Tuesday, August 18, 2009

ஆட்டம் க்ளோஸ்



தோழர் ரமேஷ் என்னை கேட்டவுடன் தான் நான் செய்வதே எனக்கு உரைத்தது."என்னடா தம்பி யார் படிக்காட்டியும் பதிவு அடிக்கடி போடறியே , போறதுக்குள்ள நெறைய எழுதனும்னு வேண்டுதலா? "



ஆமாம்ல! இதோ நாளும் வந்துவிட்டது. இனி எனக்கு இணையதள ஆக்சஸ் கிடைப்பது அரிது ஒரு மாதத்திற்கு. என்னை நம்பி ஒருத்தன் படிக்க வேற கூப்புடுகிறான். முதல் முறை விமானப்பயணம் , அட பக்கத்துல போய் கூட பார்த்ததில்லை. நான் சமைக்கிறேன் பேர்வழி என்று அப்பாவை தினமும் ஹோட்டலில் சாப்பட வைக்கிறேன். கோவில்பட்டியில் உச்சி வெயில் மண்டையை பிளக்க கிரிக்கட் மைதானத்தில் நின்ற பொழுதுகள் எல்லாம் சொர்க்கம் , வியர்வையும் வெயிலும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஊட்டி கூட என்னால் பொருத்து கொள்ள முடியாது , பிரான்சில் குளிர் காலத்தில் போகிறேன். போலந்து இதைவிட மோசமாமே? செத்தேன்!

பாட புத்தகங்களை தொட்டு சிலபல மாதங்கள் ஆகிறது. ஒரு மன்னாங்கட்டியும் நினைவில்லை. திகட்டும் அளவிற்கு புத்தகங்கள் படித்தேன் ( பாட பொஸ்தகம் அல்ல ) , திகட்டாத அளவிற்கு பதிவுகள் படித்திருக்கிறேன்,நிறைய படங்கள் பார்த்தேன் . கல்லூரி முடித்து விட்டு மேற்படிப்புக்கு போகும் இந்த மூன்று மாத இடைவேளையை முழுவதும் வேலை எதுவுமே பார்க்காமல் சந்தோஷமாக இணையத்தில் கழித்திருக்கிறேன்.
பதிவுலகம் எனக்கு இன்னும் பிடிபடுவேனா என்கிறது ! ஆண்ட ( கதிரவன்) எனக்கு அறிமுகப்படுத்தியது இது . முதலில் நான் படித்த தளம் லக்கிலுக் , அடுத்து அதிஷா. அப்பொழுது எல்லாம் பின்னூட்டம் என்று ஒன்று இருக்கிறது என்றே எங்களுக்கு தெரியாது. ரித்தீஷ் பற்றி ஒரு பதிவு அதிஷா போட்டிருந்தார் , ஆண்டை எங்கள் எல்லாரையும் கூப்பிட்டான் லேப் முடிந்ததும் உக்கார்ந்து படித்தோம்.கூட்டம் கூடியதால் அவன் மட்டும் உரக்க வாசிக்க மற்றவர் அனைவரும் சிரித்து கொண்டு இருந்தோம்.
என் கல்லூரியில் , ஆண்டை ஷரீப் இருவர் தான் தொடர்ந்து வலைத்தளங்களை படித்து வருவார்கள். பல எழுத்தாளர்கள்களுக்கு தங்கள் ரசிகர்களை பற்றி தெரிவதே இல்லை,தெரிவதற்கு வாய்ப்பும் இல்லை . கடை நிலை ரசிகனுக்கு எழுத்தின் மீதும் எழுத்தாளர்கள் மீதும் பிரமிப்பு அவ்வளவு ஜாஸ்தி. மருதனின் புத்தகங்களை நானும் ஆண்டையும் பிரித்து வைத்து வாங்கி படிப்போம். இருவரும் ஒரே புத்தகம் வாங்காமல் இருவேறு புத்தகங்கள் வாங்கி எக்ஸ்சேஞ்சு செய்து படித்து கொள்வோம். காரைக்குடி புத்தக கண்காட்சிகள் ! மிஸ் யு ஆண்ட.

