Sunday, March 20, 2011

ரண்டடக்கா

ஒத்தையடி பாதையில் போயிருக்கிறீர்களா? இப்பொழுதெல்லாம் வீட்டில் இருந்து இந்த ஒத்தையடிப்பாதையில் தான் பேருந்து நிலையத்துக்கு வர வேண்டும். மழை அதிகம் பெய்யும் இடம் கெர்லிங்கன் , இரண்டு பக்கமும் முட்கள் நிரம்பியிருக்கும் ஆனால் வெகு சீக்கிரமாக என்னை கொண்டு சேர்த்துவிடும். 92 க்கு காத்திருந்தேன்.


ஹாஃப்ட்பான்ஹாஃப் என்றால் முக்கிய ரயில் நிலையமாம் யாரோ சொன்னார்கள். அதிலிருந்து நேராக கோனிங்ஸ்ட்ராசே வந்து சேர்ந்தேன் ,பக்கம் தான் நம்மூர் கடைத்தெரு மாதிரி இருக்கும். மணி எட்டிருக்குமா? இருக்கலாம். கடைத்தெருவின் ஓரங்களில் பல்வேறு கலைஞர்கள் எதேனும் கருவியை வைத்து வாசித்துக்கொண்டிருப்பார்கள். ஒருவர் கிளியை தலையில் வைத்துக்கொண்டே சாக்ஸ்போன் வாசிப்பார் ,நாம் காசு போட்டோம் என்றால் கிளி கீக் என்று கத்தும். கண் தெரியாத இருவர் ஒரு பியானிஸ்ட்டுடன் வயலின் வாசிப்பார்கள் , சில மெக்சிக்க பாடகர்கள் பாடுவார்கள், அப்பறம் பெரிய வயலின் வைத்து ஒருவர் வாசிப்பார். அது அவர் உயரத்துக்கு இருக்கும்.

கோனிங்க்ஸ்ட்ராசேவில் இரண்டாவது இடதில் இருக்கும் படிக்கட்டுகளில் இறங்கினேன். கப் கேக்குகளுக்கென்று பரத்தியேகமாக ஒரு கடையுண்டு. அதன் வாசலில் எப்பொழுதும் ஒரு நாய் குட்டி இருக்கும் அதுக்கு நானும் எனக்கதுவும் சில நாட்களாக பரிச்சயம் ,கடந்து சென்றேன். செங்குத்தாக வரும் படிகளில் இறங்கினேன். அந்த சின்னத்தெருவை நான் வந்தடைந்த போது மணி 9 இருக்குமா? கம்மியாகத்தான் இருக்கும். அவன் அங்கு தான் அக்கார்டியோன் வாசித்துக்கொண்டிருப்பான் ,அங்கு ஆள் நடமாட்டமே இருக்காது. தினமும்ப்போல் இன்றும் அவனையே பார்த்துக்கொண்டு நின்றேன். பத்து மணிக்கு மேல் பக்கத்து சந்தில் இருக்கும் ஒரு க்ளப்புக்கு போய் விடுவான் முந்தா நாள் எட்டிப்பார்த்ததில் அங்கே காமக்களியாட்டங்கள் நடக்கும் என்று தெரிந்து கொண்டேன். கண்ணை மூடி அக்கார்டியானை அதன் பைக்குள் சொறுகினான் ,எழுந்து நின்று ஆட ஆரம்பித்தான் எதேதோ அர்த்தமற்ற வார்த்தைகளில் பாட ஆரம்பித்தான் ,நானும் உடன் சேர்ந்து கொண்டேன் அவன் சொல்லும் வார்த்தைகளையே சொல்லிப்பாடினேன். பக்கத்தில் உள்ள பையிலிருந்து எனக்கதை கொடுத்தான். சில்லறைகளை பொறுக்கிக்கொண்டு கிளப்பை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டான்.

நான் அதை தடவிப்பார்த்தேன் ,குடுகுடுப்பை என்று சொல்லலாமா? இல்லை. இது வேறு சின்ன வயதில் இதே போல் ஒன்று பார்த்திருக்கிறேன் கைப்பிடி மாதிரி ஒரு குச்சு இருக்கும் அதன் மேல் குடுகுடுப்பைப்போல் உருண்டையாக ஒன்று.இரண்டு பக்கமும் நூலால் சின்ன ப்ளாஸ்டிக் பந்தை கட்டி விட்டிருப்பார்கள். கையை குவித்து அதை நடுவில் வைத்து உருட்ட ஆரம்பித்தேன் ரண்டட்டக்கா ரண்டட்டகா ரண்டட்டகா என்று சத்தம் போட்டது சிரிப்பாக வந்தது நிறுத்தவே முடியவில்லை. சுவற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தேன் ஹஹஹ்ஹா ரண்டடக்கா ரண்டடக்கா.

