்கான்? ."

"இருக்கான் அவனும். என்ன இந்தாண்ட? ." வண்டியை பார்த்துக்கொண்டே கேட்டான் .

" ஒண்ணுமில்ல , மூர்த்தி அண்ணன் வீடு எங்க இருக்கு? வினோத் அடிக்கடி போவானே. "குரல் கம்மிப்போய் சொன்னேன்


"இன்னானா உனக்கு பழக்கம் இல்லையே? கண்ணாலம் வேற ஆயிடுச்சுனாங்க பசங்க . "


வூடு எங்க டா ? சிரித்துக்கொண்டே கேட்டேன்


" டேய் சங்கரு , அண்ணன மூர்த்தி அண்ணன் வூட்டாண்ட இட்டுனு போ. "


இருவருமே சிரித்துக்கொண்டோம். காளிக்கு தெரியும் நான் போதைப்பொருள்களை தொட்டதே இல்லை. வினோத் பள்ளிக்கே கொண்டு வருவான். காளி கடையில் வைத்து பல முறை அடித்திருக்கிறான் . மூர்த்தி வீட்டிற்கு போவதற்கு நான் புதிதாக வண்டி ஓட்ட கற்று கொள்ள வேண்டும் போல இருந்தது.


இந்த முறை அவள் என் முகத்திலேயே அறைந்தாள். ச்சீ என்று சொல்லிவிட்டு திரும்பி படுத்தாள். இது போல் தினமும் , எனக்கு ரண வேதனையாக இருந்தது , எதிர்ப்பார்ப்புகள் அதிகம் அவளுக்கு. ஆனால் அவள் ஏன் மாற வேண்டும்? யாருடனோ இரவு பன்னிரண்டு மணிக்கு தொலைபேசியில் பேசுகிறாள்? சிரிக்கிறாள் , சிணுங்குகிறாள். நான் வந்தால் துண்டித்துவிடுகிறாள் , இணைப்பை. மறுநாள் அவள் சொன்னன வார்த்தை தீயாக சுட்டது. " என்னுனுச்" என்றாள் , சத் என்று யாரோ கீறியது போல் இருந்தது. இதுபோன்ற சமயங்களில் அவளிடம் பேச முடியாது. அது சரி , எப்பொழுது தான் முகம் கொடுத்து பேசுகிறாள் ? . அன்றிரவு பெப்சி டின்னை உடைத்தேன் , பொங்கி வருவதை வெறுப்புடன் பார்த்துக்கொண்டே மீண்டும் தனிமையில்.இதுக்குமேல வண்டி போவாதுனா என்றான் அந்த சின்னபய்யன்.

"எந்தாண்டடா போனும்? "

" இன்னும் ரெண்டு சந்திருக்கு , நானே இட்டுனு போறேன் , இல்லேனா காளினா திட்டும் "


மூர்த்தி வீட்டை ஒட்டி நிறைய குடிசை இருந்தது. அவன் பார்க்க நகைக்கடை பொம்மை போல் இருந்தான். உள்ளே போனேன் , போய்க்கொண்டே இருந்தேன். பல வகையான போதை , கல்லூரி மாணவர்கள் , பெண்கள் உட்பட. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாதாம். வாடிக்கையாளர் திருப்தி தான் முக்கியம் என்றான். பாம்பு கடி போதை கூட இருந்தது.சிறுவன் கழண்டு கொண்டான்.


" இன்னாப்பா வேணும் உனக்கு? " என்றான் மூர்த்தி சன்னமாக.


" ஹெராயின் " என்றேன்.


சிரித்துக்கொண்டே அடித்து பழக்கம் இருக்கா என்றான் , இல்லை என்று தலை ஆட்டினேன்.