தமிழ் வலைத்தளம் அறிமுகமே இல்லாதவர்களுக்கு நான் முதலில் இதை தான் படிக்க குடுப்பேன். இவரின் அனைத்து பதிவுகளையுமே படித்திருக்கிறேன் :). சேடன் பகத் புத்தகம் ஜாலியாக படித்தது , மஸக்கலி பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் , தில்ஷன் கேப்டனாக இருந்த மேட்சை நினைத்து நினைத்து சிரித்திருக்கிறேன் , உலக திரைப்படங்கள் , பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் , மைக்கேல் ஜாக்சன் , சச்சின் காஸ்பரோவிச் பந்தில் அடித்த சிக்ஸ் என அனைத்தும் என் ரசனைக்குரிய ஏரியா.

நான் என் வாழ்கையிலேயே கதைகள் எழுதியதில்லை. உரையாடல் , உயிரோடை போட்டிகளுக்காக தான் கதைகள் எழுதினேன்.நடத்தியவர்களுக்கு நன்றிகள் பல.நான் அடிக்கடி படித்த வலைத்தளத்தில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக என் அம்மா காலத்து நபர். முந்திய தலைமுறைக்கு தான் எவ்வளவு ரசனை இருந்திருக்கிறது? புத்தகங்கள் , ஜென்சி , இளையராஜா இசை , கவிதைகள் ஹ்ம்ம் என் கல்லூரியில் எத்தனை பேர் புத்தகங்கள் படித்திருக்கிறார்கள்?

இவ்வளவு நீண்ட மொக்கை , நான் இந்த பக்கம் தலை வைத்து படுக்க இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்பதை தெரிவிப்பதர்க்கே. அதற்குள் பதிவுகளை படிக்க முடிந்து பின்னூட்டம் போட முடிந்தால் சந்தோசம்.

பி.கு : இந்த மொக்கையை திரட்டிகளில் சேர்க்க வேண்டுமா என்ன?








Monday, August 17, 2009

சைக்கோ கொலைகாரர்கள் - ராபர்ட் பிக்டன்


எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு , வெளியே சொல்ல முடியாததும் கூட. எனக்கு மிகவும் போர் அடிக்கும்பொழுது எல்லாம் , உலகின் மோசமான சைக்கோ கொலைகாரர்களின் வரலாற்றை படிப்பேன். அவர்களில் பால்ய பருவம், அவர்களை கூசாமல் கொலை செய்ய தூண்டிய காரணிகள் , அவர்களின் செக்ஸ் வேக்கைகள் , அவர்கள் கொலை செய்யும் விதம் , கொலை என்றால் தென்னன்கொலையா என்னும் ரேஞ்சுக்கு அதை மறந்து இயல்பு வாழ்கை வாழும் குரூரும் என்று அனைத்தையும் படிப்பது எனக்கு பிடித்தமான விடயம். ( நீ உருப்டாப்புல தான் என்று கூறும் உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது )



சிலரை பற்றி படிக்கும் பொது உறைந்து போய் உக்காந்திருக்கிறேன். பயம் என்னும் ஒற்றை சொல்லை உடைத்து விட்டால் , கொஞ்சம் அவர்கள் உளவியல் சிந்தனைகளுக்கு உள்ளே போய் பார்த்தால் கொலை நடுங்கிவிடும். மனிதருக்குள் மிருகம் படித்ததிலிருந்து எனக்கு இந்த பழக்கம் தொற்றி கொண்டது என்பதே உண்மை.




வான்கோவரில் பட்டப்பெயருடன் ஒரு ஊர் உண்டு , " லோ ட்ராக் " என்று அந்த மாவட்டத்தை அழைப்பார்கள். ஒரு முறை அங்கே சுற்றி நடந்துவந்தீர்கள் என்றால் , காலுக்கடியில் உபயோகிக்கப்பட்ட காண்டம்கள் , தூக்கி எறியப்பட்ட சிரிஞ்சுகள் என்று அனைத்து ஆரக்யோமான விஷயங்களும் படும். பதினோரு வயதில் கூட அங்கு விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை நீங்கள் காணலாம். 1995 இல் ஒரு புள்ளி விவரத்தை பார்த்த பொழுது லோ ட்ராக்கில் இருக்கும் பெண்களில் 73% விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள் .1998 இல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தில் அங்கே ஒரு நாளைக்கு ஒரு நபர் இறந்துகொண்டிருந்தார் , போதை பொருளுக்கு அடிமையாகி , எய்ட்ஸ் வந்து , கொலை செய்யப்பட்டு.



