Thursday, January 20, 2011

வகுப்பறை

இன்றுடன் *அஃபீஷியலாக* எனக்கும் வகுப்பறைகளுக்குமான உறவு முடிகிறது.கொஞ்சம் தல்லாஞ்சு மனசு கிடப்பதால் இந்த பதிவு.(உங்க கெட்ட நேரம்)

வகுப்பறைகளுக்கும் எனக்குமான வரலாற்று உறவு நான் 3 வயதில் இருக்கும்போது ஆரம்பித்தது.முதல் நாளே சரித்தரத்தில் என்னை என் நண்பன் விஜயகுமார் இடம்பெற வைத்தான்.எல்லோரிடம் வரிசையில் வந்து பெயர் கேட்டான்.உயரமாக இருப்பதால் நான் கடைசி பெஞ்ச் ,என்னிடம் வந்து கேட்டபொழுது என் பெயரை எப்படி உச்சரித்து தொலைத்தேன் என்று தெரியவில்லை ,அவனுக்கு அது வெறியேத்திவிட்டதா என்றும் இன்றளவிலும் புரியவில்லை.நிறுத்தி நிதானமாக ஒரு மூன்று நிமிடங்கள் ரத்தம் வரும் வரை கடித்து வைத்தான்.நான் அலறக்கூடவில்லை அவன் கடிப்பதையே பார்த்துக்கொண்டிருந்த நினைவு.அப்பறம் ஆயாம்மா வந்து எனக்கு மருந்து போட கூட்டிக்கொண்டுபோக இவன் தரையில் புரண்டு அழ ஆரம்பித்துவிட்டான் , என்னை அம்போவென்று விட்டுவிட்டு இவனை அரை மணி நேரம் சமாதானப்படுத்தினார்கள்.

விளையாட்டுகளில் முன்பு ஆர்வம் இருந்தது.அம்மாவின் முழு ஈடுபாட்டால் தமிழ்/ஆங்கிலம் இரண்டு பேச்சுப்போட்டிகளிலும் கலந்து கொள்ள செய்வார் சிறு வயதிலிருந்து.ஒரே ஒரு கோட் மட்டும் தான் சொல்வேன் திரும்ப திரும்ப (ராபர்ட் ஃப்ராஸ்டின் Woods are lovely) அதை சிறு வயதில் இருக்கும்போது அம்மா அபினயம் பிடித்து சொல்லி காட்டுவார்.அதையே விவரம் தெரியும் முன்வரை பயன்படுத்தியும் வந்தேன்.பேச்சுப்போட்டி என்றால் நீங்கள் தூத்துக்குடி எட்டையபுரம் மற்றும் பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்குப்போய் வரலாம் ,பஸ் பிராயணம் என்றால் எனக்கு அலாதிப்பிரியம்.அதுபோக கைதட்டு சின்ன வயதில் பிடித்திருந்தது.கலை இலக்கிய இரவுகளுக்கு குடும்பத்தோடு போவதால் அதில் வரும் சிலரை பார்த்து பலகுரல் கற்றுக்கொண்டேன்.சரியாக வராவிடினும் அப்ப்போதைக்கு அப்போ ஒன்றிரண்டு வொர்க் அவுட் ஆகும்.