பேருந்து நிலையம் வரைக்கும் அதை வாசித்துக்கொண்டே போனேன். காலை முன்னே எத்தி எத்தி அதை வாசித்துக்கொண்டே ஹேய் ரண்டடக்கா ரண்டடக்கா ரண்டட்க்கா

அடுத்த காலை எத்தும்போதும் அதே ஹேய் ரண்டட்டக்கா ரண்டட்டக்கா ரண்டட்க்கா. பேருந்தில் யாரும் பார்த்துவிடக்கூடாதென்று கோட்டுக்குள் ஒளித்து வைத்தேன். ஒத்தையடி பாதியில் வீடு வந்தேன் ,வாசல் விளக்கு வேலை செய்யவில்லை. கதவை திறந்த நிமிடத்தில் படார் என்று மூடினேன் ,ஹே ரண்டடக்கா ரண்டடக்கா ரண்டடக்கா. கொஞ்ச நேரத்தில் சோர்வடைந்து விட்டேன்
92 இல் இருந்து இறங்கினேன். உள்ளே போக எனது அடையாள அட்டையை காட்ட வேண்டும் ,பெருநிறுவனம் அது. சில நாட்கள் முன்பு வந்து சேர்ந்த பொழுது அன்னாந்து பார்த்த கட்டிடங்களை இப்பொழுது பார்ப்பதில்லை. நீலத்திமிங்கலத்தின் வாய்க்குள் போவது போன்ற உணர்வை அந்த ஆட்டோமேட்டிக் கதவுகள் ஏனோ தருகின்றன. என் அறைக்கு போகும் முன்பு நான் வந்தேன் என்று ஒரு மெஷினிடம் சொல்ல வேண்டும்.8.34 க்கு வந்திருக்காய் என்றது. என் கணிணியில் இன்று செய்ய வேண்டியவற்றின் அட்டவனையைப்பார்த்தேன் , அது இருந்தது.

வெள்ளை கோட்டை மாட்டிக்கொண்டேன் ,எனது கைகள் அளவுக்கு நீல நிற க்ளவுசை தேடியெடுத்துப்போட்டேன். அந்தப்பொடியை அளவெடுத்தேன் , அதை ஓங்கி அழுத்தி மாத்திரையாக்கும் வேலை , மெஷின் செய்யும். இங்கே அங்கே கொட்டி தொலைத்தது பொடி , கடிந்து கொண்டேன். பொடியை ஒரு சின்ன அளவிலான பாத்திரத்தில் போட்டேன். பாத்திரம் என்றால் பால் பாத்திரம் மாதிரியில்லை மேலும் கீழும் கொஞம் குண்டான ஸ்டீல் கம்பிகளால் மூட வேண்டும் ஆனால் கம்பிகளால் நிற்காது ,அதனால் அதை தாங்கிக்கொள்ள ஒரு நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும்.நாற்காலியோடு கொண்டுபோய் அந்த அழுத்தும் இயந்தரத்தில் வைத்தேன். மேலிருந்து ஒரு பெரிய உருண்டை இரும்பு இதை அழுத்தும் , அதை ஏற்றி இறக்க கால் பக்கத்தில் பெடல் இருக்கும். ஒரு அழுத்து அழுத்தியாகிவிடின் அது அப்படியே நின்று கொள்ளும் , நாற்காலி தேவையில்லை பிறகு மெஷினாக அதை அழுத்த நாம் சில கட்டளைகள் கொடுத்தால் போதும்.

முடிந்தவுடன் எடுத்து பார்த்த பொழுது மாத்திரை உடைந்தார்ப்போல் வந்திருந்தது , பொடியைத்த்யாரிக்க எவ்வளவு நாட்கள் ஆயிற்று தெரியுமா என்று கத்தினேன் ,வாயைத்திற்க்காமல் என்னை பார்த்துக்கொண்டிருந்தது. பக்கத்திலிருந்து ஒருவன் வந்து பார்த்து சிரித்துவிட்டு போனான். நானும் பதிலுக்கு அவனை பார்த்து சிரித்தேன். அடுத்த முறை செய்த பொழுது வடிவாக மாத்திரையை கொடுத்திருந்தது ,வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தேன் மூஞ்சியை திருப்பிக்கொள்வது போல் நாற்காலியிலிருந்து சரிந்தது.

