Sunday, April 12, 2009

கதை

அவளுக்கு என்னை அடையாளம் தெரியுமா ? குரல் வைத்து? ஹ்ம்ம் இல்லை , மாறி இருந்தது என் குரல் . உடலில் அந்தந்த வயதிற்கு தேவையான மாற்றங்கள் வந்திருந்தன. ஆனால் அவளை எனக்கு தெரிந்தது , மெலிதான ரோஸ் நிறத்தில் சுடிதார் அதை விட கொஞ்சம் அடர்த்தியான நிறம் கொண்ட துப்பட்டா. உடல் கொஞ்சம் பூசினால் போல் இருந்தது , பருமன் இல்லை. கல்லூரி பேருந்திற்காக நிற்கிறாளா? எந்த கல்லூரியில் படிக்கிறாள் ? .


பல முறை பள்ளயில் அவள் பின்தொடர்ந்து சைக்கிளில் போகும்போது உதிர்த்த புன்னகை நினைவுக்கு வந்தது . பிறந்த நாளில் முதல் முதலில் அவளுக்கே சிறப்பான ஒரு இனிப்பைத்தர நான் காலை எட்டு மணிக்கே பள்ளிக்கு வந்திருந்தேன் . இன்றே சொல்லிவிடலாமா ? இல்லை. வேண்டாம். மனம் அடித்து கொள்ள , அவள் அன்றைக்கென்று பார்த்து இவ்வளவு தாமதமாக வர வேண்டுமா ? நடுவில் இந்த வினோத் வேறு வந்து ஏதேதோ ஜபக்கூட்ட கதைகள் சொல்லி என் தாலி அறுத்தான்.


அடங்கப்பா பள்ளி விடுமுறை என்றால் இவனுங்க அலும்பு தாங்காது , வந்து பாய் போட்டு படுத்து பரிசுத்த ஆவியில் இட்லியை வேக வைப்பார்கள். காலையில் சுப்ரபாதம் கேட்கும்போது வரும் அதே கோபம் , இவர்களின் கூச்சலை கேட்டாலும் வரும் . விற்பனை பொருள் ஒன்று தான் , மதமென்னும் போதை பொருள் .இவன் நீல டப்பாவில் விற்கிறான், அவன் சிகப்பு டப்பாவில் .

அடச்சே!இந்நேரத்துல நமக்கு பெரியாரீயமா முக்கியம் ? வினோத்துடன் பக்கத்துக்கு தெருவில் உள்ள பரிமளாவும் வந்திருந்தாள் . அவளுக்கு என்னவாம் ? பக்கத்துல இருந்துட்டு லேட்டா வந்தா என்னடி கொறஞ்சு போவ ?

அடுத்ததாக அவள் வந்தாள் , அப்புடியே லாவகமாக கண்ணால் பேசி அவளை வெளியில் அழைத்து சென்று விடலாம் தான். முன்ன பின்ன அதுக்கு அவளிடம் பழகி இருக்க வேண்டுமே . போன பிறந்தநாளில் பார்த்தது , இது இரண்டாம் ஆண்டு. இருந்தாலும் தைரியத்துடன் அவள் வெளியில் தனியாக நிற்கும்போது கொடுத்தேன்.

சிரித்துக்கொண்டே வாங்கினாள் , சொல்லிவிடலாம் , இதை விட்டால் தருணம் இல்லை .கை விரலை பற்றலாமா , தவறில்லை பக்கத்தில் சென்றேன் , சனியன் புடிச்ச கணக்கு வந்தான். காதலே போச்சு . கடைசியில் அவள் எங்கோ நான் எங்கோ !அவ்வபொழுது நலம் விசாரிப்பேன் , நண்பர்களிடம்.

ஆஹா கதைய எங்கே விட்டேன் பேருந்து நிலையத்திலா , மீண்டு ஒருமுறை காதல் கதை எழுதும் முயற்ச்சியில் தோல்வி ! பிரகாஷா , நீ தேரமட்டடா ! எப்பொழுதும் தாளை கிழித்து விடுவேன் . இந்த விஞ்ஞான வளர்ச்சியான ப்ளாகை படிப்பவன் தான் நொந்து கொள்ள வேண்டும்

Friday, April 10, 2009

49O -பத்து பைசாக்காது பிரயோஜனமா ?

முதலில் நாம் 49 O என்றால் என்னவென்று பார்த்துவிடுவது உத்தமம். இந்த இந்திய திருநாட்டில் வோட்டு போடபோகாமல் ஊட்டில் மப்பில் மல்லாந்து கிடக்கும் குப்புசாமிகளுக்கும் , அன்று விடுமுறை என்று சும்மா வீட்டில் இருக்கும் ராகேஷ்களுக்கும் ஒரு மாபெரும் மாற்று தீர்வு என்ற பல SMSகள் குவிகின்றதா ? . அய்ய இன்னாமே நீ அல்லாரும் மாத்தி மாத்தி ஊர ஏமாதிக்கினு இருக்காங்கோ நான் மட்டும் இன்னத்துக்கு வோட்டு போடணும் ? . இந்த கேள்விகளுக்கெல்லாம் 49 O விடை அளிக்கிறது என்கிறார்கள் ஒரு சாரர். இல்லை என்கிறேன் நான். கொஞ்சம் விரிவாக பார்போம்.


அதாகப்பட்டது , தேர்தலில் 49 0 விதிமுறைகளின் படி ஒரு வாக்காளர் தான் எந்த வேட்பாளரயுமே விரும்பவில்லை என்று வாக்களிக்கலாம். ஆஹா அருமை ? அப்போ எல்லாரும் இதையே போட்டுட்டா நம்ம தொகுதிக்கே திரும்ப தேர்தல் தான் , ஏற்கனவே போட்டியிட்ட எந்த வேட்பாளரும் நிற்க முடியாது என்றெல்லாம் கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்கள் . எல்லாம் பொய் , பச்சை பொய் .


