Wednesday, March 4, 2009

Possessiveness = புலவி நுணுக்கம்

எனக்கு சின்ன வயதில் வரும் திருக்குறள் பாடம் மிகவும் சிரமான ஒன்று , மனப்பாடம் செய்வது என்பது இன்றளவும் எனக்கு ஆகாத காரியம். ஆதலால் , அவ்வளவு ஆர்வம் இல்லை.

ஆனால் , பொன்னீலன் அண்ணாச்சி ( சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் , எங்கள் குடும்ப நண்பர் ) காரைக்குடி வந்த பொழுது அவருக்கு மிகவும் புடித்த இலக்கியம் திருக்குறள் என்றார். தினம் ஒரு திருக்குறள் படித்து தான் பாரேன் என்றார் , கொஞ்சம் ஆர்வம் தூண்டிய நிலையில் தமிழ் வேட்பனின் எளிய தெளிவுரயோடு ஒரு சின்ன புத்தகம் வாங்கினேன் . எடுத்தவுடன் அருளுடைமை , தவம் , துறவு , ஹ்ம்ம் வேலைக்கு ஆகாது என்று மூடிவிட்டேன். கொஞ்சம் நாள் கழித்து தான் , காமத்துப்பாலில் ஆர்வம் திரும்பியது. ஆகா வள்ளுவன் பின்றார்யா என்று தோன்றியது அன்றிலிருந்து தான். காமத்திலும் காதலிலும் இவரை அடித்து கொள்ள , உலக எழுத்தாளர்கலில் எவரும் உண்டோ ? உலக எழுத்த நான் என்ன கரைத்தா குடிச்சிருக்கேன்? , இல்லை தான் , ஆனால் " உலக இலக்கியங்களில் வள்ளுவம் " என ஜீவா பேசியதை பற்றி அண்ணாச்சி மிகவும் சிலாகித்து பேசுவார் .


விஷயத்துக்கு வருவோம் , இந்த பெண்கள் வட்டத்தில் ( நான் ரொம்ப உள்ள எல்லாம் போனதில்லைங்க )Possessiveness என்ற ஒரு சொல்லாடல் உண்டு . இதை கேட்டவுடன் அர்த்தம் சற்றே விளங்காமல் oxford ஐ புரட்டும்போது மண்டையில் தட்டினான் நண்பன் ஒருவன் , அகராதியில் அர்த்தம் கண்டுகொள்ள முடியாது என திடமாக கூறினான், அனுபவசாலி வேறு. சரி என்று அமைதியாக விட்டு விட்டேன் . காமத்துப்பாலில் , புலவி நுணுக்கம் படிக்கும் பொழுது தான் ஆச்சரியம் அப்பி கொண்டது . அட , இது தானா அது என்று ? நாஞ்சில் நாடனும் என்னுடைய favorite குறளை மேற்க்கோள் காட்டிய பொழுது , மேலும் ஆச்சரியம்.முடிந்தவரை எனது உரையை கொடுக்கிறேன் எனக்கு பிடித்த இந்த அதிகாரத்திற்கு .


குறள்: பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு.

எனது புரிதல் :பரந்த மார்பை உடையவனே , பெண்ணாக பட்டவர் எல்லாருமே உனது மார்பை பொதுவென எண்ணி கண்ணாலேயே உண்பர் , ஆகையால் நான் உன் பரந்த மார்பை தழுவ மாட்டேன் .

குறள்:ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து.

எனது புரிதல் : காதலரோடு ஊடியிருக்கும் பொழுது தும்மினேன் , நீடுடி வாழ்க என்று சொல்லி ஊடலை மறப்பார் என்ற நப்பாசையில்.

குறள்:கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று.

எனது புரிதல் : வளையமாக பூவை நான் உடம்பில் சூடினாலும் , இதை அடுத்த பெண்ணிடம் காட்டி பிராக்கட் போட முயற்சிக்கிறாய் என்று கோபப்படுவாள்

குறள்:யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று.

எனது புரிதல்: எனக்கு மிக மிக பிடித்த குறள். விளக்கம் என்னவென்றால் , யாரை விடவும் நாம் தான் காதல் மிக்கவர் என காதலன் கூறினானாம். அந்த "யாரை விடவும்" என்பதில் யாரை குறிப்பில் உணர்த்துகிறாய் என காதலி ஊடினாள் .

குறள்: இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்.

எனது புரிதல்:நாம் இந்த பிறவியில் பிரியமாட்டோம் என்றேன் , அப்போ அடுத்த பிறவியில் ? என்று கேட்டு கண்ணீர் விட்டாள்

குறள்: உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்.

