Monday, June 15, 2009

பெரியவர் ( சிறுகதை போட்டிக்காக)

எப்பொழுதும் போன்ற சிரிப்புடன் கூடிய பேச்சு சத்தம் அன்று மார்க்கெட்டில் இல்லை. ஒரு விதமான உஷ்ணத்தை அங்கிருக்கும் அனைவருமே உணர்ந்தனர்.அனைவரும் அண்ணாச்சியின் வார்த்தைக்கு ( கட்டளைக்கு) காத்திருந்தனர். கடையின் பின்புறத்தில் அண்ணாச்சி உக்கார , இருபது பேருடன் அந்த கூட்டம் தொடங்கியது


" ஏலே இந்த பயலுவலால தனியா நின்னு இப்புடி பேச முடியும்னு நினைக்கீகளா? " அண்ணாச்சி எழுந்து நின்று உரக்க கத்தினார்.


"இல்ல அண்ணாச்சி , போன வாட்டி அவிங்க என்ன கேட்டானுங்க? . எல்லா தடவையும் நாம தான மொதல்ல தேர இழுக்கோம்" சந்தேக தொனியில் வினவினான் வெள்ளை சாமி.


" எலேய் , உனக்கு புரியலையா? . எந்த பயலுக்கு அண்ணாச்சி முன்னாடி தேர நாங்க தான் மொதல்ல தொடுவோம்னு சொல்ற தெனவு இருக்கு? அண்ணாச்சி என்ன சொல்லுதார்னா , அந்த பெரியவர்தான் இவிங்கள தூண்டி விடுத்தாராம்." வேலு சொல்லி முடிப்பதற்குள் அண்ணாச்சி ஆரம்பித்தார்.


" இங்க பாருங்கலே , அந்த பெரியவரு இந்த சின்ன பயலுவள வேணும்னே தூண்டி விடுதாரு. இத்தனைக்கும் அந்த முருகப்பய சாமி ஆடுதான் , என்ன சாதில அந்த பெரியவரு? கொஞ்சம் காசு பணம் பார்த்துடா நம்மள எதிர்க்கவே ஆள தூண்டி விடுவானோ?

அருதப்பயவுள்ள காட்டனும்லே இந்த மார்கெட் நம்ம சாதியோட கோட்டை தாம்னு காட்டனும்லே . தொழில்ல என்ன ஜெயிச்சுப்புடுவானோ அப்புடீன்னு ஒரு பயம் வந்திருச்சுலே , இன்னிக்கு மருவாதையும் போகனுமா? . எலேய் என்னலே நான் ஆசைப்பட்டேன் , நம்ம பயலுவளுக்கு செய்யனும்னு தானல வாழ்க முழுசா உழைக்கிறேன் , தோத்தா நான்டுக்க வேண்டியது தான். " அண்ணாச்சி குரல் உச்ச ஸ்தாயியில் ஆரம்பித்து உடைந்தது.

" அண்ணாச்சி , நீங்க ஏன் கலங்குதீக? இன்னிக்கு ராவுல பெரியவர் கடை இருக்காது . ஊர்ல இல்லாத கலர் கடை வெச்சிருக்கனோ? . நீங்க வீடு போய் சேருங்க அன்னாசி சேதி வரும்" சீறினான் வெள்ளை.


அண்ணாச்சி ஒரு விதமான மன நிறைவுடன் கிளம்பினார். வெள்ளை , வேலு , குமார் , சங்கிலி நாலு பேரும் செல்வது என முடிவெடுக்கப்பட்டது. திருவிழாவில் அனைவரும் லயித்து கிடக்க கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருக்கும் பெரியவர் கடையை கொளுத்தினால் யாருக்கும் தெரியாது. வெள்ளை வீட்டுக்கு வேகவேகமாக சைக்கிளை அழுத்தினான்.