1. இந்த வாக்குமுறை மிகவும் வெளிப்படையாக செய்ய வேண்டும் , அது நமது அரசியல் சாசன உரிமையான மறைமுகமாக நாம் நமது வாக்குகளை பதிவு செய்யலாம் என்பதை முற்றிலும் மறுக்கிறது .


2. இது எந்த வோட்டெடுப்பு இயந்தரங்களிலும் இல்லை பாலட் தாள்களிலும் இருக்காது . நாமாக கேட்டு போட வேண்டும். யாருக்குமே எனது வோட்டு இல்லை என்னும் பட்டன் எந்த மெஷினில் உள்ளது ? இல்லவே இல்லை. இந்த மாற்றம் எப்பொழுது வரும் ? நிதர்சனம் இல்லை .


3.எல்லாரும் சொல்வது போல் மறு தேர்தல் நடக்குமா ? கண்டிப்பாக இல்லை . எந்த கேனப்பய கெளப்பி வுட்டான் இதை ? சரி வேட்பாளர்களை கட்சி மாற்றியாக வேண்டுமா? மயிரா போச்சு , அப்படி எந்த தேவையும் இல்லை .


4. சரியா அப்போ நம்ப போட்ட வோட்டு ? செல்லாத ஒட்டு தான் ! வேண்டுமானால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு தொகுதிக்கு இந்த மாதிரி எத்தன கிறுக்கன் போட்டானு கேட்டு தெரிஞ்சுக்கலாம் .


5.யோ அப்போ ஒரே தொகுதில 99% பேர் இதை போட்டா என்னையா பண்ணுவ ? மிச்சம் இருக்கற 1% வாக்கு பெற்றவன் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கபடும் .


6. யோ அப்போ என்னதான்யா பிரயோஜனம் ? உன் வோட்டிற்கு பதில் யாரும் கள்ள வோட்டு போட முடியாது. அதை தடுக்கதான தேர்தல் ஆணையம் , காவல் துறை எல்லாம் ? அதை எல்லாம் நாம கேக்கக்கூடாது .



ஆனால் வோட்டு போடுவது ஜனநாயக கடமை. அதை உபயோகபடுத்தி கொள்வது நமது திறமை. ஆனால் உண்மையில் மாற்றம் வரவேண்டும் என்று ஞானி போன்றோர் எண்ணுவதற்கு தோள் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இந்த தேர்தலில் ? பயனில்லை !

Saturday, March 28, 2009

பட்டாளம் - படமாடா எடுத்திருக்க ?


திங்கட்கிழமை தீசிஸ் கொடுத்தாக வேண்டும் , தேவையாடா உனக்கு என்று உள்மனது கேள்வி கேட்டாலும் , ஐந்து மணி வரை மின்சாரம் வராது என்று ஆற்காட்டாரின் அறிவிப்பை ஒட்டியும் , நாம் எல்லாம் பிரியப்போகிறோம் என்ற ஆனந்தின் ( சனியன் புடிச்சவனே ! ) செண்டிக்காகவும் ராம்விலாஸ் போனேன் , இந்த எழவை பார்க்க .




பச்சை பச்சையாக கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும் என்று கை துடிக்கிறது , ஆனால் எனது வலைப்பூவை நண்பர்களுக்கு அலுவலகத்திலும் தான் படித்த கல்லூரியிலும் சில நண்பர்கள் பரிந்துரை செய்திருக்கும் ஒரே காரணத்தால் விடுகிறேன் .



ஆரம்ப காட்சியின் போதே எனக்கு விளங்கி விட்டது . கனா காணும் காலங்களின் 'ஜோ' இல்லாத காமடிக்கு சிரித்து நமக்கு முதல் நிமிடத்திலேயே வெயிலில் வெந்நீர் குடிக்க வைக்கிறார். இதே போல் ஒரு எட்டு வருங்கால ரித்தீஷ்களும் , சாம் அன்டேர்சன்களும் அறிமுக படுத்தபடுகிறார்கள்.



கதையா? ஒரு மயிரும் இல்லை! பள்ளிகூடத்தில் இரண்டு க்ரூப் , ரெண்டு பேரும் கனா காணும் காலங்களில் வருவதை விட அதிகமாக மொக்கை போடுகிறார்கள் . நதியா வந்து நீதி பேசுகிறார் , தவறு செய்யும் மாணவர்களை அன்பாக கண்டிக்கிறார் . அடிக்கும் வாத்தியாரிடம் வசனம் பேசுகிறார் என ஒரு படுமொக்கயாக ஒன்றோடு ஒன்று தொடர்பே இல்லாத காட்சிகளில் முதல் பாதி நகர்கிறது .



பாட்டு வேற எதுக்கு எடுத்தாலும் , என்ன மண்ணாங்கட்டிக்கு வருகிறது என்பது அந்த இயக்குனர் புண்ணியவானுக்கு தான் வெளிச்சம் . படத்தை கேவலம் கேவலமாக ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள் முதல் பாதியிலேயே! அதை விமர்சனம் செய்யாத ஒரே ஜீவன் எனது அன்பு ஜுனியர் தினேஷ் தான் , பின் வரிசை காலியாக இருந்ததால் படுத்தே தூங்கி விட்டான் . ( அவனும் ஆனந்தை அசிங்கமாக திட்டினான் என்பது வேற விடயம் )
நடுவில் எங்கோ சுற்றுலா செல்கிறார்கள் , அந்த இடத்தில் க கா கா வினித் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார் , அப்பொழுது தான் காட்சியோடு நான் ஒன்றினேன் . அவன் செய்து கொள்கிறானோ இல்லையோ என்னை கொலை செய்தது போல் இருந்தது .அடங்கப்பா கூட ரெண்டு சுத்துதே , ஏண்டா வசனம் கூடவா ஒழுங்கா பேச மாட்டீங்க ? !