அன்றிரவு நான் குளிரின் நடுக்கத்தில்மீண்டும் அந்த கடிதத்தை வாசித்து கொண்டிருந்தேன். என்னை போல் வாழ்க்கையை வீணாக்கும் பிறவியுடன் மாலதி வாழ விரும்பவில்லையாம் , கல்லூரியில் உடன் படித்தவன். நியூசீலாந்தில் இவளை வைத்து வாழ அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டானாம் , போகிறேன் என்று எழுதி விட்டு கிளம்பி விட்டாள் . ஏற்பாடுகளை அவன் அவனுடைய ஆண்குறியில் தான் செய்யவேண்டும் நியூசீலந்தில் அல்ல என்று நினைத்துக்கொண்டேன். அவள் கொடுத்துவிட்டபோன தாலி என் வெகுநாள் ஆசையின் சாட்சியமாக நின்றிருக்க மீண்டும் குளிர் ஆள் மனதில் கூடுதலான பயத்தை உண்டாகி கொண்டிருந்தது


ஹெராயின் முதலில் பௌடர் போல் இருக்கிறது. அதை அவன் அளந்து தான் கொதிக்கும் நீரில் போடுகிறான் , என்னை அந்த குழாயின் முனையை பற்றிக்கொள்ள சொன்னான் , புகை வந்தது.


" இழுங்க நல்லா " என்றான். பயத்தை மறந்து இழுத்தேன் , தலை இரண்டாக சுற்றியது. ஒரு சின்ன நாற்காலியில் உக்காந்திருந்தேன் , சிரித்துக்கொண்டே கீழே விழுந்தேன். கொஞ்சம் உணர்வற்று ஒரு அரைமணி நேரம் இருந்திருப்பேன். அடுத்த கேள்வி மூர்த்தியிடம் கேட்டேன்.


"பொண்ணு வேணும்னா , வீட்டுக்கு இன்னிக்கு ராத்திரி கூட்டினு போனும் "

"எப்போ வுடுவ ? மொத்தமா ஆறாயிரம் செலவாகும். சரக்குக்கும் சேர்த்துதான் சொல்றேன்"


"பிரச்சனை இல்லனா. "


"சரி அட்ரஸ் குடுத்துட்டு போ , மாரிதான் கொண்டாந்து விடுவான் பொண்ண"


"அண்ணா இருக்கறது பிளாட்டுனா , பிரச்சன ஆயுடாதே? "


சிரித்தான். " அது மாரி பொண்டாட்டி தான் பா. ஒன்னியும் கவலைப்படாத , வுட்டுட்டு கிளம்பினே இருப்பான் . நீ காத்தால டாக்சிக்கு கூட துட்டு தர வோணாம் "


சரினா என்று மொத்த ஆறாயிரமும் கொடுத்து விட்டு கிளம்பினேன்.

மாரி சொன்ன நேரத்துக்கு முன்னையே விட்டுவிட்டான் அவன் பொண்டாட்டியை . புருஷனே புரவலராக அமைய பலர் விரும்புவதில்லை , சிலருக்கு கட்டாயம். சிலருக்கு வேட்கை!


முழு பலத்துடன் அவள் உடலை புணர்ந்தேன். அவள் வாயில் வந்த கெட்ட வார்த்தைகளை கூட பொருட்படுத்தாமல் . சிறிது நேரம் கழித்து உணர்வற்று படுத்திருந்தாள் ,


வெகு நாள் ஆசை அவள் கழுத்தில் இருக்கும் தாலி அறுந்து ரத்தம் என் திறந்த மார்பை தொட்டது.குளிரின் பிடியில் ஜென்னலை வெறித்து பார்த்துகொண்டிருக்கிறேன் .

Monday, June 15, 2009

பெரியவர் ( சிறுகதை போட்டிக்காக)

எப்பொழுதும் போன்ற சிரிப்புடன் கூடிய பேச்சு சத்தம் அன்று மார்க்கெட்டில் இல்லை. ஒரு விதமான உஷ்ணத்தை அங்கிருக்கும் அனைவருமே உணர்ந்தனர்.அனைவரும் அண்ணாச்சியின் வார்த்தைக்கு ( கட்டளைக்கு) காத்திருந்தனர். கடையின் பின்புறத்தில் அண்ணாச்சி உக்கார , இருபது பேருடன் அந்த கூட்டம் தொடங்கியது


" ஏலே இந்த பயலுவலால தனியா நின்னு இப்புடி பேச முடியும்னு நினைக்கீகளா? " அண்ணாச்சி எழுந்து நின்று உரக்க கத்தினார்.


"இல்ல அண்ணாச்சி , போன வாட்டி அவிங்க என்ன கேட்டானுங்க? . எல்லா தடவையும் நாம தான மொதல்ல தேர இழுக்கோம்" சந்தேக தொனியில் வினவினான் வெள்ளை சாமி.