ஆம் கொலை செய்யப்பட்டு , ஆனால் இதை கண்டுபிடிப்பதற்குள் கானடா போலீஸ் செத்து சுண்ணாம்பு ஆகிவிட்டது. காணாமல் போனவர்கள் பெயர்விவரம் மற்றும் நாட்கள் விவரம் இங்கே எழுதினேன் என்றால் எனக்கு தாவு தீர்ந்துவிடும். எண்களை போட்டாலே தலை சுத்தும் , எண்பதுகளில் ஆரம்பித்தது 2002 வரை நிற்கவே இல்லை. எப்படி எப்படி எல்லாமோ ஒரு லிஸ்ட் தயாரித்தார்கள் 98 இல் மொத்தமாக ஒரு ஐம்பத்து நான்கு பெண்களை காணவில்லை ( காணலைன்னா 80களில் இருந்து காணவில்லை என்பதிலிருந்து நேற்று காணமல் போனவர் வரை) கிம் ரோசொமோ என்பவர் முதலில் திருவாய் மலர்ந்தார் " ஒரு வேலை இதெல்லாம் ஒரே ஆளின் கைவண்ணமாக இருக்கலாமோ? "



ஆதாரம்? சாட்சிகள்? ஒரு மண்ணும் கிடைக்கவில்லை. எந்த விபச்சாரியும் சாட்சி சொல்ல பயந்தார்கள் . தானும் மாட்டிக்கொண்டால்? . 98 இல் ஒரு மிக மிக முக்கியமான சாட்சியம் சிக்கியது. "Piggy Palace Good Times Society என்று இவனுங்க நைட்டு பெண்களை வெச்சு கூத்தடிக்கரானுவோ எசமான். அதுலயும் ராபர்ட் பிக்டனை பார்த்தாலே சரி இல்லை. நேத்து கூட அவன் பண்ணையில் ஒரு பண்ணி என்னை துரத்தி துரத்தி கடிக்க வந்துச்சுனா பார்த்துகோங்களேன் , பண்ணிங்க எதுக்கு எசமான் மனுஷங்கள கடிக்கணும் ? " என்றார் ஹிச்காக்ஸ் என்னும் பண்ணை வேலையாள்.



ஏற்கனவே ஒரு முறை ஒரு பெண்ணை கொலை செய்ய முயன்றதற்கு பிக்டனை போலீஸ் பிடித்தது . போதிய சாட்சியங்கள் இல்லாததால் தப்பித்து விட்டான். அப்பவும் கொஞ்சம் கூட சூதானம் இல்லாமல் இருந்தார்கள் கானடா போலீஸ் , நாங்க பிக்டனின் பண்ணையை தேடினோம் ஒன்றுமே இல்லையே என்றார்கள் போலீஸ்.


2002 இல் அது நடந்தது. அப்பொழுது பிக்டன் கம்பி எண்ணி கொண்டிருந்தான், அதுவும் கொலை குற்றத்திற்காக இல்லை. எதோ தனது பண்ணையில் இருக்கும் நிலத்தகராரால். முதல் முறை போலீஸ் வாய் திறந்தது , ஆதாரங்கள் இரண்டு பெண்மணிகளின் மரபணுக்களுடன் ஒத்து போகிறது. அந்த பண்ணையை சோதனையிடுகிறோம் . கனடா செய்தித்தாள் ஒன்று அலறியது " ஐம்பது பெண்கள் பன்றிகளுக்கு இரையானார்களா? " இதற்க்கு நடுவில் பன்றி மாமிசத்தில் மனித உடல் உறுப்புகள் கலந்திருக்கின்றன என செய்தி காட்டுத்தீயாக பரவியது. ஒரு நிமிடம் உறைந்து போய் உட்காந்தார்கள்.