நடுவில் ராகவி கதாபாத்தரத்தில் சோபி என்று ஒரு அரை லூசு வருகிறது ! எச்சை ச்சீ பச்சை போல் இப்படத்தில் ஒரு சக்கரை. வினித் அந்த பெண்ணை டாவு தான் அடிக்கிறான் என்று புழங்க , அவன் அவளை தமக்கையாக எண்ணுகிறான். இதுக்கு நடுவில் ஒற்றுமையை பற்றி இயக்குனர் நதியா வாயிலாக நமக்கு நடுத்தும் பாடத்தில் புல் மட்டும் இல்லை குவார்டர் வரை அரிக்கிறது . ஜாசீ வேறு வயலினை உச்ச ஸ்தானத்திற்கு கொண்டு சென்று நம் காதை பதம் பார்க்கிறார்.



கடைசியில் எதோ ஒரு பாட்ட போடுறானுங்க , வினித் தலையில் பெரிய மணி ஒன்று விழ வேண்டும் என இந்த சக்கரை கயிறை அறுக்கிறார். பின்பு உண்மை தெரிய வந்து அழுகிறார் , மாறாக ஜோ தலையில் விழ சோகம் நம்மை அப்பி எல்லாம் கொள்ளவில்லை. டேய் முடிஞ்சது வா ஓடிடலாம் என தான் தோன்றுகிறது. இதுல கடைசியில் சேது ரேஞ்சுக்கு பில்ட் அப்பு வேற.



உலக சினிமா வரலாற்றில் இப்படி ஒரு மொக்கை படத்தை எடுக்க இன்னொருவன் பிறந்து தான் வர வேண்டும்




Wednesday, March 4, 2009

Possessiveness = புலவி நுணுக்கம்

எனக்கு சின்ன வயதில் வரும் திருக்குறள் பாடம் மிகவும் சிரமான ஒன்று , மனப்பாடம் செய்வது என்பது இன்றளவும் எனக்கு ஆகாத காரியம். ஆதலால் , அவ்வளவு ஆர்வம் இல்லை.

ஆனால் , பொன்னீலன் அண்ணாச்சி ( சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் , எங்கள் குடும்ப நண்பர் ) காரைக்குடி வந்த பொழுது அவருக்கு மிகவும் புடித்த இலக்கியம் திருக்குறள் என்றார். தினம் ஒரு திருக்குறள் படித்து தான் பாரேன் என்றார் , கொஞ்சம் ஆர்வம் தூண்டிய நிலையில் தமிழ் வேட்பனின் எளிய தெளிவுரயோடு ஒரு சின்ன புத்தகம் வாங்கினேன் . எடுத்தவுடன் அருளுடைமை , தவம் , துறவு , ஹ்ம்ம் வேலைக்கு ஆகாது என்று மூடிவிட்டேன். கொஞ்சம் நாள் கழித்து தான் , காமத்துப்பாலில் ஆர்வம் திரும்பியது. ஆகா வள்ளுவன் பின்றார்யா என்று தோன்றியது அன்றிலிருந்து தான். காமத்திலும் காதலிலும் இவரை அடித்து கொள்ள , உலக எழுத்தாளர்கலில் எவரும் உண்டோ ? உலக எழுத்த நான் என்ன கரைத்தா குடிச்சிருக்கேன்? , இல்லை தான் , ஆனால் " உலக இலக்கியங்களில் வள்ளுவம் " என ஜீவா பேசியதை பற்றி அண்ணாச்சி மிகவும் சிலாகித்து பேசுவார் .


விஷயத்துக்கு வருவோம் , இந்த பெண்கள் வட்டத்தில் ( நான் ரொம்ப உள்ள எல்லாம் போனதில்லைங்க )Possessiveness என்ற ஒரு சொல்லாடல் உண்டு . இதை கேட்டவுடன் அர்த்தம் சற்றே விளங்காமல் oxford ஐ புரட்டும்போது மண்டையில் தட்டினான் நண்பன் ஒருவன் , அகராதியில் அர்த்தம் கண்டுகொள்ள முடியாது என திடமாக கூறினான், அனுபவசாலி வேறு. சரி என்று அமைதியாக விட்டு விட்டேன் . காமத்துப்பாலில் , புலவி நுணுக்கம் படிக்கும் பொழுது தான் ஆச்சரியம் அப்பி கொண்டது . அட , இது தானா அது என்று ? நாஞ்சில் நாடனும் என்னுடைய favorite குறளை மேற்க்கோள் காட்டிய பொழுது , மேலும் ஆச்சரியம்.முடிந்தவரை எனது உரையை கொடுக்கிறேன் எனக்கு பிடித்த இந்த அதிகாரத்திற்கு .


குறள்: பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு.

எனது புரிதல் :பரந்த மார்பை உடையவனே , பெண்ணாக பட்டவர் எல்லாருமே உனது மார்பை பொதுவென எண்ணி கண்ணாலேயே உண்பர் , ஆகையால் நான் உன் பரந்த மார்பை தழுவ மாட்டேன் .

குறள்:ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து.

எனது புரிதல் : காதலரோடு ஊடியிருக்கும் பொழுது தும்மினேன் , நீடுடி வாழ்க என்று சொல்லி ஊடலை மறப்பார் என்ற நப்பாசையில்.

