Thursday, January 20, 2011

வகுப்பறை

இன்றுடன் *அஃபீஷியலாக* எனக்கும் வகுப்பறைகளுக்குமான உறவு முடிகிறது.கொஞ்சம் தல்லாஞ்சு மனசு கிடப்பதால் இந்த பதிவு.(உங்க கெட்ட நேரம்)

வகுப்பறைகளுக்கும் எனக்குமான வரலாற்று உறவு நான் 3 வயதில் இருக்கும்போது ஆரம்பித்தது.முதல் நாளே சரித்தரத்தில் என்னை என் நண்பன் விஜயகுமார் இடம்பெற வைத்தான்.எல்லோரிடம் வரிசையில் வந்து பெயர் கேட்டான்.உயரமாக இருப்பதால் நான் கடைசி பெஞ்ச் ,என்னிடம் வந்து கேட்டபொழுது என் பெயரை எப்படி உச்சரித்து தொலைத்தேன் என்று தெரியவில்லை ,அவனுக்கு அது வெறியேத்திவிட்டதா என்றும் இன்றளவிலும் புரியவில்லை.நிறுத்தி நிதானமாக ஒரு மூன்று நிமிடங்கள் ரத்தம் வரும் வரை கடித்து வைத்தான்.நான் அலறக்கூடவில்லை அவன் கடிப்பதையே பார்த்துக்கொண்டிருந்த நினைவு.அப்பறம் ஆயாம்மா வந்து எனக்கு மருந்து போட கூட்டிக்கொண்டுபோக இவன் தரையில் புரண்டு அழ ஆரம்பித்துவிட்டான் , என்னை அம்போவென்று விட்டுவிட்டு இவனை அரை மணி நேரம் சமாதானப்படுத்தினார்கள்.

விளையாட்டுகளில் முன்பு ஆர்வம் இருந்தது.அம்மாவின் முழு ஈடுபாட்டால் தமிழ்/ஆங்கிலம் இரண்டு பேச்சுப்போட்டிகளிலும் கலந்து கொள்ள செய்வார் சிறு வயதிலிருந்து.ஒரே ஒரு கோட் மட்டும் தான் சொல்வேன் திரும்ப திரும்ப (ராபர்ட் ஃப்ராஸ்டின் Woods are lovely) அதை சிறு வயதில் இருக்கும்போது அம்மா அபினயம் பிடித்து சொல்லி காட்டுவார்.அதையே விவரம் தெரியும் முன்வரை பயன்படுத்தியும் வந்தேன்.பேச்சுப்போட்டி என்றால் நீங்கள் தூத்துக்குடி எட்டையபுரம் மற்றும் பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்குப்போய் வரலாம் ,பஸ் பிராயணம் என்றால் எனக்கு அலாதிப்பிரியம்.அதுபோக கைதட்டு சின்ன வயதில் பிடித்திருந்தது.கலை இலக்கிய இரவுகளுக்கு குடும்பத்தோடு போவதால் அதில் வரும் சிலரை பார்த்து பலகுரல் கற்றுக்கொண்டேன்.சரியாக வராவிடினும் அப்ப்போதைக்கு அப்போ ஒன்றிரண்டு வொர்க் அவுட் ஆகும்.


இதுக்கும் வகுப்பறைக்கும் சம்பந்தமே இல்லை தான்.ஆனால் இவை தான் சிறு வயது நினைவுகளாக இருக்கின்றன.என்னால் வகுப்பில் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளித்துவிட முடிந்திருக்கிறது.யோசிக்க வைக்கும்படியான கேளிவகளுக்கு பதிலே அளிக்காமல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருப்பேன்.8ஆம் கிளாஸ் வரை ஹிட் அண்ட் ரன் வகையான அறிவாக வளர்த்துக்கொண்டேன். அதன் பிறகு வேதியல் ஒன்றுமே புரியவில்லை என்று அப்பா வனமூர்த்தி சாரிடம் சேர்த்து விட்டார்.19 வருட படிப்பில் நான் நன்றிக்கடன் பட்டிருப்பத்தாக நினைக்கும் ஒரே நபர்.வெறும் பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி,உத்தியோகமோ வங்கியில் . காலை மாலை ட்யூஷன் .எளிமையாக சொல்லித்தருவார்,ஒன்று விடாமல்.அவருக்கு தெரிந்திருக்கக்கூடிய விஷயங்களை அற்புதமாக விளக்குவார்,தெள்ள்த்தெளிவான புரிதல் இருந்தது அவரிடம்.அதை அப்படியே நம் மனதுக்களிக்கும் வல்லமையும் இருந்தது.படிப்பில் ஒரு வகையான பற்றும் ஏற்பட்டது.10 ஆம் கிளாஸ் வரை வேதியலை விருப்பப்பாடமாக கொண்டு படித்து வந்தேன்.


