எப்பொழுதும் போன்ற சிரிப்புடன் கூடிய பேச்சு சத்தம் அன்று மார்க்கெட்டில் இல்லை. ஒரு விதமான உஷ்ணத்தை அங்கிருக்கும் அனைவருமே உணர்ந்தனர்.அனைவரும் அண்ணாச்சியின் வார்த்தைக்கு ( கட்டளைக்கு) காத்திருந்தனர். கடையின் பின்புறத்தில் அண்ணாச்சி உக்கார , இருபது பேருடன் அந்த கூட்டம் தொடங்கியது
" ஏலே இந்த பயலுவலால தனியா நின்னு இப்புடி பேச முடியும்னு நினைக்கீகளா? " அண்ணாச்சி எழுந்து நின்று உரக்க கத்தினார்.
"இல்ல அண்ணாச்சி , போன வாட்டி அவிங்க என்ன கேட்டானுங்க? . எல்லா தடவையும் நாம தான மொதல்ல தேர இழுக்கோம்" சந்தேக தொனியில் வினவினான் வெள்ளை சாமி.
" எலேய் , உனக்கு புரியலையா? . எந்த பயலுக்கு அண்ணாச்சி முன்னாடி தேர நாங்க தான் மொதல்ல தொடுவோம்னு சொல்ற தெனவு இருக்கு? அண்ணாச்சி என்ன சொல்லுதார்னா , அந்த பெரியவர்தான் இவிங்கள தூண்டி விடுத்தாராம்." வேலு சொல்லி முடிப்பதற்குள் அண்ணாச்சி ஆரம்பித்தார்.
" இங்க பாருங்கலே , அந்த பெரியவரு இந்த சின்ன பயலுவள வேணும்னே தூண்டி விடுதாரு. இத்தனைக்கும் அந்த முருகப்பய சாமி ஆடுதான் , என்ன சாதில அந்த பெரியவரு? கொஞ்சம் காசு பணம் பார்த்துடா நம்மள எதிர்க்கவே ஆள தூண்டி விடுவானோ?
" அண்ணாச்சி , நீங்க ஏன் கலங்குதீக? இன்னிக்கு ராவுல பெரியவர் கடை இருக்காது . ஊர்ல இல்லாத கலர் கடை வெச்சிருக்கனோ? . நீங்க வீடு போய் சேருங்க அன்னாசி சேதி வரும்" சீறினான் வெள்ளை.
அண்ணாச்சி ஒரு விதமான மன நிறைவுடன் கிளம்பினார். வெள்ளை , வேலு , குமார் , சங்கிலி நாலு பேரும் செல்வது என முடிவெடுக்கப்பட்டது. திருவிழாவில் அனைவரும் லயித்து கிடக்க கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருக்கும் பெரியவர் கடையை கொளுத்தினால் யாருக்கும் தெரியாது. வெள்ளை வீட்டுக்கு வேகவேகமாக சைக்கிளை அழுத்தினான்.
" பார்வதி , எங்குன இருக்க? மண்ணெண்ணெய் வேணும் , கடைக்கு தேவைப்படுது "
" எதுக்கு கடைக்கு? . வீட்ல குறைசலா இருக்கு , அரிசி கூட தீரப்போவுது. புள்ளைங்க ஸ்கூல் போவ புது துணி வேணும்னு கேட்டதுங்க . நான் என்ன உங்கள்ட நகநட்டா கேக்கேன்? " பார்வதி முடிப்பதற்குள் மண்ணெண்ணெய் எடுத்து கொண்டு வெள்ளை கிளம்பினான்.
" புருஷன் வீட்டுக்கு வந்தா கொஞ்சாமது அன்பா பேசுங்கடி , சும்மா எந்நேரமும் பஞ்ச பாட்டு பாடறது " கூடுதலாக பார்வதி குடும்பத்தை நான்கு கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்து விட்டு கிளம்பினான்.
துல்லியமாக செய்ய வேண்டும். கொஞ்சம் பிசகினால் தலை தப்பாது. யாரும் பார்த்து விடக்கூடாது. பாட்டிலில் ஊற்றி திரியை பற்ற வைத்து உள்ளே வீசும் வேலை சங்கிலியின் பொறுப்பில் விடப்பட்டது. மற்ற மூவரும் காவல் காத்தனர். திருவிழா ஜோரில் பெரியவர் கடையில் ஆள் நடமாட்டமே இல்லை. பெரியவரின் கடையை ஒட்டி தான் அவர் வீடு . சொந்தபந்தங்கள் திருவிழாவிற்கு வந்திருக்க கூடும். இரண்டு பெரிய மரக்கதவுகளில் ஒன்றை மட்டும் வெள்ளை நன்றாக தாளிட்டு வந்தான். பெரியவருக்கு சத்தம் கேட்டிருக்காது. வேலு ஊர்ந்து போய் இரண்டாவதை பூட்டி பின் வாசலை மொத்தமாக அடைத்தான். முன் வாசல் வழியாகத்தான் ஆள்கள் வர வேண்டும்.அந்த கதவை ஒரே நொடியில் பூட்டி விடலாம். பின்னாலிருக்கும் ஜென்னல் தேர்ந்தெடுக்கப்பட்டது. பின் வாசலுக்கு நேர் எதிராக இருக்கும் திரையில் சங்கிலி கொளுத்தி போட்டான். முன் வாசலை சாத்தி விட்டு வேலுவும் வெள்ளையும் பறந்தார்கள்.
சைக்கிள் அழுத்தம் நிற்கவே இல்லை , வீட்டுக்கு வரும் வரை. ஒருவரை ஒருவன் பின்பு பார்த்துக்கொண்டனர். சங்கிலி விடைபெற்றுக்கொண்டான்.
" எலேய் செஞ்சுப்புட்டோம்ல ,பெரியவர்க்கு கடைனு ஒன்னே இல்லைன்னு ஆகிடுச்சு பார்த்தியா? . என்னலாமோ சத்தம் , பெரியவர் பேரன் பேத்தி சத்தம் தான் அதிகமா கேட்டுச்சு,உள்ள போய் அதுங்கள காப்பாத்தி இருக்கலாமோ? "
" வேலு மொதல்ல கிளம்புல , அதுங்கள காப்பாத்தினா நம்ம குடும்பத்த
அவன் கருவருத்துப்புடுவான்". சரி தான் என்பது போல் தலையாட்டிவிட்டு வேலு கிளம்பினான்.
புரண்டு புரண்டு படுத்த பார்த்த வெள்ளைக்கு தூக்கமில்லை. அண்ணாச்சி சந்தோஷப்படுவார் , அது போதும். பார்வதி பக்கத்தில் இல்லை.
" புள்ள எதுக்கு வாசல்ல கெடக்க? " ?
" பொடுசுங்க ரெண்டும் பெரியவர் கடைல ரோஸ் மில்க் சாப்படனும்னு அம்மாச்சி கொடுத்த காச வாங்கிட்டு போச்சுங்க , இன்னும் வரக்காணோம்."