குறள்:கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று.

எனது புரிதல் : வளையமாக பூவை நான் உடம்பில் சூடினாலும் , இதை அடுத்த பெண்ணிடம் காட்டி பிராக்கட் போட முயற்சிக்கிறாய் என்று கோபப்படுவாள்

குறள்:யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று.

எனது புரிதல்: எனக்கு மிக மிக பிடித்த குறள். விளக்கம் என்னவென்றால் , யாரை விடவும் நாம் தான் காதல் மிக்கவர் என காதலன் கூறினானாம். அந்த "யாரை விடவும்" என்பதில் யாரை குறிப்பில் உணர்த்துகிறாய் என காதலி ஊடினாள் .

குறள்: இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்.

எனது புரிதல்:நாம் இந்த பிறவியில் பிரியமாட்டோம் என்றேன் , அப்போ அடுத்த பிறவியில் ? என்று கேட்டு கண்ணீர் விட்டாள்

குறள்: உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்.

எனது புரிதல்:உன்னை நினைத்தேன் என்றானாம் காதலன். மறந்ததால் தானே நினைத்தீர் என்று கோபப்பட்டு தழுவ வந்தவள் தழுவாமலே போனாளாம் .
P.S : எத்தன சினிமா பாட்டு/ வசனம் இதுலேந்து காப்பி அடிச்சிருக்காங்க , கணக்கே இல்லை


குறள்:வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று.

எனது புரிதல்: நான் தும்மினேன் , நெடுநாள் வாழ்க என வாழ்த்தினாள் ! அப்பறமா ,யாரோ நினைத்ததால் தான் தும்மல் வருகிறது என கோபப்பட்டாள்

குறள்: தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று.

எனது புரிதல்:வந்த தும்மலை கூட அவளுக்கு அஞ்சி அடக்கினேன் , அதையும் இனம் கண்டு உம்மவள் நினைத்ததை மறைக்க பார்கிறீர் என அழுதாள் .

குறள்: தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று.

எனது புரிதல்:ஊடலில் இருப்பவளை கஷ்டப்பட்டு சிரிக்க வைத்தேன் , இப்படித்தானே பிற பெண்களையும் சிரிக்க வைப்பீர் என மீண்டும் ஊடினாள்.

குறள் : நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று.

எனது புரிதல்: அவள் அழகை வியந்து நோக்கினேன் , யாரோடு ஒப்பீடு செய்து பார்க்கிறீர்கள் என சினம் கொண்டாள் !

Sunday, February 8, 2009

வெண்ணிலா கபடி குழு

போன வெள்ளிகிழமை நானும் ஆனந்தும் கிளம்பினோம் இந்த படத்துக்கு , அதற்குள் இந்த சோம்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசரமாக ஏதோ மென்பொருள் தரவிறக்கம் செய்து தர சொல்லியதால் போக இயலவில்லை . இந்த ஒரு வாரம் படு வெட்டியாக போனது , என்னுடன் என் ஆர்குட் தோழன் திருவாளர் " All time vetti" நாகபூஷன் அவ்வபோது புது படங்களை பற்றி அதி உன்னத ஆங்கிலத்தில் கதைத்து கொண்டிருப்பான் . மத்தபடி அவனைவிட நான் படு வெட்டி. :D


ஞாயிறு மாலை முழித்தவுடன் ( மதியம் தூக்கம் தான் ) நம்ம பேரானந்துக்கு ஒரு காலை போட்டேன் . வண்டி நேராக சுண்டல்கடை நின்றபிறகு சிவத்தில் போய் நின்றது. முதலில் சுமாரான கூட்டம் பின்பு மிக நல்ல கூட்டம் வர படம் தொடங்கியது .


இந்த படத்தின் பெயர் தட்டே மிக வித்யாசமானது , முதல் முறையாக Dog trainer , Focus mover , Light men , என திரைக்கு பின்னால் இருந்த அத்தனை உழைப்பிற்கும் மரியாதை கொடுத்திருக்கிறார்கள் .


கதைக்களம் அவ்வளவு விசாலமானது அல்ல . ஆனால் முதலிலேயே சில வலிகள் பதிவு செய்ய பட்டுவிடுகின்றன. தந்தையை இழந்துவிட்டு பண்ணை வேலை செய்யும் மகன் , கபடி ஆடபோகும் அவனை தண்டிக்கும் பண்ணையார் என கிளியின் சிறகை அறுத்து எரியும் காட்சிகளில் ஆழமாக வலிகள் பதிவு செய்யபட்டிருக்கலாம் . ஆனால் அதன்பிறகு வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு . காமெரா கண்கள் கிராமத்தின் எந்த அழகையும் விடவில்லை . காதல் காட்சிகளில் எந்த அழுத்தமும் இல்லை என்றாலும் , சில குட்டி ஹைக்கூ போன்ற காட்சிகளால் படத்தை நகர்த்தி செல்கிறார் இயக்குனர். படத்தின் மாபெரும் பலம் இசை/பின்னணி இசை . ஒரு காட்சியில் கதாநாயகன் நாயகியை துரத்தி செல்கிறார் , அவ்வளவு எழில் கொஞ்சும் பின்னணி இசை , அது இல்லாவிடில் காட்சி அம்பேல் தான் . லேசா பறக்கிறது பாடல் அருமையான மெலடி , கண்கள் இரண்டால் போல் கமர்ஷியலாக்காமல் இருக்க வேண்டுமே .