" எலேய் , உனக்கு புரியலையா? . எந்த பயலுக்கு அண்ணாச்சி முன்னாடி தேர நாங்க தான் மொதல்ல தொடுவோம்னு சொல்ற தெனவு இருக்கு? அண்ணாச்சி என்ன சொல்லுதார்னா , அந்த பெரியவர்தான் இவிங்கள தூண்டி விடுத்தாராம்." வேலு சொல்லி முடிப்பதற்குள் அண்ணாச்சி ஆரம்பித்தார்.


" இங்க பாருங்கலே , அந்த பெரியவரு இந்த சின்ன பயலுவள வேணும்னே தூண்டி விடுதாரு. இத்தனைக்கும் அந்த முருகப்பய சாமி ஆடுதான் , என்ன சாதில அந்த பெரியவரு? கொஞ்சம் காசு பணம் பார்த்துடா நம்மள எதிர்க்கவே ஆள தூண்டி விடுவானோ?

அருதப்பயவுள்ள காட்டனும்லே இந்த மார்கெட் நம்ம சாதியோட கோட்டை தாம்னு காட்டனும்லே . தொழில்ல என்ன ஜெயிச்சுப்புடுவானோ அப்புடீன்னு ஒரு பயம் வந்திருச்சுலே , இன்னிக்கு மருவாதையும் போகனுமா? . எலேய் என்னலே நான் ஆசைப்பட்டேன் , நம்ம பயலுவளுக்கு செய்யனும்னு தானல வாழ்க முழுசா உழைக்கிறேன் , தோத்தா நான்டுக்க வேண்டியது தான். " அண்ணாச்சி குரல் உச்ச ஸ்தாயியில் ஆரம்பித்து உடைந்தது.

" அண்ணாச்சி , நீங்க ஏன் கலங்குதீக? இன்னிக்கு ராவுல பெரியவர் கடை இருக்காது . ஊர்ல இல்லாத கலர் கடை வெச்சிருக்கனோ? . நீங்க வீடு போய் சேருங்க அன்னாசி சேதி வரும்" சீறினான் வெள்ளை.


அண்ணாச்சி ஒரு விதமான மன நிறைவுடன் கிளம்பினார். வெள்ளை , வேலு , குமார் , சங்கிலி நாலு பேரும் செல்வது என முடிவெடுக்கப்பட்டது. திருவிழாவில் அனைவரும் லயித்து கிடக்க கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருக்கும் பெரியவர் கடையை கொளுத்தினால் யாருக்கும் தெரியாது. வெள்ளை வீட்டுக்கு வேகவேகமாக சைக்கிளை அழுத்தினான்.

" பார்வதி , எங்குன இருக்க? மண்ணெண்ணெய் வேணும் , கடைக்கு தேவைப்படுது "


" எதுக்கு கடைக்கு? . வீட்ல குறைசலா இருக்கு , அரிசி கூட தீரப்போவுது. புள்ளைங்க ஸ்கூல் போவ புது துணி வேணும்னு கேட்டதுங்க . நான் என்ன உங்கள்ட நகநட்டா கேக்கேன்? " பார்வதி முடிப்பதற்குள் மண்ணெண்ணெய் எடுத்து கொண்டு வெள்ளை கிளம்பினான்.


" புருஷன் வீட்டுக்கு வந்தா கொஞ்சாமது அன்பா பேசுங்கடி , சும்மா எந்நேரமும் பஞ்ச பாட்டு பாடறது " கூடுதலாக பார்வதி குடும்பத்தை நான்கு கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்து விட்டு கிளம்பினான்.