" பார்வதி , எங்குன இருக்க? மண்ணெண்ணெய் வேணும் , கடைக்கு தேவைப்படுது "


" எதுக்கு கடைக்கு? . வீட்ல குறைசலா இருக்கு , அரிசி கூட தீரப்போவுது. புள்ளைங்க ஸ்கூல் போவ புது துணி வேணும்னு கேட்டதுங்க . நான் என்ன உங்கள்ட நகநட்டா கேக்கேன்? " பார்வதி முடிப்பதற்குள் மண்ணெண்ணெய் எடுத்து கொண்டு வெள்ளை கிளம்பினான்.


" புருஷன் வீட்டுக்கு வந்தா கொஞ்சாமது அன்பா பேசுங்கடி , சும்மா எந்நேரமும் பஞ்ச பாட்டு பாடறது " கூடுதலாக பார்வதி குடும்பத்தை நான்கு கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்து விட்டு கிளம்பினான்.


துல்லியமாக செய்ய வேண்டும். கொஞ்சம் பிசகினால் தலை தப்பாது. யாரும் பார்த்து விடக்கூடாது. பாட்டிலில் ஊற்றி திரியை பற்ற வைத்து உள்ளே வீசும் வேலை சங்கிலியின் பொறுப்பில் விடப்பட்டது. மற்ற மூவரும் காவல் காத்தனர். திருவிழா ஜோரில் பெரியவர் கடையில் ஆள் நடமாட்டமே இல்லை. பெரியவரின் கடையை ஒட்டி தான் அவர் வீடு . சொந்தபந்தங்கள் திருவிழாவிற்கு வந்திருக்க கூடும். இரண்டு பெரிய மரக்கதவுகளில் ஒன்றை மட்டும் வெள்ளை நன்றாக தாளிட்டு வந்தான். பெரியவருக்கு சத்தம் கேட்டிருக்காது. வேலு ஊர்ந்து போய் இரண்டாவதை பூட்டி பின் வாசலை மொத்தமாக அடைத்தான். முன் வாசல் வழியாகத்தான் ஆள்கள் வர வேண்டும்.அந்த கதவை ஒரே நொடியில் பூட்டி விடலாம். பின்னாலிருக்கும் ஜென்னல் தேர்ந்தெடுக்கப்பட்டது. பின் வாசலுக்கு நேர் எதிராக இருக்கும் திரையில் சங்கிலி கொளுத்தி போட்டான். முன் வாசலை சாத்தி விட்டு வேலுவும் வெள்ளையும் பறந்தார்கள்.


சைக்கிள் அழுத்தம் நிற்கவே இல்லை , வீட்டுக்கு வரும் வரை. ஒருவரை ஒருவன் பின்பு பார்த்துக்கொண்டனர். சங்கிலி விடைபெற்றுக்கொண்டான்." எலேய் செஞ்சுப்புட்டோம்ல ,பெரியவர்க்கு கடைனு ஒன்னே இல்லைன்னு ஆகிடுச்சு பார்த்தியா? . என்னலாமோ சத்தம் , பெரியவர் பேரன் பேத்தி சத்தம் தான் அதிகமா கேட்டுச்சு,உள்ள போய் அதுங்கள காப்பாத்தி இருக்கலாமோ? "" வேலு மொதல்ல கிளம்புல , அதுங்கள காப்பாத்தினா நம்ம குடும்பத்த
அவன் கருவருத்துப்புடுவான்". சரி தான் என்பது போல் தலையாட்டிவிட்டு வேலு கிளம்பினான்.


புரண்டு புரண்டு படுத்த பார்த்த வெள்ளைக்கு தூக்கமில்லை. அண்ணாச்சி சந்தோஷப்படுவார் , அது போதும். பார்வதி பக்கத்தில் இல்லை.

" புள்ள எதுக்கு வாசல்ல கெடக்க? " ?

" பொடுசுங்க ரெண்டும் பெரியவர் கடைல ரோஸ் மில்க் சாப்படனும்னு அம்மாச்சி கொடுத்த காச வாங்கிட்டு போச்சுங்க , இன்னும் வரக்காணோம்."

10 comments:

ஜீவா ஓவியக்கூடம் said...

சிறுகதை படித்தேன்.
பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள்.
jeffrey Archer twist கூட இருக்கிறது....
slang நன்றாக அமைந்திருக்கிறது.
வாழ்த்துக்கள். இன்னும் எழுதுங்கள்.