கபடி குழுவில் ஒவ்வொருவர் கதாபாத்திரமும் " Well defined " ஆக உள்ளது . புது மாபிள்ளை , டி கடை கதாபாத்திரம் என ஒவ்வொன்றும் தனி ராகம் . ஆரம்பத்தில் இருந்து தோற்கும் ஒரு அணியை கிஷோரின் வருகை மாற்றுகிறது . உள்ளூர் கபடி அணியில் வாய் சண்டை , காதலி பிரிதல் என மிக மெதுவாக போகும் படம் இடைவேளைக்கு பிறகு படு ஸ்பீட் .


ஆமாம் , அந்த இடைவேளையின் பின் வரும் ரெண்டு அழகான பாடல்களும் இடை செருகல்கள் போல அமைந்து விட்டதை ஏன் இயக்குனர் கவனிக்கவில்லை ? . பிறகு படத்தில் வரும் நகைச்சுவை தான் படத்திற்கு பலம் , பரோட்டா காட்சி பிரமாதம் . கிஷோரின் திருநெல்வேலி தமிழ் படத்தில் பெரிய தலைவலி உச்சரிப்பு வருவேனா என்கிறது அவருக்கு ! இரண்டாம் பாதியில் கதாநாயகிக்கு பதில் இன்னொரு நாயகியே வந்துவிட்டது போல் உள்ளது. ஜாதி அரசியலை விளையாட்டில் கொண்டு வருவதை பார்த்து சீறுவதும் , ஒன்னும் இல்லாதவர்களை கொண்டு வருவதில் பெருமளவு முனைப்பு காட்டுவதும் என கிஷோர் நடிப்பில் எந்த அளவிலும் குறை வைக்கவில்லை கடைசியில் சோகமா முடிக்கனும்னே பன்னுவானுகளோ ? .
மொத்தத்தில் அசல் கிராமத்தை பார்த்து , புதிய அப்பழுக்கற்ற காற்றை சுவாசித்த உணர்வு . ஏன் என்றால் படத்தை முடித்து ஆனந்த் செலவில் சரஸ்வதி மெஸ்ஸில் உக்காரும் பொழுது "குத்து" படம் பார்த்தேன் .நிம்மதி பெரு மூச்சு நமக்கு வேண்டியது " வெண்ணிலா கபடி குழுக்கள் தான் "

Wednesday, February 4, 2009

Dalits and the 'touch' politics.

Links :
Atrocties meted out on dalits : A collection by myslelf.

Missing dalit and an indifferent CM in haryana : http://www.hinduonnet.com/fline/fl2101/stories/20040116002703700.htm

Khairlanji Massacre...http://flonnet.com/stories/20061201004713000.htm


In North India, some of the worst crimes against Dalits are still being committed by upper caste Brahmins. http://wcar.alrc.net/mainfile2.php/Urgent+Appeals/49/

Official statistics on increasing atrocities : http://www.nacdor.org/TEXT%20FILES/Atrocities.htm

Labour MPs move against 'atrocities' on Dalits : http://www.hinduonnet.com/thehindu/2003/06/08/stories/2003060804800800.htm


‘Atrocities on Dalits continuing’ -In a statement on the eve of World Human Rights Day, Mr. Srinivas said in the last five years, 205 Dalits were murdered, 537 Dalit women were molested and Dalits were attacked in 2,369 incidents.http://www.thehindu.com/2008/12/10/stories/2008121053640300.htm

Anatomy of Atrocities on Dalits in Haryanaby Ranbir Singh, 3 September 2008http://www.mainstreamweekly.net/article899.html

Sunday, January 25, 2009

சிங்களத் சித்ரவதைகள் கொலைகார 'வெள்ளை வேன்'!

பல நாட்கள் தூக்கம் சிரமமாகிப்போனது . மனதளவில் இந்த துயரம் வெகுவாகவே என்னை பாதித்து விட்டது . சொல்லில் அடங்கா வேதனைகள் , நாஞ்சில் நாடன் சொல்வது போல் இந்த காலகட்டங்களில் ஈழத்தமிழனை போல் சித்தரவதைகள் அனுபவித்தவர் யாருமே இல்லை . லசந்தா போன்றவர்களை போற்றி பாராட்ட மனம் எத்தினிக்கும் பொழுது , அவரும் பேரினவாதத்தர்க்கு பலியானார் என்ற உண்மை தீயாக சுடுகிறது . ஓட்டரசியல் என்னும் சாக்கடையில் மாந்தநேயம் என்னும் சொல்லே அர்த்தமற்ற ஒன்றாக ஆகிப்போனது . ஆனந்த விகடனில் இந்த குறிப்பிட்ட கட்டுரை என்னை உலுக்கியது போல் என் வாழ்க்கையில் வேறேதும் என்னை உலுக்கியது இல்லை . சொற்கள் என்றும் என் எண்ணங்களை செரிவர வெளிகொனர்ந்தது இல்லை. இதற்க்கு மேலும் ரத்தம் கசியத்தான் வேண்டுமா ஈழத்தில் ? இன்னும் இரண்டு சாராரையும் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் பச்சை துரோகம் செய்துகொண்டிருக்கும் "தமிழ் இனத்தலைவர்களை " வரலாறு காரி உமிழும் இதோ அந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு

'கிழக்கில் உதயத்தை அனுபவிக்கிறார்கள் தமிழர்கள். வடக்கில் வசந்தத்தைக் காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்!' - இது இலங்கையின் மாட்சிமை தங்கிய அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, ஈழத் தமிழ் மக்களுக்குச் சொல்லும் வரவேற்பு வார்த்தைகள்!அத்தனையும் வெறும் வார்த்தை ஜாலங்கள் என்பதைக் கடந்த வாரம் கொழும்பு வீதிகளில் ஒலித்த மரண ஓலங்கள் நமக்குச் சொல்கின்றன.'என்னுடைய கணவனை ஒப்படை!', 'என் தந்தை எங்கே?' என்ற தட்டிகளுடன் பெண்களும் குழந்தைகளுமாக நின்று கூக்குரல் எழுப்பினார்கள் இலங்கைத் தமிழர்கள்.இலங்கைச் சிறைகளில் நடக்கும் சித்ரவதைகள் உலகக் கொடுமைகளின் உச்சம். வெட்டுக் கத்தியால் கண்களைத் துளைத்தெடுத்து காலில் போட்டு மிதித்து சந்தோஷப்படும் கொடூரம், குட்டிமணி காலத்தில் தொடங்கியது. அடுத்து நகக்கண்ணில் ஊசியை நுழைப்பது, நகத்தையே பிடுங்குவது, தூங்கவிடாமல் அடித்துத் துவைப்பது, பனிக்கட்டியில் படுக்கவைப்பது, தலைகீழாகக் கட்டிவைத்து கீழே தீயைக் கொளுத்துவது, முள் படுக்கையில் உருட்டுவது எனத் தொடர்ந்தது. பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் வார்த்தைகளின் எல்லைகளுக்குள் வராதவை. உடலையும் மனதையும் ஒருசேர நசிக்கும் சித்ரவதைகளை ஈழத்துப் பெண் எத்தனையோ ஆண்டுகளாக அனுபவித்து வருகிறாள். இலங்கையின் எல்லையைத் தனியாகப் பிரித்துத் தமிழீழம் ஆக்கப் போராடும் புலிகளையோ அவர்களுக்கு அடைக்கலம் தரும் ஆதரவாளர்களையோ கைது செய்ய, அவர்களிடம் இருந்து சில தகவலைப் பெற ராணுவம் முயற்சிப்பது பற்றிச் சமாதானம் சொல்லப்படலாம். மாறாக அப்பாவிகளை, அவர்கள் தமிழினத்தில் பிறந்து தொலைத்த ஒரே ஒரு பாவத்துக்காகப் பழிதீர்க்கக் கடத்திச் சென்று சித்ரவதை செய்வதும், அந்தக் குரூர நிமிடங்கள் முடிந்ததும் உயிரோடு கொளுத்திவிடுவதுமான அட்டூழியங்கள் இன்று அதிகமாகி வருகிறதாம். தமிழ் ஆட்களைக் கடத்திச் சென்று காலி செய்வதற்கென்றே கொழும்பில் தனி அணி இருப்பதாக மனித உரிமை அமைப்பினர் சொல்கிறார்கள். இந்த டீம் வரும் வாகனம் 'வெள்ளை வேன்'. ஊருக்குள் வெள்ளை வேன் வந்தாலே, யாரையோ கடத்தப் போகிறார்கள் என்று தமிழர்கள் பதற்றமடைகிறார்கள்; ஓடி ஒளிகிறார்கள். வேனில் சுற்றிலும் கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும். நம்பர் பிளேட் இருக்காது. இதுதான் அந்த எமன் வாகனத்தின் அடையாளம். அதில் இருப்பவர்கள் ராணுவ, போலீஸ் உடைகளில் இருக்க மாட்டார்கள். சாதாரண உடுப் பில், ராணுவ மிடுக்குடன் இருப்பார்கள். 10 பேர் சேர்ந்து ஒருவரை நெட்டி முறுக்கி வேனுக்குள் ஏற்றும்போது, தட்டிக்கேட்க ரோட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். 'வெள்ளை வேன்ல வந்தவங்க எங்க அப்பாவைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க' என்ற புகார் காவல் நிலையங்களில் செல்லாது. தட்டிக்கேட்க யாரும் இல்லாததால், வெள்ளை வேன் கொடூரங்களுக்குத் தடையே இல்லை!இப்படிக் கடத்திச் செல்லப்படுபவர்கள் மீது மேற் கொள்ளப்படும் விசாரணை சித்ரவதைகளின் கதையைக் கேட்டால், ரத்தம் சுண்டி இழுக்கும். அடிக்காமல், உதைக்காமல், அணுஅணுவாகக் கொன்று தீர்க்கிறார்கள். தன் நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட சித்ரவதைகள் பற்றி இலங்கைத் தமிழர் ஒருவர் பகிர்ந்துகொண்ட செய்திகள், 'கற்கால காட்டுமிராண்டித்தனம் இன்னமும் இலங்கையில் மட்டும்தான் கொடூரப் பரிணாமம் பெற்றிருக்கிறது' என்று சொல்லவைக்கிறது.''30 வயது சத்யன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நல்ல வேலையில் இருந்தார். ஒருநாள் அவர் வீட்டுக்கு போலீஸ் அதிகாரிகள் வந்தாங்க. தன் அடையாள அட்டையைக் காண்பித்தார் இவர். 'வழக்கமான சோதனைதான்' என்று சொல்லிவிட்டுச் சென்றது போலீஸ். அடுத்த வாரமே மீண்டும் வந்தார்கள், 'அதிகாரிகள் காத்திருக்காங்க!'ன்னு கூப்பிட்டாங்க. 