ஏழாவது மாத்திரைக்கு பிறகு ஸ்டீல் கம்பியை தனியாக பிரித்தெடுக்க முடியவில்லை ,ஏன் என்றேன் மீண்டும் வரமாட்டேன் என்றது. தண்ணீர் ஊற்றிக்கழுவினேன் உள்ளே சிராய்ப்புகள் இருந்தது. சின்ன பேப்பரை நன்றாக சுருட்டி அதன் உள் அழுக்கை நீக்கினேன் ,தண்ணீர் ஊற்றி மீண்டும் கழுவியபொழுது முழுச்சாப்பாடு சாப்பிட்ட திருப்தியில் இருப்பவனைப்போல் காட்சிகொடுத்தது. என்னை சாப்பிட அழைத்துச்சென்றார்கள்.
சாப்பிட்ட பிறகு ஒரு நடை நடப்பது அங்கே வழக்கம். முன்னே போகும் பெண்ணுக்கு மிக நீளமான தலைமுடி என்றான் பெர்ண்ட். அவள் இந்தியப்பெண் என்றான் ஃப்ரான்க். எப்படித்தெரியும் இது பெர்ண்ட். அவள் பெண்ணாயிற்றே , இந்த பில்டிங்கில் இருக்கும் அனைத்து இளம்பெண்களையும் தெரிந்து வைத்திருக்கிறேன் என்றான். பொதுவாக இந்தியப்பெண்கள் இப்படி முடி வைத்திருப்பார்களா என்று கேட்டான் ,தெரியாது என்றேன். உனக்கு என்ன எழவுதான் தெரியுமோ என்று முனுமுனுத்தான். நான் அவர்களை விட்டு வேகமாக நடந்திருக்கிறேன் என்பதை வேலையிடத்துக்கு வந்ததும் உணர்ந்து கொண்டேன். பாத்திரம் காய்ந்து விட்டிருந்தது. அதை மீண்டும் இன்று அழுத்த மணமில்லை.

அவன் அங்கே தான் இன்றும் உட்கார்ந்திருந்தான் ,வழக்கம் போல் ஆள் அரவமில்லை. இன்று கூடதல் குதூகலத்துடன் எனது ரண்டட்டக்காவை எடுத்து வாசித்து காமித்தேன் அவன் குதிக்க ஆரம்பித்தேன் ,சிறிது நேரம் ஆடிவிட்டு நகர்ந்துவிட்டான் ,அவன் பின்னே சென்றேன். வராதே என்று கத்தினான் ,நான் அதை ஆட்டிக்கொண்டே அவனை அடைந்தேன்.க்ளப் வந்துவிட்டது. அவனைப்பார்த்து சிரித்துக்கொண்டே அதை வாசித்துக்கொண்டிருந்தேன். நான் காலைஆட்டுகையில் என் கையிலிருந்து அதைப்பிடுங்கி அதன் மேலேறி குதிக்க ஆரம்பித்தான் எனக்கு வந்த கோபத்தில் அவனை கீழே தள்ளி விட்டேன். அதை மங்கலான வெளிச்சத்தில் பார்த்தேன் ,முழுவதுமாக சப்பளிந்திருந்தது நூல்கள் அறுபட்டு போயிருந்தன. அழுகையை அடக்கிக்கொண்டு தேவுடியாப்பைய்யா என்று தமிழில் திட்டினேன் ,அவனுடன் இப்பொழுது இன்னும் சிலர் இருந்தார்கள் ஒருவன் என் கையை ஓங்கி மிதித்தான் , நான் மிச்சமிருந்ததை பொறுக்கிக்கொண்டு வலப்பக்கம் இருக்கும் குறுக்குச்சந்தில் ஓடி வந்துவிட்டேன்.பின்னால் யாரும் வரவில்லை.
இன்றும் வாசல் விளக்கு வேலை செய்யவில்லை ,கதவைப்பூட்டாமல் எனது மெத்தைக்கு வந்தேன் கொஞ்ச நேரம் விசும்பியிருப்பேன் போல ,பிறகு தூங்கிவிட்டேன்.