முதலில் இரண்டு கொலை குற்றங்களில் முதல் நிலை குற்றவாளியாக நிறுத்திய போலீஸ் , பிக்டன் மீது முப்பது கொலை குற்றங்களை சுமத்தியது. அவர் பண்ணையில் இருந்த குளிர் சாதன பெட்டியிலிருந்து இரண்டு தலைகள் , கொஞ்சம் விரல்கள் கொஞ்சம் வேறு உடல் இருப்புகள் கண்டெடுக்கப்பட்டன. 2004 ஆம் ஆண்டு கிட்ட தட்ட முடிவுக்கு வந்தார்கள் , மொத்தம் 102 கைரேகை நிபுணர்கள் கிட்ட தட்ட 32 தடவியல் நிபுணர்கள் , கிடைத்த ஆதாரங்களை கொண்டு காணமல் போன முப்பது பெண்களின் மரபணுக்களோடு எங்களால் தொடர்புபடுத்த முடிகிறது என்றார்கள். கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆதாரங்கள் , அறுபது சாட்சிகள் , இரண்டுலக்ஷத்தி முப்பதாயிரம் தடயங்கள், மண்டை ஓடு , ரத்த கரைகள் , பற்கள் , எலும்புகள் இன்னும் இன்னும்.


சாட்சியங்களை நீதிமன்றத்தில் காட்டும் பொழுது பெண் வக்கீல்கள் வாந்தி எடுக்க ஆரம்பித்தார்கள் . 22 காலிபர் துப்பாக்கி ஒன்று டில்டோவுடன் ( அர்த்தம் தெரியாவிடின் விட்டு விடுங்கள் :P ) சிக்கியது.கண்ணால் பார்த்த சாட்சியங்களிலேயே முக்கியமாக கருதப்பட்டது பெல்வுட் , பிக்க்டன் தனது கொலைகளை எப்படி நிறைவேற்றுவான் என்று தனக்கு நடித்து காட்டியதாக சொன்னான்.



" அவர்கள் கைகளை கட்டி போட்டு , டாகி முறையில் உறவு கொண்டு பின்பு கொலை செய்து தனது பன்றிகளுக்கு உணவாக்கி விடுவான் . பெண்களை வசியம் செய்ய அவர்களுக்கு பிடித்த போதை பொருளை பிக்டன் கொடுத்தான் " என்றார். அவரே ஒரு போதைப்பொருள் அடிமை ஆதலால் இத்தனை நாள் அதை போலீசிடம் சொல்லவில்லை என்றும் சொன்னார்.



நாற்பதாயிரம் புகைப்படங்கள் , அருபதனாயிரம் ஆராய்ச்சி கூட சாம்ப்லிகள் என கஷ்டப்பட்டு போலீசார் முடிவுக்கு கொண்டு வந்த வழக்கில் அரசாங்கத்தின் செலவு நூறு மில்லியன் டாலர். கானடாவில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதால் , வாழ்நாள் முழுதம் சிறை தண்டனை அனுபவித்து வருகிறான் பிக்டன்.



Thursday, August 13, 2009

தமிழ் சினிமா இசையும் இந்தி பாடகர்களும்

அடித்து ஆடி கொண்டிருக்கிறார்கள் ஹிந்தி பாடகர்கள்.( நான் சிறு வயதிலிருந்தே பாடகிகளின் பெயர்களை நினைவில் வைத்து கொள்வதில்லை , ஆக பதிவு முழுவதும் பாடகர்களை பத்தி தான். ).


ஒரு கமர்ஷியல் சினிமா பாடல்கள் ரசிகனாக இதை பதிவு செய்கிறேன். "பருவா இல்லை" என்று கொல்வதில் எல்லாம் எனக்கும் சம்மதம் இல்லை தான். இருந்தும் தமிழ் சினிமாவில் அதிகம் ஹிந்தி பாடகர்கள் இன்றளவிலும் பாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஹரி சரண் , நரேஷ் , கார்த்திக் , திப்பு , ஹரீஷ் ராகவேந்தரா போன்ற தமிழ் பாடகர்கள் இருந்தும் சில சமயம் ஹிந்தி பாடகர்கள் பாடிய பாடல்கள் ஹிட் ஆவதால் தொடர்ந்து அவர்கள் பாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.


1. உதித் நாராயணன் :
தமிழை மொத்தமாக கொலை செய்கிறார். ழ வருவேனா என்கிறது , இருந்தும் பாடிக்கொண்டே தான் இருக்கிறார். ஏன் ? தோரணையில் " வா செல்லம்" கேட்டீர்களா? அதை தமிழ் பாடகர் ரஞ்சித் கூட பாடி இருந்தார் இருந்தும் திரையில் ஒலித்தது உதித் குரல் தான். கீழ் நோட்ஸில் உதித்துக்கு உள்ள கம்பீரமான குரல் வளம் ஒரு காரணம். " சஹாரா " போன்ற பாடல்களில் எந்த உயரங்களையும் அனாயசமாக தொட்டு விட்டு வந்து குழைத்து பாடுவார்.