துல்லியமாக செய்ய வேண்டும். கொஞ்சம் பிசகினால் தலை தப்பாது. யாரும் பார்த்து விடக்கூடாது. பாட்டிலில் ஊற்றி திரியை பற்ற வைத்து உள்ளே வீசும் வேலை சங்கிலியின் பொறுப்பில் விடப்பட்டது. மற்ற மூவரும் காவல் காத்தனர். திருவிழா ஜோரில் பெரியவர் கடையில் ஆள் நடமாட்டமே இல்லை. பெரியவரின் கடையை ஒட்டி தான் அவர் வீடு . சொந்தபந்தங்கள் திருவிழாவிற்கு வந்திருக்க கூடும். இரண்டு பெரிய மரக்கதவுகளில் ஒன்றை மட்டும் வெள்ளை நன்றாக தாளிட்டு வந்தான். பெரியவருக்கு சத்தம் கேட்டிருக்காது. வேலு ஊர்ந்து போய் இரண்டாவதை பூட்டி பின் வாசலை மொத்தமாக அடைத்தான். முன் வாசல் வழியாகத்தான் ஆள்கள் வர வேண்டும்.அந்த கதவை ஒரே நொடியில் பூட்டி விடலாம். பின்னாலிருக்கும் ஜென்னல் தேர்ந்தெடுக்கப்பட்டது. பின் வாசலுக்கு நேர் எதிராக இருக்கும் திரையில் சங்கிலி கொளுத்தி போட்டான். முன் வாசலை சாத்தி விட்டு வேலுவும் வெள்ளையும் பறந்தார்கள்.


சைக்கிள் அழுத்தம் நிற்கவே இல்லை , வீட்டுக்கு வரும் வரை. ஒருவரை ஒருவன் பின்பு பார்த்துக்கொண்டனர். சங்கிலி விடைபெற்றுக்கொண்டான்." எலேய் செஞ்சுப்புட்டோம்ல ,பெரியவர்க்கு கடைனு ஒன்னே இல்லைன்னு ஆகிடுச்சு பார்த்தியா? . என்னலாமோ சத்தம் , பெரியவர் பேரன் பேத்தி சத்தம் தான் அதிகமா கேட்டுச்சு,உள்ள போய் அதுங்கள காப்பாத்தி இருக்கலாமோ? "" வேலு மொதல்ல கிளம்புல , அதுங்கள காப்பாத்தினா நம்ம குடும்பத்த
அவன் கருவருத்துப்புடுவான்". சரி தான் என்பது போல் தலையாட்டிவிட்டு வேலு கிளம்பினான்.


புரண்டு புரண்டு படுத்த பார்த்த வெள்ளைக்கு தூக்கமில்லை. அண்ணாச்சி சந்தோஷப்படுவார் , அது போதும். பார்வதி பக்கத்தில் இல்லை.

" புள்ள எதுக்கு வாசல்ல கெடக்க? " ?

" பொடுசுங்க ரெண்டும் பெரியவர் கடைல ரோஸ் மில்க் சாப்படனும்னு அம்மாச்சி கொடுத்த காச வாங்கிட்டு போச்சுங்க , இன்னும் வரக்காணோம்."

Tuesday, June 2, 2009

சைட் அடித்தல் - சாமி ஆடுதல்


அடுத்த மொக்கைப்பதிவு ரெடி. எனக்கு பகுத்தறிவு மிக லேட்டாக சேர்ந்த விடயம் தான். சின்ன வயதில் சாமி பக்தியும் அதிகம் கிடையாது. ஆனால் , நானும் பேசிலும் ( பார்த்து பத்து ஆண்டுகள் இருக்கும்) அடிக்கடி தேவாலயம் சென்றது நினைவிருக்கிறது. மச்சான் என் ஆளை காட்றேன் வாடா என கூட்டிக்கொண்டு போவான். அவன் ஆள் உட்பட அனைத்து ஜிகிடிகளையும் கண்ணால் விழுங்கி விட்டுதான் மறுவேலையே.கடைசி வரை அந்த பெண்ணிடம் பேசில் பேசினானா என்று நினைவில்லை.இந்நிலையில் எங்கள் ஊரில் திருவிழா மிகப்ப்ரசித்தம். தங்ககார்த்தி எல்லாம் தீபாவளிக்கு கூட துணி எடுக்க மாட்டான் , ஆனால் திருவிழா என்றால் திலகராஜில் முதல் ஆளாக நின்று விடுவான். இந்த திருவிழாக்களில் ஒரே ஒரு பெண்ணை மட்டும் தேர்ந்தெடுத்து கூட்டத்தோடு கூட்டமாக அவள் பின்னால் செல்வதை வருடாந்திர கடமையாக செய்து வந்தோம். குறிப்பாக அவர்கள் வெளி கிராமத்து பெண்களாக இருக்கும் பட்சத்தில்.