எனது புரிதல்:உன்னை நினைத்தேன் என்றானாம் காதலன். மறந்ததால் தானே நினைத்தீர் என்று கோபப்பட்டு தழுவ வந்தவள் தழுவாமலே போனாளாம் .
P.S : எத்தன சினிமா பாட்டு/ வசனம் இதுலேந்து காப்பி அடிச்சிருக்காங்க , கணக்கே இல்லை


குறள்:வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று.

எனது புரிதல்: நான் தும்மினேன் , நெடுநாள் வாழ்க என வாழ்த்தினாள் ! அப்பறமா ,யாரோ நினைத்ததால் தான் தும்மல் வருகிறது என கோபப்பட்டாள்

குறள்: தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று.

எனது புரிதல்:வந்த தும்மலை கூட அவளுக்கு அஞ்சி அடக்கினேன் , அதையும் இனம் கண்டு உம்மவள் நினைத்ததை மறைக்க பார்கிறீர் என அழுதாள் .

குறள்: தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று.

எனது புரிதல்:ஊடலில் இருப்பவளை கஷ்டப்பட்டு சிரிக்க வைத்தேன் , இப்படித்தானே பிற பெண்களையும் சிரிக்க வைப்பீர் என மீண்டும் ஊடினாள்.

குறள் : நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று.

எனது புரிதல்: அவள் அழகை வியந்து நோக்கினேன் , யாரோடு ஒப்பீடு செய்து பார்க்கிறீர்கள் என சினம் கொண்டாள் !

5 comments:

Sathish Kumar Subramani said...

காமம் அப்படீங்கிறது ஒரு கெட்ட வார்த்தையாவே ஆயிடுச்சு,
ஒரு பெண்ணோட உணர்வுகள யாரும் இவ்ளோ யதார்த்தமா, தைரியமா வெளிபடுத்துறது இல்ல...
பெண், அப்படீனா, சக்தி, பொறுமை, கற்பு, நிலம், ஆறு, இப்படி பெண்ணடிமைய மேலும் உறுதிப்படுத்துற எழுத்துக்கள தான் நம்ம ஆளுங்க கையாண்டு பழகிட்டாங்க...
பெண்ணியத்த கூட வள்ளுவர் எழுதி இருக்காருனா, கண்டிப்பா, அவருக்கு என் சாமியார் உருவம் அப்படீன்னு தான் கேக்க தோணுது... அது கலைவாணி பயங்க வேஷம்... இன்னிக்கு வரைக்கும் இது பொருந்துமானு எனக்கு தெரியல, எனக்கு அனுபவம் இல்ல. ஆனா, பார்த்த அனுபவங்கள், பொருந்தும்னு தான் சொல்ல தோணுது... நன்றி பிரகாஷ்...

Gopalan Ramasubbu said...

தினம் ஒரு திருக்குறள் படிக்க சொன்ன பொன்னீலன் அண்ணாச்சி..திருக்குறளை அடிபிறளாமல் எழுதப்பழகவும் சொல்லியிருக்கலாம் :).

Good post!

Prakash said...

தட்டச்சு பிழை , திருக்குறளில் வர வாய்ப்பே இல்லை கோப்ஸ் , பண்ணது வெட்டல் ஒட்டல்கள் . ஏதாது இருக்கா என்ன ?

சக்தி said...

பிரகாஷ்,

’சுடும்’ என முடியும் குறளை அடி பிறழாமல் எழுதுக.

பள்ளிப் பருவத்தில் வினாத்தாளில் இந்த வகையான கேள்விகளைப் பார்த்த நியாபகம் உள்ளதா?

ஒன்னேமுக்கால் அடி குறளை ஒரு அடியாக்கிவிட்டீர்கள். திருக்குறளை எழுதும்போது முதல் அடியில் நான்கு சொற்களும் இரண்டாம் அடியில் மூன்று சொற்களையும் எழுத வேண்டும். வெட்டி, ஒட்டினாலும் மேற் கூறியபடிதான் இருக்க வேண்டும்.

எந்த ஒரு செய்யுளையும் மேற்கோள் காட்டும்போதுகூட ”அடி பிறழாமல்”தான் எழுத வேண்டும். பொன்னீலன் அண்ணாச்சி சொல்லாமல் விட்டதாக கோபாலன் இதைத்தான் சொல்கிறார்.

Prakash said...

இம்புட்டு விஷயமா ? அடிக்குள் நான்கு மிச்சத்தில் மூன்று ஹ்ம்ம் சிரமம் தான். அடியேனுக்கு தெரிந்ததெல்லாம் காமத்துபாலின் சாராம்சம் மட்டுமே