+1,+2 எரிச்சல் மிகுந்த ஆண்டுகள்.திருச்சங்கோடின் (வித்யாவிகாஸ்) வாழ்க்கையைப்பற்றியும் அதில் ஏன் குழந்தைகளை சேர்க்கக்கூடாது என்ற அபாயத்தைப்பற்றியும் ஒரு தனி பதிவே எழுதலாம்.அதுவரை அல்லாத அதிகப்பணம் கொடுத்து படித்தது அப்பொழுது தான் (இரண்டு வருஷத்துக்கு எல்லாம் சேர்த்து 80000 வரலாம்) அது ஒரு டார்ச்சர் ஹவுஸ் எல்லாரையும் வாயில் டியூப் போட்டு ஏத்துவது மாதிரி படிப்பை ஏற்றிவிடுவார்கள்.அப்பொழுதும் இரண்டு மாதம் விடுப்பெடுத்துக்கொண்டு வனமூர்த்தி சாரிடம் வந்து தனியாக வேதியல் கற்றேன்.

வகுப்பறை படிப்பு மட்டுமே என் வாழ்க்கையாக இருந்து வந்திருக்கிறது இதில் நான் செய்யாமல் விட்டவை மிக அதிகம். எப்படியாக இருந்திருக்கலாம் என்று இப்பொழுது ஒரு ஆசை வருகிறது .இவையெல்லம் என் எண்ணங்களே ,பலவற்றுக்கு என்னிடம் இப்பொழுது தெளிவான தர்க்கம் இல்லை.ஆனால் இப்பொழுது இருக்கும் புரிதலை வைத்து சிலவற்றை எழுதுகிறேன்.இதில் சிலவற்றை பெற்றோர்களுக்கான வேண்டுதலாகவும் வைக்கிறேன்.நான் தற்சமையும் அறிவியல் சார்த்து இயங்கி வருவதால் அதன் பார்வை அதிகமாக இருக்கும்.பொதுமைப்படுத்த முயற்ச்சிக்கவில்லை.


முதல் ரேங்கின் மீது தீராக்காதல் பெற்றோர்களுக்கு, ஒரு வித தீவிர மனநிலையில் இதை தங்கள் செல்வங்கள் எடுத்துவிட வேண்டும் என்று குழந்தைகளை கதற விடுகிறார்கள்.பின்னால் என் தர்க்கத்தை அளிக்கிறேன்.ஒரு சின்ன கேள்வி மட்டும் இப்பொழுது,போன வருஷம் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தவர் நினைவில் இருக்கிறாரா உங்களுக்கு? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் இப்பொழுது?

வெற்றி தோல்விக்கான விளக்கங்கள் ஆளுக்காள் மாறுபடும்,மதிப்பெண்ணை யார்ட்ஸ்டிக்காக வைத்து இயங்கிக்கொண்டிருப்பது என்னளவில் ஆரோக்கியமான சூழல் இல்லை.என் துறையில் அறிவியலில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமே நடந்துவிடவில்லை.இத்தனைக்கும் 50களில் மின்வேதியலில் விற்ப்பன்னர்களை கொண்டிருந்த நாடு இது.