இன்றும் நினைவிருக்கிறது " மாப்ள அந்த ப்ளூ உன்னையே தாம்ல பாக்குது" என்று உசுப்பி விடப்போய் ஒரு நான்கு கிலோமீட்டர் தூரம் என்னை நடக்க வைத்தான் ஒரு படுபாதகன். என் மனாசாட்சிக்கு தெரியும் அவள் திரும்பவேயில்லை.பதிவின் சாரத்திர்க்கே வரவில்லை , நான் சொல்ல வந்தது சாமி ஆடுதலை பற்றி. பலமுறை பேச்சுபோட்டிகளில் கலந்திருக்கிறேன். வேறொரு பள்ளியிலிருந்து வரும் ஒரு சிட்டு செமையாக சிலிர்த்துகொள்ளும் போட்டிகளில். நம் ஊரில் அந்த இடத்தில் திருவிழா போகலாமா என்றான் நண்பன் , சரி என்று சைக்கிள் எடுத்து கிளம்பினோம். அங்கு போய் தான் அது முழுக்க சாமி ஆடும் திருவிழா என்று தெரிந்தது , ராட்டினம் இல்லை , மிளகாய் பஜ்ஜி இல்லை , பஞ்சுமிட்டாய் இல்லை ஒரு மயிரும் இல்லை.


சரி மொக்கை என்று திரும்பி வந்துவிடலாம் என பார்த்தல் பெருங்கூட்டம். சாமி அடஆரம்பித்துவிட்டாள் ஒரு பெண்மணி , ஆச்சரியமாக உற்று பார்த்தேன் , ஏன் ஆடுகிறாள் என்ற காரணம் புலப்படவில்லை , அப்பொழுது ஆத்திகனாகவே இருதாலும் எனக்கு சாமி ஆடுதல் ஒரு வித மன நோயாகவே பட்டது. அப்பொழுது தான் அந்த சிட்டு டமால் என்று சாமி ஆட்டம் போட்டது , அது போட்ட ஆட்டத்தில் நான் சாமி எல்லாம் காணவில்லை , பலான பலான ஆட்டம் போல் தான் அடியேனின் கண்ணுக்கு தெரிந்தது. பெருசு ஒன்று பட்டை பட்டையாக விபூதி போட்டுக்கொண்டு அந்த பிள்ளையை எடக்கு முடக்காக பார்த்துக்கொண்டிருந்ததை பார்த்தேன். நெருங்கிப்போய் அவளைப்பார்த்து கண்ணடித்தேன் , ஒரு பிளையிங் கிஸ். இடத்தை காலி செய்தோம் நானும் நண்பனும்.

அடுத்த நாள் ஒரு போட்டி , என்னை பார்த்தவள் தடலாடியாக கத்தினாள் " உன்மேல உள்ள மரியாதையே போச்சுல ஒன்னிய மனுஷனாவே நான் இனி மதிக்கமாட்டேன். சாமிஆடுதேம்ல அங்குட்டு என்ன என்னையா கேவலமா பாக்க , அப்பறம் நீ செஞ்ச காரியத்த பத்தி பேசவே புடிக்கல " என பொரிந்து தள்ளினாள்.

பொறுமையாக கேட்டேன் " ஏ புள்ள , நீ சாமி ஆடலை , என்னியத்தான பார்த்த ? "

" அப்படி எல்லாம் இல்லையே "

" அப்பறம் எப்புடி இம்புட்டு சரியா சொல்ற நான் செஞ்சதையெல்லாம் "

மூஞ்சியை திருப்பிக்கொண்டு போய்விட்டாள் . பின்னாளில் நான் பலமுறை சாமிஆடுபவர்களை பார்த்து கண்ணடித்திருக்கிறேன். ஒரு பெண் தனியாக வந்து "ஏன் அப்படி செஞ்சீங்க" என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.இன்று யாரவது சாமி ஆடுவதை பார்க்கவேண்டும் போல் உள்ளது

Monday, June 1, 2009

விஜயகாந்த் - புத்தக விமர்சனம்


இப்போதைக்கு இருக்குற மொக்கைல இதைத்தான் என்னால் செய்ய இயலும். ஏதாவது புத்தகம் படிப்பது , விமர்சனம் எழுவது.