இவர் பாடிய ஹிந்தி பாடல்களிலேயே எனக்கு " ஏ தாரா " சுவதேஷில் உள்ள பாடல் மிகவும் புடிக்கும். தமிழில் ஒரு ஹிந்துஸ்தானி சாயல் பாடல் வந்தாலே யுவன் உதித்தை கூப்புடுகிறார் , " எங்கேயோ பார்த்த மயக்கம்" ஒரு சிறந்த உதாரணம். ஐம்பதற்கும் மேற்பட்ட பாடல்களை உதித் தமிழில் பாடி இருப்பார்.


2. சோனு நிகம் :



தலை இன்னும் தமிழில் அதிகம் பாடவில்லை. " விழியில் என் விழியில்" என்று கிரீடத்தில் தெளிவான தமிழுடன் ஒரு குரல் கேட்டதல்லவா? சோனுவின் குரல் தான். ஹிந்தியில் இவர் பாடிய பாடல்களுக்கு எல்லாம் கண்மூடித்தனமான வெறியன் நான். எந்த சிரமமான பாடல்களையும் சொடுக்கு போடும் நிமிடத்தில் சோனுவால் பாட இயலும். இவர் இதற்க்கு முன்னால் பாடிய ஒரே தமிழ் பாடல் " வாராய் என் தோழி " ஜீன்ஸ் படம்.


3.ஜாவெத் அலி :




திரும்பவும் உச்சரியுங்கள் , ஜாவெத் அலி அதே தான். இந்த பெயரை இனி எந்த திரை இசை ரசிகனாலும் புறக்கணிக்கவே முடியாது. மச்சான் குசாரிஷ் கேட்டியா டா ? சோனு சோனு தான் டா என்றேன் , இணையத்தில் தேடி நண்பன் ஒருவன் பெயர் சொன்னான் , பாடியது யாரோ ஜாவெத் அலியாம் டா.


ஹிந்தியில் பல ஹிட் பாடல்கள் , " து முஸ்குரா " , " ஜஷ்னே பகார் " போன்ற சொக்க வைக்கும் மேலோடிகள். தமிழில்? குங்குமப்பூவும் கொஞ்சுபுராவும் படத்தில் "சின்னஞ்சிறுசுகள்" , சர்வத்தில் "சிறகுகள் நீளுது" , வாமனனில் " ஏதோ செய்கிறாய்" என்று இவர் பாடிய அனைத்தும் எனக்கு பிடித்திருக்கிறது. அதிலும் முஸ்குரா பாடலில் என்னமா அசத்தி இருக்கிறார்? வளமான எதிர்காலம் உண்டு ஜாவதுக்கு .

4. சுக்விந்தர் சிங்க் :



தக்க தையா என்று அலறிய குரல். இவரது பல இந்தி பாடல்கள் பிரமிப்பூட்டும் நுணுக்கம் கொண்டவை. இவரே இசையமைத்த நஷா ஹி நஷா அருமையான பாடல். இவர் பாடிய பல பாடல்கள் இந்தியில் பட்டையை கெளப்பி இருக்கின்றன. தமிழில் கம்மி தான் போல.டிஷ்யூம் படத்தில் இருந்து " கிட்ட நெருங்கி வாடி " தான் லேட்டஸ்ட் .


5.கிருஷ்ணா குமார் குனாந்த் :



கேள்விப்பட்டது இல்லையா? கே.கே என்றால் தெரியும். பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மன்மதனில் உள்ள " காதல் வளர்த்தேன்" , 12 B படத்தில் வரும் " எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது , அந்நியனில் வரும் " அண்டங்காக்கா கொண்டைகாரி " என்ற பல ஹிட் பாடல்களும். "மொழ மொழன்னு" போன்ற திராபை பாடல்களும் பாடியுள்ளார். இவர் பாடியதிலே " ஒரு பனித்துளி" ( கண்ட நாள் முதல் ) ," உன்னை தொட்ட" ( இதய திருடன் ) , " உயிரின் உயிரே " ( காக்க காக்க ) எல்லாமே மிக பிரபலமான பாடல்களே. தமிழ் பாடகர் போலவே தோன்றினாலும் , பல ஹிந்தி பாடல்கள் பாடியுள்ளார். அங்கே இவர் மிகப்ப்ரபலம்.