'போன வாரமே விசாரணை முடிந்துவிட்டதே' என்று சத்யன் சமாளிக்கப் பார்க்க, ராணுவ உடுப்பில் இருந்த ரெண்டு பேர் உள்ளே வந்தாங்க. 'என்னமோ நடக்கப் போகுது' என்று சத்யனுக்குப் புரிஞ்சிருக்கு. உடை மாற்றிக்கொள்ளக்கூட விடாம, லுங்கி, டி-ஷர்ட்டுடன் அழைத்துப்போனாங்க. அப்போ மணி ராத்திரி 9 இருக்கும். வெளியே வந்த சத்யன் முன் பளீரெனக் காத்திருந்தது வெள்ளை வேன்! கண்ணைக் கட்டியபடி 3 மணி நேரப் பயணம். ஒரு கட்டடத்தின் முன் வேன் நிற்க, சத்யனை உள்ளே இழுத்துட்டுப் போனாங்க. அவரை நிர்வாணமாக்கி ஒரு கல்லின் மேல் உட்காரவெச்சு, அவர் கைகளைப் பின்னாடி கட்டிட்டு விசாரணை ஆரம்பிச்சது. 'சொல்லு, உனக்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம்?'னு முதல் கேள்வி. 'நான் கொழும்புல வேலை பார்த்துப் பிழைக்கிறவன். எனக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லை'ன்னு சத்யன் பதில் சொல்ல, அந்தக் கல்லோடு சேர்த்து அவரது ஆண் குறியின் முனையை பூட்ஸ் காலால் நசுக்கினாங்க. ரெண்டு கைகளும் பின்னால் கட்டப்பட்டு இருந்ததால், அவரால எதுவும் செய்ய முடியலை. தனக்கு எதுவும் தெரியாதுன்னு கதறிட்டே இருந்திருக்கார்.'இப்ப உனக்கு ஒரு செகண்ட் கரன்ட் ஷாக் கொடுப்போம். ரெண்டு செகண்ட் கொடுத்தா நீ செத் துடுவ'ன்னு சொல்லிட்டு, மின்சார வயரை சத்யனின் ஆண் குறியில் வெச்சிருக்காங்க. மிருதுவான அந்தப் பகுதி வழியா ஹைவோல்டேஜ் மின்சாரம் உடம்பில் ஊடுருவும் ஒவ்வொரு நொடியும் மின்சார நரகம். கரன்ட் பாய்ஞ்சு உடம்பு மொத்தமும் துடிக்கும்போது, ஒரு ரப்பர் பையை அவரது முகத்தைச் சுற்றிக் கட்டிஇருக்காங்க. அந்தப் பை முழுக்க பெட்ரோல். வலியால் வாயைத் திறந்து ஒருவன் கத்தும்போது, பெட்ரோல் வாசம் பிடிச்சா எப்படி இருக்கும்? அந்தச் சமயம் பெட்ரோல் வயித்துக்குள்ளே போவதையும் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. மொத்த பெட்ரோலும் உள்ளே போயிருச்சு. அடுத்த ஒரு மணி நேரம் அவங்களுக்கு ரெஸ்ட். இவர் வேதனையில் துடிச்சிட்டு இருப்பாரு. ரெஸ்ட் முடிஞ்சு வர்றாங்க. 'சொல்லு, கொழும்புல எங்கெல்லாம் குண்டு வெச்சிருக்கீங்க?' - இது ரெண்டாவது கேள்வி. 'எனக்குத் தெரியாது'ன்னு இவர் சொல்லவும், கால்ல கயித்தைக் கட்டி தலைகீழாத் தொங்கவிட்டிருக்காங்க. லிட்டர் லிட்டரா பெட்ரோல் குடிச்சவரைத் தலைகீழாக் கட்டித் தொங்கவிட்டா எப்படி இருக்கும்? கொஞ்சம் கொஞ்சமா வாய், மூக்கு வழியா பெட்ரோல் ஒழுகுது. இப்படியே கொஞ்ச நேரம் போயிருக்கு. அப்புறம் அவரைக் கீழே இறக்கி கை ரெண்டையும் பின்னாடி வெச்சு, ரெண்டு பெருவிரலை மட்டும் சேர்த்து கயித்துல முடிச்சுப் போட்டு மேலே தூக்கியிருக்காங்க. பின்பக்கம் கையை வளைச்சாலே வேதனை தாங்க முடியாது. ரெண்டு பெருவிரல் பலத்துல மொத்த உடம்பும் அந்தரத்துல தொங்கிட்டு இருந்தா, எப்படி இருக்கும்? உடல் கனம் தாங்க முடியாம ரெண்டு பெருவிரலும் ஒடிஞ்ச பிறகுதான், அவரைக் கீழே இறக்கியிருக்காங்க. அதுக்கு மேலயும் கஷ்டத்தைத் தாங்குற சக்தி அவர் உடம்புல இல்லை. உயிர் எங்கோ ஒளிஞ்சுட்டு இருக்குற பிணமாக் கெடந்தார்.திரும்ப வந்தவங்க ரெண்டு கையையும் கட்டி மறுபடியும் தூக்குறாங்க. அடுத்து என்ன பண்ணுவாங்கன்னு யோசிக்கிற மனநிலையில்கூட அவர் இல்லை. அவரோட ஆசன வாயில் பி.வி.சி. பைப்பைத் திணிச்சிருக்காங்க. வேதனையில அலறியிருக்கார். அடுத்து இரும்பு வேலிக் கம்பியைக் கையில் எடுத்திருக்காங்க. (இதற்கு மேலான விவரங்கள் மனவலிமை கொண்டவர்களையும் நொறுங்கச் செய்யும் என்பதால், அவற்றைத் தவிர்க்கிறோம்!) இப்படி ரெண்டு ராத்திரிகளைச் சோறு தண்ணி இல்லாமக் கழிச்சிருக்கார். படுக்கவும் முடியாது உட்காரவும் முடியாது. குப்புறப் படுத்தா கரன்ட் ஷாக் கஷ்டம், நிமிர்ந்து படுத்தா வேலிக்கம்பி வேதனை. என்ன பண்ண முடியும்? ரெண்டாவது ராத்திரி அவருக்கு லேசாத் தூக்கம் வர்ற மாதிரி இருந்திருக்கு. அப்ப ஜில்லுனு ஐஸ் தண்ணியை ஊத்தியிருக்காங்க. தூக்கம் தொலைஞ்சு