Prakash said...

நன்றி ஜீவா சார். Archer ஐ நான் படித்ததே இல்லை ஆனால்

Prasanna Rajan said...

மிகவும் நன்றாக இருந்தது பிரகாஷ். முதல் கதைக்கு உண்மையிலேயே அருமை. வட்டார வழக்கு உபயோகிக்கும் போது ஒரு ப்ரச்சனை வரும். அது தான் ஒற்றுப் பிழைகள். முடிவு சற்றே ஊகித்தது தான்.(Poetical Justice??!! :P) மேலும் கதையை மேலாக வாசிக்க முடியவில்லை. கொஞ்சம் கவனமாகத் தான் வாசிக்க வேண்டி இருந்த்து. இவற்றை கழைந்துப் பார்த்தால் மிகச் சிறப்பான கதை. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். அப்படியே எதுனாச்சும் சிறு பத்திரிக்கை, இல்லாங்காட்டி திண்ணை மாதிரி இணைய இதழுக்கு தட்டி விடுங்கப்பு.

Prakash said...

நன்றி பிரசன்னா. வட்டார வழக்கு உபயோகிப்பதால் வரும் பிரச்சனை தான் , ஆனால் சாதரணமாக கதை எழுதினால் எனக்கு இன்னும் பிழைகள் வரும் என்பதே உண்மை. அது ஞாயபடுத்தும் முடிவல்ல , அல்லது தண்டனையும் இல்லை. சா(தீ) தன்னை சுடும்போதே வலி சிலருக்கு புரிகிறது . ஆம் நானே இரண்டாம் முறை வாசிக்கும்பொழுது கவனாமாக தான் வாசித்தேன். கொஞ்சம் தெளிவுடன் எழுதி இருக்கலாம். ஹி ஹி , எதுனா ஒரு பத்திர்க்கைக்கு எழுதிப்புடுவோம் சீக்கரமா , இன்னும் கொஞ்சம் நல்லா கதை கைவசம் இருக்கு

பதி said...

நல்லா வந்திருக்கு பிரகாஷ் !!!!!

Prakash said...

நன்றி பதி :)

Unknown said...

கதை நல்லா இருக்கு.என் வலையில் உங்கள் முகவரி பார்த்து இங்கு வந்தேன்.
வட்டார வழக்கு அட்டகாசம்.

// புருஷன் வீட்டுக்கு வந்தா கொஞ்சாமது அன்பா பேசுங்கடி , சும்மா எந்நேரமும் பஞ்ச பாட்டு பாடறது " கூடுதலாக பார்வதி குடும்பத்தை நான்கு கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்து விட்டு கிளம்பினான்//

இயல்பான ந்கைசுவை.வாழ்த்துக்கள்.

Prakash said...

எனக்கு இது ஸ்பெஷல் பின்னூட்டம் . உங்கள் பின்னூட்டங்களின் ரசிகன் நான்! நீங்கள் கவிதைகளை இண்டர்ப்ரட் பண்ணும் விதம் ஆச்சிரியமாக இருக்கிறது. இது என் முதல் சிறுகதை முயற்சி. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி !

Kalpagam said...

மனதைத் தொட்ட கதை! வாழ்த்துகள் பிரகாஷ்!

பிரசன்னா குறிப்பிட்டது போல poetic justice ஆக இருந்தாலும் பாவம் பெரியவர்களின் தவறுக்கு குழந்தைகள் பலியாவானேன் என்ற வருத்தமும் இருக்கிறது!

Prakash said...

தவறு செய்தவர்களே கூட அதன் உக்கிரத்தை புரிந்துகொள்வதில்லை கல்பகம் , இடம் வளர்ந்த சூழலுக்கேற்ப அவர்களின் சிந்தனைத்திறன் அமைகிறது. பகுத்தறிவு என்பது ஒரு மாயச்சொல் , அது ஒருவனுக்கு முழுவதும் பிடிபட்டுவிட்டால் பூமி வேறு மாதிரி இயங்கிக்கொண்டிருக்கும் :)

கருத்துக்கு நன்றி