1.ஒரு தலைப்பிடாத கவிதையாய்
வாழ்க்கை
ஒரு நாள் இரண்டு நாள் என
தொடர்ந்து நாட்களை எண்ணினேன்
காலையை தொடர்ந்து மாலை
இரவாகும் காலப் புணர்ச்சியில்
பிரமித்து நின்றேன்
கடற்கரையில்
2.அற்புதமாய் புலர்ந்த காலை
நீள நிழல்கள்
நீலத்தில் கோலமிட
வண்ணக்கலவயாய் உலகம்
எங்கும் விரிந்து கெட்டியாய் தரை
என் காலடியில்
நிஜம் புதைந்து கிடக்க
3. தும்பி
எனது ஹெலிகாப்ட்டரை
பறக்க விட்டேன்
எங்கும் தும்பிகள்
எனது தும்பிகளை
பறக்க விட்டேன்
எங்கும் வெடிகுண்டு விமானங்கள்
எனது வெடிகுண்டு விமானங்களை
பறக்க விட்டேன்
எங்கும் அமைதி
எனது அமைதியை
பறக்க விட்டேன்
எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்
4. களைதல்
என்னை களைந்தேன்
என் உடல் இருந்தது
என் உடலை களைந்தேன்
நான் இருந்தது
நானை களைந்தேன்
வெற்றிடத்துச்
சூனிய வெளி இருந்தது
சூனிய வெளியை களைந்தேன்
ஒன்றுமே இல்லை
5.இசை/ஓசை
வயலினில்
ஒரு நாணாய்
என்னை போடுங்கள்
அப்பொழுதேனும்
ஒலிக்கிறேனா
எனப்பார்ப்போம்
அவ்வளவு துல்லியமாக
அவ்வளவு மெல்லியதாக
அவ்வளவு கூர்மையாக
எல்லா நாண்களுடனும்
ஒன்று சேர்ந்து
ஒலித்தப்படி
உள் ஆழத்தில்
ஒலியின்
ஆளரவமற்ற
இடத்தில்
மிக மிக மெலிதாய்
ஒரு எதிரொலி கேட்கிறது
கூர்ந்து கேட்டால்
அதே துல்லியம்
அதே மென்மை
அதே கூர்மை
2 comments:
நல்ல மீள் துணை செய்யும் பதிவு
மிக்க நன்றி நேசமித்ரன் :)
Post a Comment