நான் செய்த தவறாக நினைப்பது ஒரு உள்ளார்த புரிதலே இல்லாமல் படித்து படித்து மேலே வந்ததைத்தான் (எல்லாவற்றிலும் இல்லை).எல்லாவற்றுக்கும் அடிப்படைகள் முக்கியமானவை.கொஞ்ச நாள் முன்னாடி circumference என்றால் என்னவென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.சுற்றளவு என்ற தமிழ் வார்த்தை தெரியாது. circumference என்றால் அதன் சூத்திரம் மட்டும் மண்டையில் வந்து நிற்கிறது.குழந்தைகளுக்கு அனைத்தையும் மண்டையில் தினிக்கத்தேவையில்லை.நினைவாற்றலை விட அவர்கள் புலன்களுக்கும் ஒரு உள்ளார்ந்த பிரக்ஞையை உண்டாக்கும் வண்ணம் எடுத்துச்சொல்ல வேண்டும்.மேலே போகும்பொழுது அவர்கள் இந்த சின்ன சின்ன புரிதல்களைதான் அஸ்திவாரமாக வைத்து உள்வாங்கிக்கொள்வார்கள்.


காரணம் இல்லாமல் ஒன்றுமே இருந்துவிடாது.ஒரு நிகழ்வுக்கோ ஒரு இருப்புக்கோ ஒரு ரசாயன மாற்றத்துக்கோ காரணங்கள் இருக்கும்,இது நடக்குது என்று சொல்லிக்கொடுக்க படிப்பு தேவையில்லை.மிகப்பெரிய சறுக்கலை சந்திக்கிறோம் நாம் அங்கே! ஐரோப்பியாவில் வந்து இரண்டு நாட்டு கல்விமுறைகளில் நான் பார்த்தது ,அங்கே எந்த மாணவனும் கேள்வி கேட்காமல் சும்மா தகவல்களாக (facts) எதையும் ஒப்புக்கொள்வதில்லை,கேள்வி கேட்பதன் அவசியம் அவர்கள் கல்வியிலேயே காணக்கிடைக்கிறது.ஏன் நிகழ்கிறது எந்த குணமிருந்ததால் இவ்வகையான மாற்றம் நிகழ்கிறது என்ற புரிதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு நாமே ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களைத்தாண்டி சிலவற்றை நிகழ்த்திக்காட்டலாம்.


சிறு குழந்தைகளுக்கிருக்கும் கேள்விகேட்கும் தன்மையை தக்கவைத்துக்கொள்வதில் தான் பின்னாளின் அறிவாற்றல் இருக்கிறதாக நம்புகிறேன்.பிடித்த பாடங்களில் உள்ளவற்றை மட்டும் அதன் உள்ளர்த்தங்களோடும் காரணங்களோடும் விளங்கிக்கொண்டு படித்துவிட்டால் போதும்.பின்னால் வீடு பங்களா எல்லாம் கட்டிக்கொள்ளலாம்.கணிதத்தை சூத்திரங்களாகவும் அதை வைத்து செய்யக்கூடிய வித்தையாகவுமே நம் பாடத்திட்டங்கள் பார்க்கின்றன.சூத்திரங்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை.அவை ஒரு தத்துவ அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.அவை உருவான விதத்தை விளங்கிக்கொள்ளாமல் அவற்றை உபயோகப்படுத்திக்கொண்டிருப்பது கேல்குலேட்டர் செய்யும் வேலை.

இவ்வளவு நீட்டமாக போகும் என்று நினைக்கவில்லை.இருந்தாலும் ஐரோப்பிய பாடத்திட்டங்களைப்பற்றி இன்னும் விரிவாக எழுத எண்ணம்.இதில் நிறைய மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் தெரிவியுங்கள்.உபயோகமாக இருந்தது என்று தோன்றினால் மேலும் எழுதுகிறேன்.

10 comments:

Surya here!! said...

Nice one.. Suggest you to go for more in this topic..

Prakash said...

Thanks da.Will try to

ஆயில்யன் said...