வேதனை வெடிச்சிருக்கு. எழுப்பி 'ஒரு நாள் ரெஸ்ட் எடு'ன்னு சொல்லி ஒரு இடத்துல வெச்சுப் பூட்டியிருக்காங்க. சவப்பெட்டி அளவுக்கான செல் அது. ஒரு ஆள் உள்ளே படுத்துக்கலாம். அசைய முடியாது, புரண்டு படுக்க முடியாது. இந்த மாதிரியான செமிட்டிக் செல் அங்கே நிறைய இருக்காம். படுத்திருக்கும் தளத்தில் கூர்மையான கல்லும் கண்ணாடித் துகள்களும் கொட்டிக்கிடக்குமாம். இந்தச் சித்ரவதையைத் தாங்கி உயிர் மிஞ்சுமா என்ன? வெள்ளை வேன்ல ஏறாததால நான் உங்க முன்னாடி பிழைச்சுக் கெடக்கேன்!'' என்று வேதனையும் விரக்தியுமாக வெதும்பினார் அவர்.இன்னமும் வார்த்தைகளில் வடிக்க முடியாத சித்ரவதைகள், ஹிட்லரின் நாஜி கேம்ப் கொடுமைகளைவிடக் கொடூரமானவை. வெள்ளை வேன் பயணம் மின்சார அடுப்பில் முடிவதாக மனித உரிமை அமைப்பினர் பயமுறுத்துகிறார்கள். இதில் பெண்கள் என்றால், பாலியல்ரீதியான சித்ரவதைகளுக்கும் அதிக முனைப்பு காட்டப்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 'கொழும்பில் புலிகளின் மனித வெடிகுண்டுகள் நடமாடுகின்றன, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் புலிகள் இன்னும் 'கெரில்லா' தாக்குதலை நடத்தி வருகிறார்கள்' என்பதுதான் தமிழ் இளைஞர்கள் மீதான இந்த விசாரணைகளுக்கான காரணங்கள்.காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க கடந்த ஆண்டு ஜனாதிபதியின் ஆணையக் குழு உறுப்பினர் ராஜித் சேனாரட்சணா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இது போன்ற சித்ரவதைகள் நடைபெறுவதாகச் சொல்லப்படும் பூசா முகாமுக்கு ராஜித் சென்றார். அங்கு தமயந்தி என்ற பெண் தனது 6 மாதக் குழந்தையுடன் இருந்தார். 'என் வீட்டுல துப்பாக்கி இருந்ததாச் சொல்லி இங்கே அடைச்சிருக்காங்க. நான் துப்பாக்கியைப் பார்த்ததே இல்லை' என்றார். இரண்டு செல்போன் வைத்திருந்தார், அடையாள அட்டையில் கிளிநொச்சி என்று இருந்தது போன்றவை அவர் கைதுக்கான காரணங்கள். இதனால் எல்லாம்தான் உலகில் இராக்குக்கு அடுத்தபடியாக மனித உரிமைகளை மீறும் இரண்டாவது நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டு உள்ளதுஇது போன்ற தகவல்களைத் திரட்டி வருகிறார் பி.யூ.சி.எல். அமைப்பின் தலைவர் வி.சுரேஷ். ''மனித உரிமை பிரச்னை தொடர்பாக உலகில் அதிக அதிகாரம்கொண்ட அமைப்பு ஐ.நா-வின் மனித உரிமை கமிட்டி. இதன் தலைவரான லூயி ஆர்பர், கனடா நாட்டின் சுப்ரீம் கோர்ட் நீதிபதி. அவர் இலங்கை வந்தபோது, பல இடங்களைப் பார்க்க அந்த நாடு அவரை அனுமதிக்கவில்லை. 'மனித உரிமை மீறல்கள் இங்கு நிறுவனமயமாகிவிட்டன' என்று அவர் அறிவிக்கவும், அவரையே பயங்கரவாதி என்று இலங்கை சொல்லிவிட்டது.ஐ.நா-வின் மனித உரிமைப் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் இலங்கை போட்டியிட்டது. 'இலங்கைக்கு வாக்களிக்கக் கூடாது' என்று, அங்கிருந்தே செயல்படும் 8 மனித உரிமை அமைப்புகள் அனைத்து நாடுகளுக்கும் கடிதம் அனுப்பின. நோபல் பரிசு பெற்ற டெஸ்பான்ட் டுட்டு (தென் ஆப்பிரிக்கா), ஜிம்மி கார்க் (அமெரிக்கா), அடால்போ (அர்ஜென்டினா) ஆகிய மூவரும் அதே காரணம் சொல்லிக் கடிதங்கள் அனுப்பினார்கள். ஆனால், இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வாக்கு அளித்தது. ஆனாலும், இலங்கை தேர்தலில் தோற்றது. இலங்கை அரசாங்கத்தின் இன அழிப்பு, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், சிங்களமயமாக்கல், அடையாளங்களை அழிப்பது போன்றவற்றுக்கான ஆதாரங்களைத் திரட்டி, உலகளாவிய பிரசார இயக்கத்தைத் தொடங்க எங்கள் அமைப்பு முடிவெடுத்துள்ளது. இவை அனைத்தையும் ஐ.நா. அமைக்கும் கமிட்டி விசாரணை நடத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும்!'' என்கிறார் சுரேஷ்.'பேயாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்' என்பதற்கு நிகழ்கால உதாரணமாகத் திகழ்வதில், புத்தர் வாழ்ந்த பூமிக்கு என்ன பெருமையோ?

நன்றி : ஆனந்த விகடன் (21.01.2009)