6.கைலாஷ் கெர் :


கிராமிய பாடல்களா? உற்சாகமான பாடல்களா? கொஞ்சம் குத்துடன் குரலை ஏற்றி இறக்கி பாட வேண்டுமா? கூப்பிடு கைலாஷ் கெரை என்பது தான் இப்பொழுது தமிழ் சினிமாவின் டிரென்ட். அவருக்கு சாதரணமாகவே ஷ வராது இது தமிழிற்கும் பொருந்துகிறது.

பீமாவின் ரங்கு ரங்கம்மா , அபியும் நானுமில் " ஒரே ஒரு ஊரிலே " , லீயில் " யாரு யாரு " போன்ற பாடல்களுக்கு சொந்தக்காரர். இவர் அறிமுகம் ஆனது மஜா படத்தில் " போதுமடா சாமி" என்ற பாடலில்.

சலாம் எ இஷ்கு திரைப்படத்தில் " யா ரப்பா " பாடலை கேட்டு பாருங்கள் , அல்லது " தேரி தீவாணி " என்று இணையத்தில் தேடி பாருங்கள் ! கைலாஷ் ஸுபி பாடகர்களில் மிக முக்கியமானவர்.


7.ரூப் குமார் :


வாமணன் படத்தில் " ஒரு தேவதை " பாடல் கேட்டேர்களா? இல்லையெனில் முதலில் போய் கேளுங்கள் , ரூப் பின்னியிருக்கிறார். இவர் மின்னலே படத்தில் " வெண்மதி வெண்மதியே " கூட பாடி இருக்கிறாராம். இன்னும் நிறைய பாடல்கள் பாடலாம் மயக்கும் குரல் .


இது போக விஜய் பிரகாஷ் , குணால் காந்ஜாவாலா , ஷான் , ஹிமேஷ் போன்றவர்களும் தமிழில் பாடி இருக்கிறார்கள். பிற மொழி பாடகர்கள் மொழியை சிதைக்காமல் பாடினால் கண்டிப்பாக ரசிக்கலாம். சிதைத்தும் ரசித்து கொண்டு தானே இருக்கிறோம்?

Wednesday, August 12, 2009

சீனா விலகும் திரை - நூல் விமர்சனம்


எனக்கு கண்ணை கட்டுகிறது. புத்தகம் வாங்குவதற்கு முன்பே பல்வேறு எதிர்பார்ப்புகள் வைத்திருந்தேன் , கட்டுரைகிளின் தொகுப்போ? பயண கட்டுரை எழுதி முழுவதும் மொக்கையாக இருந்து விட்டால் ?


அப்படி எதுவுமே இல்லை , தன் பயணத்தின் வாயிலாக தனது ஐந்து வருட இருப்பின் வாயிலாக புள்ளி விவரங்களை ஆங்காங்கே அள்ளி தெறித்து , ஒரு இடத்தில் நின்று கொண்டு அதன் வரலாற்றை நினைவில் நிறுத்தி எழுதி அசத்தி இருக்கிறார் பல்லவி அய்யர் ( படிச்சு வாங்கின பட்டமுங்களா? ). இவ்வளவு லைவ்லியான மொழிபெயர்ப்பா என அதிசயிக்க வைக்கிறது ராமன் ராஜாவின் உழைப்பு!

சீனாவின் தனி நபர் வருமானம் இந்தியாவை விட இரு மடங்கு. இந்தியாவில் 5.7 கோடிகுழந்தைகள் சத்தான உணவில்லாமல் வளர்ச்சியில் தடைபடுகிறார்கள் ஆனால் சீனாவில் எழுபது லக்ஷம் தான். இந்தியாவில் 15 வயது மேர்ப்பட்டவர்களில் 68% பேர் தான் எழுத படிக்க தெரிந்தவர்கள். சீனாவில் 95% .


