Thursday, July 30, 2009

எராஸ்மஸ் முன்டூஸ் மேற்படிப்பு- ஓர் அறிமுகம்


இதை எழுதி கூட கொஞ்சம் மொக்கை போட்டால் ஒருவரும் படிக்கமாட்டார்கள் எனது வலைத்தளத்தை ( இப்போ மட்டும் என்ன வாழுது என்று கேட்கும் பதி அண்ணனுக்கு , இன்னொரு ஜிங்கிலி ப்ளாக் பரிசாக அளிக்கப்ப்படும் ) ! தெரிந்தே எழுதுகிறேன் , ஏனென்றால் விஷயம் கொஞ்சம் முக்கியமானது. எனக்கு தெரிந்த உருப்புடியான ஒன்றை பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.

பொதுவாக , மேற்படிப்புக்கு ( MS , PhD) அதிகம் அமெரிக்கா அல்லது கனடா செல்லும் வழக்கம் தான் இருந்து வருகிறது. அதற்க்கு மாற்றாக முற்றிலும் வேறுபட்ட , மிகவும் வித்யாசமான ஒரு மாஸ்டர்ஸ் தான் இந்த Erasmus Mundus .

இது எராஸ்மஸ் என்னும் மனிதனின் பின்னால் பெயரிடப்பட்டுள்ளது. அவர் என்ன செய்தார் என்று இணையத்தில் படித்தால் கொஞ்சம் மொக்கையாக இருந்தது. விட்டு விடலாம் , பாதகம் இல்லை. ஆனால் ஒன்று முக்கியம் , மனிதன் ஐரோப்பா எங்கும் சுத்தி சுத்தி போய் படித்தார். ஏன் அது முக்கியம் என்றால் , இந்த படிப்பும் அப்படிதான். ஒரே இடத்தில் உக்காந்து ஜல்லி அடிக்காமல் , நாடு நாடாக சுத்தி கும்மி அடிக்க வழிவகுக்கும் படிப்பு இது .


குறைந்த பட்சம் ஒரு வருடத்தில் இருந்து , அதிகம் இரண்டாண்டுகள் வரை இந்த படிப்பு இருக்கும். குறைந்தது இரண்டு நாடுகளுக்காது செல்ல வேண்டும் , அதிகமாக நான்கு நாடுகள் கூட செல்லலாம். இது MS க்கு மட்டுமே உண்டான பிரத்யேக படிப்பு. மேலோ , கீழேயோ இதில் படிக்க முடியாது.


மொத்தம் 104 வகையான மேற்படிப்புகள் உள்ளன. நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராயினும் உங்களுக்கு உகந்தந்து போல் ஒரு படிப்பு இருக்கும்! இதில் என்னை பொறுத்தவரை உதவித்தொகை மிகவும் அதிகம்.


பொதுவாக ஒரு செமஸ்டர் படிக்க உங்களுக்கு இரண்டு இடங்கள் தரப்படும் , அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். சில செமஸ்டர்கள் இல் ஒரே இடம் , அதில் தான் படிக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும். நாம் மூன்றாம் நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர் என்ற அடையாளத்தில் வருவோம் ( third country applicant). ஒரு கோர்ஸில் பதினெட்டு பேர் மூன்றாம் நாடுகளில் இருந்தும் , மீதி எழு பேர் ஐரோப்பாவின் உள் இருந்தும் தேர்வுசெய்யப்படுவார்கள். ( இந்த எண்கள் மாறலாம் !! ) . ஆக நாம் ஒரு மாறுபட்ட பல்நாட்டு கலாச்சாரத்தை சந்திக்கும் வாய்ப்பாக இது அமைகிறது.பல நாட்டு மாணவர்களுடன் பழகும் வாய்ப்பாகவும் பல பல்கலைக்கழகங்கள் சென்று பயில ஒரு வாய்ப்பாகவும் இது இருக்கிறது.


நான் படிக்கப்போகும் இந்த படிப்பில் மொத்தம் இரண்டாண்டுக்கும் சேர்த்து 42,000 யூரோ உதவித்தொகை . அதில் செமஸ்டருக்கு இரண்டாயிரம் என எட்டாயிரம் இரண்டாண்டுக்கு போய்விடும் , மிச்சம் நமக்கு தான்.


சேர்வதற்கு உண்டான தகுதி ஒவ்வொரு கோர்ஸ்க்கும் மாறுபடும்! அதில் ஆங்கில அறிவை காட்ட TOEFL/IELTS எடுப்பது அவசியம். முக்கால்வாசி படிப்புகள் ஆங்கிலத்தில் தான் இருக்கும்.


மொத்தம் எத்தனை கோர்ஸ்கள் உள்ளன என்பதை இணைப்பாக தருகிறேன். உள்ளே போய் பாருங்கள் , ஒவ்வொரு ஹைபர்லிங்க்இலும் தேவையான அனைத்து தகவல்களும் இருக்கும். இதுபோக எராசுமஸ் படிப்பை பற்றிய முக்கிய வினா விடை ( FAQ's) தனியாக கீழே உள்ளது. நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் , அந்தந்த Graduate co-ordinator ஐ தொடர்பு கொள்வது தான்.