இதுக்கும் வகுப்பறைக்கும் சம்பந்தமே இல்லை தான்.ஆனால் இவை தான் சிறு வயது நினைவுகளாக இருக்கின்றன.என்னால் வகுப்பில் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளித்துவிட முடிந்திருக்கிறது.யோசிக்க வைக்கும்படியான கேளிவகளுக்கு பதிலே அளிக்காமல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருப்பேன்.8ஆம் கிளாஸ் வரை ஹிட் அண்ட் ரன் வகையான அறிவாக வளர்த்துக்கொண்டேன். அதன் பிறகு வேதியல் ஒன்றுமே புரியவில்லை என்று அப்பா வனமூர்த்தி சாரிடம் சேர்த்து விட்டார்.19 வருட படிப்பில் நான் நன்றிக்கடன் பட்டிருப்பத்தாக நினைக்கும் ஒரே நபர்.வெறும் பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி,உத்தியோகமோ வங்கியில் . காலை மாலை ட்யூஷன் .எளிமையாக சொல்லித்தருவார்,ஒன்று விடாமல்.அவருக்கு தெரிந்திருக்கக்கூடிய விஷயங்களை அற்புதமாக விளக்குவார்,தெள்ள்த்தெளிவான புரிதல் இருந்தது அவரிடம்.அதை அப்படியே நம் மனதுக்களிக்கும் வல்லமையும் இருந்தது.படிப்பில் ஒரு வகையான பற்றும் ஏற்பட்டது.10 ஆம் கிளாஸ் வரை வேதியலை விருப்பப்பாடமாக கொண்டு படித்து வந்தேன்.


+1,+2 எரிச்சல் மிகுந்த ஆண்டுகள்.திருச்சங்கோடின் (வித்யாவிகாஸ்) வாழ்க்கையைப்பற்றியும் அதில் ஏன் குழந்தைகளை சேர்க்கக்கூடாது என்ற அபாயத்தைப்பற்றியும் ஒரு தனி பதிவே எழுதலாம்.அதுவரை அல்லாத அதிகப்பணம் கொடுத்து படித்தது அப்பொழுது தான் (இரண்டு வருஷத்துக்கு எல்லாம் சேர்த்து 80000 வரலாம்) அது ஒரு டார்ச்சர் ஹவுஸ் எல்லாரையும் வாயில் டியூப் போட்டு ஏத்துவது மாதிரி படிப்பை ஏற்றிவிடுவார்கள்.அப்பொழுதும் இரண்டு மாதம் விடுப்பெடுத்துக்கொண்டு வனமூர்த்தி சாரிடம் வந்து தனியாக வேதியல் கற்றேன்.

வகுப்பறை படிப்பு மட்டுமே என் வாழ்க்கையாக இருந்து வந்திருக்கிறது இதில் நான் செய்யாமல் விட்டவை மிக அதிகம். எப்படியாக இருந்திருக்கலாம் என்று இப்பொழுது ஒரு ஆசை வருகிறது .இவையெல்லம் என் எண்ணங்களே ,பலவற்றுக்கு என்னிடம் இப்பொழுது தெளிவான தர்க்கம் இல்லை.ஆனால் இப்பொழுது இருக்கும் புரிதலை வைத்து சிலவற்றை எழுதுகிறேன்.இதில் சிலவற்றை பெற்றோர்களுக்கான வேண்டுதலாகவும் வைக்கிறேன்.நான் தற்சமையும் அறிவியல் சார்த்து இயங்கி வருவதால் அதன் பார்வை அதிகமாக இருக்கும்.பொதுமைப்படுத்த முயற்ச்சிக்கவில்லை.


முதல் ரேங்கின் மீது தீராக்காதல் பெற்றோர்களுக்கு, ஒரு வித தீவிர மனநிலையில் இதை தங்கள் செல்வங்கள் எடுத்துவிட வேண்டும் என்று குழந்தைகளை கதற விடுகிறார்கள்.பின்னால் என் தர்க்கத்தை அளிக்கிறேன்.ஒரு சின்ன கேள்வி மட்டும் இப்பொழுது,போன வருஷம் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தவர் நினைவில் இருக்கிறாரா உங்களுக்கு? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் இப்பொழுது?

வெற்றி தோல்விக்கான விளக்கங்கள் ஆளுக்காள் மாறுபடும்,மதிப்பெண்ணை யார்ட்ஸ்டிக்காக வைத்து இயங்கிக்கொண்டிருப்பது என்னளவில் ஆரோக்கியமான சூழல் இல்லை.என் துறையில் அறிவியலில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமே நடந்துவிடவில்லை.இத்தனைக்கும் 50களில் மின்வேதியலில் விற்ப்பன்னர்களை கொண்டிருந்த நாடு இது.