நான் என்ன ரமணா விஜயகாந்தா? . விஷயத்துக்கு வருவோம் , ராமன் ராஜாவில் மொழிபெயர்ப்புக்கு ஒரு ஒரு உதாரணம் , சீன விருந்தாளிகள் இந்தியாவில் இருக்கும்பொழுது டெல்லியில் இருந்து ஆக்ரா அழைத்து செல்லப்படுகிறார்கள். சன்னமாக ஒருவர் கேட்கிறார் " நாம் நெடுஞ்சாலையில் பயணிப்போம் என்றீர்களே பல்லவி , அது எப்போ வரும்? "


" நாசமா போச்சு! நாம் அதில் தான் சென்று கொண்டிருக்கறோம். "

இதில் இருந்தே தொடங்கலாம் , சீனாவில் இருக்கும் சாலைகள் இந்தியாவில் இல்லை. ரயில் பாதைகளில் அசுர பாய்ச்சல். தொழிற் சாலைகள்? பட்டன் தயாரிக்கிரீகளா? பலூன் ? இரும்பு? பொம்மைகள்? எல்லாவற்றிலும் சீனா சீனா சீனா ! மாவோ சீனா இப்பொழுது கண்டிப்பாக இல்லை என ஆணித்தரமாக பல்லவி கூறுகிறார். இருந்திருந்தால் 44.7% ஏற்றத்தாழ்வு இருக்காது ( inequality) . சீனா அடைந்த அனைத்து வளர்ச்சிக்கும் அது கொடுத்த விலை , ஜனநாயகம் !

புத்தகம் நெடுக ஜனநாயகத்தை புதைத்த வளர்ச்சியா? வளர்ச்சியே இல்லாமல் வெத்து ஜனநாயகமா என்று மண்டையை ஒடைத்து கொண்டிருக்கிறார். தீர்வு? நான் ஏழை குடும்பத்தில் பிறந்தால் சீனனாகவே ஆசை படுகிறேன் ஆனால் நடுத்தர குடும்பம் என்றால் இந்தியா தான் என்ற முடிவை முன் வைக்கிறார் .


பல்லவி ஹூடாங்கில் வசிக்கும் பொழுது அவரது வீட்டின் அதிபாரான திரு வூ ( கோடீஸ்வரர்) தன் வீட்டின் கக்கூசை சுத்தம் செய்கிறார். பலப் ரிப்பேர் பார்க்கிறார். தனது அம்மாவிற்கு ஆயி வேலை கிடைக்குமா என்று தனது நவ நாகரீக சீன மாணவி கேட்கும் பொழுது ஆடி போகிறார் பல்லவி. ஏனென்றால் இதெல்லாம் இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வேலைகள் . சீனாவில் எந்த வேலையும் தரம் பார்க்காமல் செய்கிறார்கள் . வர்க்க பேதங்களின் , இன /மத பேதங்களின் முதுகெலும்பை உடைத்திருக்கிறார் மாவோ . இங்கே சாதீய ஏற்ற தாழ்வுகளை உடைப்பது சாதாரண விடயமா?


அதே நேரம் மக்கள் மாற்றி சிந்திக்க கூட தெரியாமல் வளர்ந்திருக்கிறார்கள் , இந்தியனுக்கு எடக்கு பேசாவிடின் தூக்கம் வருமா? சீனா காரன் எதுவும் நன்மைக்கே என்கிறார்கள். இரண்டு உதாரணங்கள் இதற்க்கு , திபெத்தில் தான் பார்த்த மொழி பெயர்ப்பாளர் ஒருவர் " சீனர்கள் ஒரே மாதிரி தான் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இன்னொன்று அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டால் ( கெட்ட செய்திகளாம்) மக்கள் மனசு ஒடிந்து விடும் என்று அவரது சீன மாணவி சொல்கிறார்.


மூச் , மாத்தி யோசிக்காதே என்கிறது அரசாங்கம். இணையத்தை தடுக்கிறார்கள் , எல்லாவற்றிற்கும் அடக்குமுறை. பொருளாதார ரீதியாக முதலாளித்துவமும் உள்ளே படை எடுத்து வந்தாகி விட்டது. இப்பொழுது தான் இடது சாரி சிந்தனைகளை தூசி தட்டி இருக்கிறார்கள். ஏனென்றால் கட்சியின் தூண்களான விவசாயிகளின் அதிர்ப்தி தான் காரணம். ஆனால் அதிகார பீடத்தை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய கல்வி அறிவு படைத்த நடுத்தர மக்கள் கேட்க மாட்டார்கள் , காரணம் வளர்ச்சி/முன்னேற்றம் என்னும் ராஜ போதை.