காலை 8.43 க்கு வந்திருக்கிறாய் என்றது மெஷின் ,நன்றி சொல்லாமல் நடந்தேன். அட்டவனை மாறவில்லை , 50 மாத்திரைகள் தயாரிக்க வேண்டுமே! மீண்டும் பாத்திரத்தை வெளியில் எடுத்தேன். இனிமேல் அவனை பார்க்கப்போவதில்லை என்றேன் ,சரி என்பது போல் பதில் சொல்லியது. நேற்றே வேலையை முடித்திருக்கலாமே என்று ஒரு குரல் ,எனது மேற்பார்வையாளருடையது. முடித்திருக்கலாம் தான் ஆனால் 10க்கு மேல் தொடர்ந்து இதை அழுத்தினால் இதற்க்கு காயங்கள் ஏற்படுகின்றன சிறிது ஓய்வுத்தேவை என்றேன். உனக்கா என்றார் ,இல்லை சொன்னேனே இதற்க்குத்தான் ஓய்வு. அதற்க்கென்ன உயிரா இருக்கிறது என்று சிரித்துக்கொண்டே கேட்டார். எனக்கு அவர் கேட்ட கேள்வி புரியவில்லை.

Thursday, January 20, 2011

வகுப்பறை

இன்றுடன் *அஃபீஷியலாக* எனக்கும் வகுப்பறைகளுக்குமான உறவு முடிகிறது.கொஞ்சம் தல்லாஞ்சு மனசு கிடப்பதால் இந்த பதிவு.(உங்க கெட்ட நேரம்)

வகுப்பறைகளுக்கும் எனக்குமான வரலாற்று உறவு நான் 3 வயதில் இருக்கும்போது ஆரம்பித்தது.முதல் நாளே சரித்தரத்தில் என்னை என் நண்பன் விஜயகுமார் இடம்பெற வைத்தான்.எல்லோரிடம் வரிசையில் வந்து பெயர் கேட்டான்.உயரமாக இருப்பதால் நான் கடைசி பெஞ்ச் ,என்னிடம் வந்து கேட்டபொழுது என் பெயரை எப்படி உச்சரித்து தொலைத்தேன் என்று தெரியவில்லை ,அவனுக்கு அது வெறியேத்திவிட்டதா என்றும் இன்றளவிலும் புரியவில்லை.நிறுத்தி நிதானமாக ஒரு மூன்று நிமிடங்கள் ரத்தம் வரும் வரை கடித்து வைத்தான்.நான் அலறக்கூடவில்லை அவன் கடிப்பதையே பார்த்துக்கொண்டிருந்த நினைவு.அப்பறம் ஆயாம்மா வந்து எனக்கு மருந்து போட கூட்டிக்கொண்டுபோக இவன் தரையில் புரண்டு அழ ஆரம்பித்துவிட்டான் , என்னை அம்போவென்று விட்டுவிட்டு இவனை அரை மணி நேரம் சமாதானப்படுத்தினார்கள்.

விளையாட்டுகளில் முன்பு ஆர்வம் இருந்தது.அம்மாவின் முழு ஈடுபாட்டால் தமிழ்/ஆங்கிலம் இரண்டு பேச்சுப்போட்டிகளிலும் கலந்து கொள்ள செய்வார் சிறு வயதிலிருந்து.ஒரே ஒரு கோட் மட்டும் தான் சொல்வேன் திரும்ப திரும்ப (ராபர்ட் ஃப்ராஸ்டின் Woods are lovely) அதை சிறு வயதில் இருக்கும்போது அம்மா அபினயம் பிடித்து சொல்லி காட்டுவார்.அதையே விவரம் தெரியும் முன்வரை பயன்படுத்தியும் வந்தேன்.பேச்சுப்போட்டி என்றால் நீங்கள் தூத்துக்குடி எட்டையபுரம் மற்றும் பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்குப்போய் வரலாம் ,பஸ் பிராயணம் என்றால் எனக்கு அலாதிப்பிரியம்.அதுபோக கைதட்டு சின்ன வயதில் பிடித்திருந்தது.கலை இலக்கிய இரவுகளுக்கு குடும்பத்தோடு போவதால் அதில் வரும் சிலரை பார்த்து பலகுரல் கற்றுக்கொண்டேன்.சரியாக வராவிடினும் அப்ப்போதைக்கு அப்போ ஒன்றிரண்டு வொர்க் அவுட் ஆகும்.