நான் செய்த தவறாக நினைப்பது ஒரு உள்ளார்த புரிதலே இல்லாமல் படித்து படித்து மேலே வந்ததைத்தான் (எல்லாவற்றிலும் இல்லை).எல்லாவற்றுக்கும் அடிப்படைகள் முக்கியமானவை.கொஞ்ச நாள் முன்னாடி circumference என்றால் என்னவென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.சுற்றளவு என்ற தமிழ் வார்த்தை தெரியாது. circumference என்றால் அதன் சூத்திரம் மட்டும் மண்டையில் வந்து நிற்கிறது.குழந்தைகளுக்கு அனைத்தையும் மண்டையில் தினிக்கத்தேவையில்லை.நினைவாற்றலை விட அவர்கள் புலன்களுக்கும் ஒரு உள்ளார்ந்த பிரக்ஞையை உண்டாக்கும் வண்ணம் எடுத்துச்சொல்ல வேண்டும்.மேலே போகும்பொழுது அவர்கள் இந்த சின்ன சின்ன புரிதல்களைதான் அஸ்திவாரமாக வைத்து உள்வாங்கிக்கொள்வார்கள்.


காரணம் இல்லாமல் ஒன்றுமே இருந்துவிடாது.ஒரு நிகழ்வுக்கோ ஒரு இருப்புக்கோ ஒரு ரசாயன மாற்றத்துக்கோ காரணங்கள் இருக்கும்,இது நடக்குது என்று சொல்லிக்கொடுக்க படிப்பு தேவையில்லை.மிகப்பெரிய சறுக்கலை சந்திக்கிறோம் நாம் அங்கே! ஐரோப்பியாவில் வந்து இரண்டு நாட்டு கல்விமுறைகளில் நான் பார்த்தது ,அங்கே எந்த மாணவனும் கேள்வி கேட்காமல் சும்மா தகவல்களாக (facts) எதையும் ஒப்புக்கொள்வதில்லை,கேள்வி கேட்பதன் அவசியம் அவர்கள் கல்வியிலேயே காணக்கிடைக்கிறது.ஏன் நிகழ்கிறது எந்த குணமிருந்ததால் இவ்வகையான மாற்றம் நிகழ்கிறது என்ற புரிதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு நாமே ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களைத்தாண்டி சிலவற்றை நிகழ்த்திக்காட்டலாம்.


சிறு குழந்தைகளுக்கிருக்கும் கேள்விகேட்கும் தன்மையை தக்கவைத்துக்கொள்வதில் தான் பின்னாளின் அறிவாற்றல் இருக்கிறதாக நம்புகிறேன்.பிடித்த பாடங்களில் உள்ளவற்றை மட்டும் அதன் உள்ளர்த்தங்களோடும் காரணங்களோடும் விளங்கிக்கொண்டு படித்துவிட்டால் போதும்.பின்னால் வீடு பங்களா எல்லாம் கட்டிக்கொள்ளலாம்.கணிதத்தை சூத்திரங்களாகவும் அதை வைத்து செய்யக்கூடிய வித்தையாகவுமே நம் பாடத்திட்டங்கள் பார்க்கின்றன.சூத்திரங்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை.அவை ஒரு தத்துவ அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.அவை உருவான விதத்தை விளங்கிக்கொள்ளாமல் அவற்றை உபயோகப்படுத்திக்கொண்டிருப்பது கேல்குலேட்டர் செய்யும் வேலை.

இவ்வளவு நீட்டமாக போகும் என்று நினைக்கவில்லை.இருந்தாலும் ஐரோப்பிய பாடத்திட்டங்களைப்பற்றி இன்னும் விரிவாக எழுத எண்ணம்.இதில் நிறைய மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் தெரிவியுங்கள்.உபயோகமாக இருந்தது என்று தோன்றினால் மேலும் எழுதுகிறேன்.