பலவியின் திபத் பயணம் , ஸ்பானிஷ் கணவர் , பீஜிங் மாணவிகள் ,ஹூடாங் வீடு மற்றும் வாழ்கை முறை , பொக்கை வாய் கிழவர்கள் , கக்கூஸ் கண்காட்சி , அங்கு அவர் சந்தித்த இந்தியர்கள் , வாஜ்பாய் வருகை , உணவு பழக்க வழக்கங்கள் , சீனாவும் மதமும் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களும் எப்படி பின்னி பிணைகின்றன இன்றைய கால கட்டங்களில் என்ற நுட்பமான ஆராய்ச்சி , யோகா மோகன் , திபெத் சிறுவன் , பீஜிங் தலைகீழாக மாறிப்போன காட்சிகள் , மலை மேல் ரயில் பிரயாணங்கள் , அவர் சந்திக்கும் உலகத்திலேயே பணக்கார கிராமம் அங்கு முன்னேற்றம் வர வித்திட்ட மனிதர் , அவர் கண்ட தொழில் சார்ந்த பேட்டிகள் , அவர் சந்தித்த சாக்ஸ் தொழிற்சாலை , பாதி புதுமையும் மீதி பழமையும் கொண்ட வீடுகள் ( இது தான் இன்றைய சைனா ) , தொழில் நகரம் அதில் இருக்கும் பொருள்கள் , மத வழிப்பாட்டு உருவங்கள் , செக்ஸ் பொம்மைகள் என்று ஒவ்வொன்றும் அவரின் ரசனையோடு கலந்த நுட்பமான தகவல்கள்.



அவர் சார்ஸ் பற்றி எழுதி இருக்கும் இடத்தில் நான் கடுமையாக முரண் படுகிறேன் அது இந்த புத்தகத்தின் சாரமும் கூட! முதலில் சீன அரசாங்கம் சார்ஸ் பரவிய விகிதத்தை குறைத்து சொல்லியது ( மீடியா அவங்க கையில் பாஸு). பிறகு உண்மையை ஒப்புக்கொண்டு தீர்வு கண்டது. இதை அறிந்த மாணவர்கள் /மக்கள் கலவரமானார்கள். அதற்க்கு பல்லவி அளிக்கும் பதில் இதுவே இந்தியா என்றால் நாங்கள் துல்லியமாக பத்திரிக்கைகள் ( மீடியா) மூலம் அலசி இருப்போம் என்று ஜம்பம் அடித்து கொள்கிறார்.


இந்தியாவில் சார்ஸ் பற்றி எத்தனையோ கட்டுரைகள் பத்திரிக்கைகளில் குவிந்தன! மொத்தம் எத்தனை நபர் பாதிக்கப்பட்டனர்? மூன்று. இறப்பு? பூஜியம் பல்லவி. ஏன் சார்ஸ் இவ்வளவு கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது? விமானம் மூலம் கூட பரவி வசதி படைத்தவர்களையும் கொல்லும் என்பதால் தானே? . Tuborculosis , வயிற்று போக்கினால் இந்தியாவில் சாகும் எண்ணிக்கை எவ்வளவு? அதன் புள்ளி விவரங்கள் வருவதே இல்லையே? ஏன் ? இந்திய மீடியா என்று நாம் எவ்வளவு பீத்தி கொண்டாலும் அது கார்பரேட்களின் கைப்பாவையாக உள்ளது ( They are corporate stenographers) இத்தனை இருந்தும் எனக்கு இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறைவில்லை , மீடியாக்கள் மீதும்! ஏனென்றால் ஒரு பாலகும்மி சாய்நாத் இல்லையென்றால் மேற்சொன்ன விவரங்கள் எனக்கு தெரிந்திருக்காது.




மொத்தத்தில் இந்த புத்தகத்தை படிக்காமல் விடுபவர்கள் ஒரு முக்கிமான ஒப்பீடு நடையில் எழுதப்பட்ட ஒரு சுவாரசியமான / அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றை இழக்கிறார்கள். A must read!