இதுக்கும் வகுப்பறைக்கும் சம்பந்தமே இல்லை தான்.ஆனால் இவை தான் சிறு வயது நினைவுகளாக இருக்கின்றன.என்னால் வகுப்பில் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளித்துவிட முடிந்திருக்கிறது.யோசிக்க வைக்கும்படியான கேளிவகளுக்கு பதிலே அளிக்காமல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருப்பேன்.8ஆம் கிளாஸ் வரை ஹிட் அண்ட் ரன் வகையான அறிவாக வளர்த்துக்கொண்டேன். அதன் பிறகு வேதியல் ஒன்றுமே புரியவில்லை என்று அப்பா வனமூர்த்தி சாரிடம் சேர்த்து விட்டார்.19 வருட படிப்பில் நான் நன்றிக்கடன் பட்டிருப்பத்தாக நினைக்கும் ஒரே நபர்.வெறும் பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி,உத்தியோகமோ வங்கியில் . காலை மாலை ட்யூஷன் .எளிமையாக சொல்லித்தருவார்,ஒன்று விடாமல்.அவருக்கு தெரிந்திருக்கக்கூடிய விஷயங்களை அற்புதமாக விளக்குவார்,தெள்ள்த்தெளிவான புரிதல் இருந்தது அவரிடம்.அதை அப்படியே நம் மனதுக்களிக்கும் வல்லமையும் இருந்தது.படிப்பில் ஒரு வகையான பற்றும் ஏற்பட்டது.10 ஆம் கிளாஸ் வரை வேதியலை விருப்பப்பாடமாக கொண்டு படித்து வந்தேன்.


+1,+2 எரிச்சல் மிகுந்த ஆண்டுகள்.திருச்சங்கோடின் (வித்யாவிகாஸ்) வாழ்க்கையைப்பற்றியும் அதில் ஏன் குழந்தைகளை சேர்க்கக்கூடாது என்ற அபாயத்தைப்பற்றியும் ஒரு தனி பதிவே எழுதலாம்.அதுவரை அல்லாத அதிகப்பணம் கொடுத்து படித்தது அப்பொழுது தான் (இரண்டு வருஷத்துக்கு எல்லாம் சேர்த்து 80000 வரலாம்) அது ஒரு டார்ச்சர் ஹவுஸ் எல்லாரையும் வாயில் டியூப் போட்டு ஏத்துவது மாதிரி படிப்பை ஏற்றிவிடுவார்கள்.அப்பொழுதும் இரண்டு மாதம் விடுப்பெடுத்துக்கொண்டு வனமூர்த்தி சாரிடம் வந்து தனியாக வேதியல் கற்றேன்.

வகுப்பறை படிப்பு மட்டுமே என் வாழ்க்கையாக இருந்து வந்திருக்கிறது இதில் நான் செய்யாமல் விட்டவை மிக அதிகம். எப்படியாக இருந்திருக்கலாம் என்று இப்பொழுது ஒரு ஆசை வருகிறது .இவையெல்லம் என் எண்ணங்களே ,பலவற்றுக்கு என்னிடம் இப்பொழுது தெளிவான தர்க்கம் இல்லை.ஆனால் இப்பொழுது இருக்கும் புரிதலை வைத்து சிலவற்றை எழுதுகிறேன்.இதில் சிலவற்றை பெற்றோர்களுக்கான வேண்டுதலாகவும் வைக்கிறேன்.நான் தற்சமையும் அறிவியல் சார்த்து இயங்கி வருவதால் அதன் பார்வை அதிகமாக இருக்கும்.பொதுமைப்படுத்த முயற்ச்சிக்கவில்லை.


முதல் ரேங்கின் மீது தீராக்காதல் பெற்றோர்களுக்கு, ஒரு வித தீவிர மனநிலையில் இதை தங்கள் செல்வங்கள் எடுத்துவிட வேண்டும் என்று குழந்தைகளை கதற விடுகிறார்கள்.பின்னால் என் தர்க்கத்தை அளிக்கிறேன்.ஒரு சின்ன கேள்வி மட்டும் இப்பொழுது,போன வருஷம் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தவர் நினைவில் இருக்கிறாரா உங்களுக்கு? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் இப்பொழுது?