புத்தகம் வாங்கி வந்தவுடன் அம்மா கேட்ட கேள்வி " ஏண்டா விஜயகாந்திற்கு ஒரு புக் ஆ ? , நீ இதெல்லாம் வாங்கமாட்டயே? "

" ஆமாம். ஆனால் எழுதியவரை எனக்கு தெரியும்.போர் அடிக்காம இருக்கும். "

" என்னவோ பண்ணு"

சரி என்று திட்டு வாங்கி விட்டு படிக்க ஆரம்பித்தேன். 136 பக்கங்கள். பறந்தது நிமிட பிரேக் இல்லை. சிட்டாக பறந்தது புத்தகம். நல்ல போதை. காலையில் தான் தெளிந்தது.போதையிலேயே ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு படுத்தேன்.

ஆரம்பத்தை நான் ஏற்க்கனவே இணையத்தில் படித்துவிட்டதால் சுவாரசியம் இல்லை. அதற்க்கு பிறகு , விஜயகாந்தின் பால்ய மற்றும் இளம் வயதை பற்றி பல சுவைகரமான தகவல்கள். கூடவே "விளாறு" போன்றவைக்கு விளக்கத்தோடு. முழுப்புத்தகம் படிப்பது எதோ படம் பார்ப்பது போல் உள்ளது.படிப்பு வராமல் விஜயகாந்த் தந்தையிடம் அடி வாங்குவது , இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்றது , பிறகு மில்லில் வேலைக்கு சேர்ந்து எதிர்வீட்டு ஜென்னல் சிட்டை நோக்குவது என எண்பதுகளில் வந்த தமிழ் சினிமாவிற்கு தரணி திரைக்கதை எழுதி வேகமூட்டியது போல் ஒரு பீலிங்.

விஜயகாந்த் படிப்படியாக முன்னுக்கு வந்ததை பற்றி லக்கி நன்றாகவே எழுதி இருக்கிறார். பின்னால் நல்ல உழைப்பு இருக்கிறது. குறிப்பாக 92-96 சிறப்பான தொகுப்பு. அவர் பட்ட அவமானகளை அதே சூட்டுடன் படிக்க முடிகிறது. நிற்க.

அறுபத்தி மூன்று ருபாய் கொடுத்திருக்கிறேன். பச்சையாக பல இடங்களில் என்னை கேனயன் என்று நினைத்து வித்திருக்கிறார்கள் .பக்கத்துக்கு பக்கம் அவர் படம் போட்டா என்ன யா ஞ்யாயம் ? . லக்கி செய்த அநியாயம் ஒன்று பக்க எண்107-112. விஜயகாந்த் மாற்று சக்தி என்பதை நிரூபிக்க ஆதி காலத்து திராவிட அரசியல் ( 1957) இல இருந்து இன்ற வரை உண்டான ட்ரெண்டை விளக்குகிறார். தேவையே இல்லாத வேலை. என்ன சமாதானம் சொன்னாலும் ஒப்புக்கொள்ளவே முடியாது. இது பக்கத்தை நிரப்பும் வேலை என்றால் , இதை நான் வாசகர்களுக்கு செய்த பச்சைத்த்ரோகமாக பார்க்கிறேன். இல்லை , இது தேவை என்று அவர் நினைத்து எழுதி இருப்பார் ஆனால் , போனால் போகட்டும். இத்துனூண்டு புக் ல இதெல்லாம் எழுதினா அநியாயம். உங்களுக்கு தமிழக அரசியலில் உள்ள அறிவை சோதிக்காவா நாங்க காசு கொடுத்தோம் ? . மற்றபடி அரசியல் சார்ந்த இடங்களில் எனக்கு நன்றாகவே தெரியும் , லக்கியால் எளிதாக எழுதி விட இயலும் என்று. சமகால அரசியலை பின்தொடரும் எவராலும் தொகுத்து விடக்கூடிய விஷயம் தான் , ஆனால் சுவாரசியமா எழுவது தான் சவால். அடுத்தமுறை கம்மி விலைக்குமட்டுமே சரக்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
( பி.கு : நெறைய சரக்கே அடித்து சலித்துவிட்டதால் , உருப்படியான ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன் )