பி.கு : ஒவ்வொரு கோர்ஸும்ஒவ்வொரு தினுசு. ஆக தனித்தனியே உங்களுக்கு தேவையானதை எடுத்து பாருங்கள்.வேறு எதுனா தெரிய வேண்டும் என்றாலும் கேளுங்கள் , ஒவ்வொரு கோர்சிலும் ஒரு தமிழர் இருக்க வாய்ப்பு உண்டு. அவர்களிடம் கேட்டு விவரம் பெறலாம்



List of EM courses : http://ec.europa.eu/education/programmes/mundus/projects/index_en.html

FAQ's : http://www.u-picardie.fr/userfiles/file/Mundus%2520_%2520Frequently%2520asked%2520questions%5B1%5D.pdf

Wednesday, July 22, 2009

ஆத்மாநாம் என் ஆத்மாநாம்- அடுத்த ஐந்து

1.ஒரு தலைப்பிடாத கவிதையாய்

வாழ்க்கை

ஒரு நாள் இரண்டு நாள் என

தொடர்ந்து நாட்களை எண்ணினேன்

காலையை தொடர்ந்து மாலை

இரவாகும் காலப் புணர்ச்சியில்

பிரமித்து நின்றேன்

கடற்கரையில்

2.அற்புதமாய் புலர்ந்த காலை

நீள நிழல்கள்

நீலத்தில் கோலமிட

வண்ணக்கலவயாய் உலகம்

எங்கும் விரிந்து கெட்டியாய் தரை


என் காலடியில்


நிஜம் புதைந்து கிடக்க


3. தும்பி

எனது ஹெலிகாப்ட்டரை

பறக்க விட்டேன்

எங்கும் தும்பிகள்

எனது தும்பிகளை

பறக்க விட்டேன்

எங்கும் வெடிகுண்டு விமானங்கள்

எனது வெடிகுண்டு விமானங்களை

பறக்க விட்டேன்

எங்கும் அமைதி

எனது அமைதியை

பறக்க விட்டேன்

எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்


4. களைதல்

என்னை களைந்தேன்

என் உடல் இருந்தது

என் உடலை களைந்தேன்

நான் இருந்தது

நானை களைந்தேன்

வெற்றிடத்துச்

சூனிய வெளி இருந்தது

சூனிய வெளியை களைந்தேன்

ஒன்றுமே இல்லை

5.இசை/ஓசை

வயலினில்
ஒரு நாணாய்
என்னை போடுங்கள்
அப்பொழுதேனும்
ஒலிக்கிறேனா
எனப்பார்ப்போம்

அவ்வளவு துல்லியமாக
அவ்வளவு மெல்லியதாக
அவ்வளவு கூர்மையாக

எல்லா நாண்களுடனும்
ஒன்று சேர்ந்து
ஒலித்தப்படி

உள் ஆழத்தில்
ஒலியின்
ஆளரவமற்ற
இடத்தில்
மிக மிக மெலிதாய்
ஒரு எதிரொலி கேட்கிறது


கூர்ந்து கேட்டால்

அதே துல்லியம்
அதே மென்மை
அதே கூர்மை

Friday, July 10, 2009

ஆத்மாநாம் கவிதைகள்

இவரை பற்றி எங்கயாது போய் தெரிந்துகொள்ளுங்கள். எனக்கு ஒன்றுமே தெரியாது , இவரின் கவிதையும் இவரையும் தவிர! எனக்கு பிடித்த பத்து இதோ

சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பரை சொல்லுங்கள்

நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்

என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன்

நீங்கள் யாரென்று சொல்லுங்கள்

உங்கள் நண்பர்களை சொல்லுகிறேன்

முழித்த முழி முழியையே முழுங்கும் போல

நீங்கள் யாரானால் என்ன

நான் யாரானால் என்ன

அனாவசியக் கேள்விகள்

அனாவசிய பதில்கள்

எதையும் நிரூபிக்காமல்

சற்று சும்மா இருங்கள்

சில எதிர்கால நிஜங்கள்

அரிசி மூட்டையிலிருந்து சிதறிய

அரிசி மணிகள் போல்

தப்பி தவறி திசை தடுமாறி ஓடி வந்த

சின்னஞ்சிறு சிற்றெறும்பு போல்

மொசைக் தரையில் தவறிப்போன

ஒற்றை குண்டூசி போல்

இவற்றைப் போல் இன்னும்

ஆயிரக்கணக்கான போல்கள்

பழக்கம்

எனக்கு கிடைத்த சதுரத்தில்

நடை பழகிக்கொண்டிருக்கிறேன்

கால்கள் வலுவேறின

நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று

என் நடப்பைத்

தெரிந்துகொண்ட சில மாக்கள்

விளம்பினர்

ரோட்டிலேயே நடக்க முடியவில்லை

ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம்

நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா

என் கால்கள்

என் நடை

என் சதுரம்

ஐயோ

சொன்னால் மறுக்கிறார்கள்

எழுதினால் நிராகிக்கிறார்கள்

தாக்கினால் தாங்குகிறார்கள்

சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்

அற்புத உலகம்

அற்புத மாக்கள்

சுற்றி

அரச மரத்தை சுற்றி

பிறந்த பிள்ளை ஒருவன்

வேப்ப மரத்தை சுற்றி

பிறந்த பிள்ளை ஒருவன்

எந்த மரத்தை சுற்றி

பிறந்த பிள்ளை இவன்

ஏதேனும் தறுதலை மரமாக இருக்குமோ?

மீதி ஐந்து அப்பாலிக்கா