வெற்றி தோல்விக்கான விளக்கங்கள் ஆளுக்காள் மாறுபடும்,மதிப்பெண்ணை யார்ட்ஸ்டிக்காக வைத்து இயங்கிக்கொண்டிருப்பது என்னளவில் ஆரோக்கியமான சூழல் இல்லை.என் துறையில் அறிவியலில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமே நடந்துவிடவில்லை.இத்தனைக்கும் 50களில் மின்வேதியலில் விற்ப்பன்னர்களை கொண்டிருந்த நாடு இது.


நான் செய்த தவறாக நினைப்பது ஒரு உள்ளார்த புரிதலே இல்லாமல் படித்து படித்து மேலே வந்ததைத்தான் (எல்லாவற்றிலும் இல்லை).எல்லாவற்றுக்கும் அடிப்படைகள் முக்கியமானவை.கொஞ்ச நாள் முன்னாடி circumference என்றால் என்னவென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.சுற்றளவு என்ற தமிழ் வார்த்தை தெரியாது. circumference என்றால் அதன் சூத்திரம் மட்டும் மண்டையில் வந்து நிற்கிறது.குழந்தைகளுக்கு அனைத்தையும் மண்டையில் தினிக்கத்தேவையில்லை.நினைவாற்றலை விட அவர்கள் புலன்களுக்கும் ஒரு உள்ளார்ந்த பிரக்ஞையை உண்டாக்கும் வண்ணம் எடுத்துச்சொல்ல வேண்டும்.மேலே போகும்பொழுது அவர்கள் இந்த சின்ன சின்ன புரிதல்களைதான் அஸ்திவாரமாக வைத்து உள்வாங்கிக்கொள்வார்கள்.


காரணம் இல்லாமல் ஒன்றுமே இருந்துவிடாது.ஒரு நிகழ்வுக்கோ ஒரு இருப்புக்கோ ஒரு ரசாயன மாற்றத்துக்கோ காரணங்கள் இருக்கும்,இது நடக்குது என்று சொல்லிக்கொடுக்க படிப்பு தேவையில்லை.மிகப்பெரிய சறுக்கலை சந்திக்கிறோம் நாம் அங்கே! ஐரோப்பியாவில் வந்து இரண்டு நாட்டு கல்விமுறைகளில் நான் பார்த்தது ,அங்கே எந்த மாணவனும் கேள்வி கேட்காமல் சும்மா தகவல்களாக (facts) எதையும் ஒப்புக்கொள்வதில்லை,கேள்வி கேட்பதன் அவசியம் அவர்கள் கல்வியிலேயே காணக்கிடைக்கிறது.ஏன் நிகழ்கிறது எந்த குணமிருந்ததால் இவ்வகையான மாற்றம் நிகழ்கிறது என்ற புரிதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு நாமே ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களைத்தாண்டி சிலவற்றை நிகழ்த்திக்காட்டலாம்.


சிறு குழந்தைகளுக்கிருக்கும் கேள்விகேட்கும் தன்மையை தக்கவைத்துக்கொள்வதில் தான் பின்னாளின் அறிவாற்றல் இருக்கிறதாக நம்புகிறேன்.பிடித்த பாடங்களில் உள்ளவற்றை மட்டும் அதன் உள்ளர்த்தங்களோடும் காரணங்களோடும் விளங்கிக்கொண்டு படித்துவிட்டால் போதும்.பின்னால் வீடு பங்களா எல்லாம் கட்டிக்கொள்ளலாம்.கணிதத்தை சூத்திரங்களாகவும் அதை வைத்து செய்யக்கூடிய வித்தையாகவுமே நம் பாடத்திட்டங்கள் பார்க்கின்றன.சூத்திரங்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை.அவை ஒரு தத்துவ அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.அவை உருவான விதத்தை விளங்கிக்கொள்ளாமல் அவற்றை உபயோகப்படுத்திக்கொண்டிருப்பது கேல்குலேட்டர் செய்யும் வேலை.

இவ்வளவு நீட்டமாக போகும் என்று நினைக்கவில்லை.இருந்தாலும் ஐரோப்பிய பாடத்திட்டங்களைப்பற்றி இன்னும் விரிவாக எழுத எண்ணம்.இதில் நிறைய மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் தெரிவியுங்கள்.உபயோகமாக இருந்தது என்று தோன்றினால் மேலும் எழுதுகிறேன்.