/முதல் ரேங்கின் மீது தீராக்காதல் பெற்றோர்களுக்கு, ஒரு வித தீவிர மனநிலையில் இதை தங்கள் செல்வங்கள் எடுத்துவிட வேண்டும் என்று குழந்தைகளை கதற விடுகிறார்கள்.//

அது ஒரு வித நப்பாசை - நம்மால் முடியவில்லை நம் பிள்ளைகளாவது எடுக்கட்டுமே என்பதாக இருக்ககூடும் ! இது படிப்பு என்ற ஒரு தளத்தில் மட்டுமல்ல இன்ன பிற பாட்டு எழுத்து என எல்லா தளங்களிலும் பரவலாக இருக்கிறதே!

//கேள்வி கேட்பதன் அவசியம் அவர்கள் கல்வியிலேயே காணக்கிடைக்கிறது./

நம் பள்ளிக்கல்வி முறையும் கூட கேள்விகள் கேக்கவும் அதற்கான பதில்களினை சொல்லிடவும் தயாராகவே இருப்பதாகவே நான் நினைக்கிறேன்! நிறைய பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தங்களுக்குள் ஒரு வட்டமிட்டுக்கொண்டு அதற்குள் இருந்துக்கொண்டு வெளியே வர முடியாது இருப்பதை உணரமுடிகிறது .

//சூத்திரங்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை.அவை ஒரு தத்துவ அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.அவை உருவான விதத்தை விளங்கிக்கொள்ளாமல் அவற்றை உபயோகப்படுத்திக்கொண்டிருப்பது கேல்குலேட்டர் செய்யும் வேலை.//

சம்மதிக்கிறேன்! :)

//இவ்வளவு நீட்டமாக போகும் என்று நினைக்கவில்லை//
திருப்தியான பதிவுதானே! தொடருங்கள்
மேலும் ஐரோப்பாவின் கல்விமுறை,வாய்ப்புகள் வேதியியல் துறை மட்டுமின்றி மேலும் பல தொழில்நுட்பம் சார்ந்த துறைகளுக்குமான வாய்ப்புகள் பற்றியும் பகிருங்கள்! நன்றி & வாழ்த்துகளுடன்! :)

மதுரை சரவணன் said...

//சிறு குழந்தைகளுக்கிருக்கும் கேள்விகேட்கும் தன்மையை தக்கவைத்துக்கொள்வதில் தான் பின்னாளின் அறிவாற்றல் இருக்கிறதாக நம்புகிறேன்.பிடித்த பாடங்களில் உள்ளவற்றை மட்டும் அதன் உள்ளர்த்தங்களோடும் காரணங்களோடும் விளங்கிக்கொண்டு படித்துவிட்டால் போதும்.பின்னால் வீடு பங்களா எல்லாம் கட்டிக்கொள்ளலாம்.கணிதத்தை சூத்திரங்களாகவும் அதை வைத்து செய்யக்கூடிய வித்தையாகவுமே நம் பாடத்திட்டங்கள் பார்க்கின்றன.சூத்திரங்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை.//


அருமையான பகிர்வு. நாம் கேள்விகள் கேட்டாலே அடித்து துவைத்து விடுகிறோம். மேலும் நம் கல்வி முறைகள் சிந்திக்கும் விதமாக மாறிக் கொண்டு இருக்கிறது. வாழ்த்துக்கள்

Prakash said...

ஆயில்யன்,

//நம் பள்ளிக்கல்வி முறையும் கூட கேள்விகள் கேக்கவும் அதற்கான பதில்களினை சொல்லிடவும் தயாராகவே இருப்பதாகவே நான் நினைக்கிறேன்! நிறைய பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தங்களுக்குள் ஒரு வட்டமிட்டுக்கொண்டு அதற்குள் இருந்துக்கொண்டு வெளியே வர முடியாது இருப்பதை உணரமுடிகிறது .//

இல்லை ஆயில்யன் மறுக்கிறேன்.Sin 90 என்னவென்றுத்தெரியும் ,ஏன் ஒன்றென்றுத்தெரியுமா? எனக்குத்தெரியாது.அவகாட்ரோ எண் என்னவென்றுத்தெரியும் , எப்படி அந்த எண்ணை வந்தடைந்தார்கள் எனத்தெரியுமா? அது அவகாட்ரோவே கண்டுபிடிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.

ஒரு வேதியல் மாற்றம் ஒரு பயன்பாட்டுக்கு பயன்படுகிறது என்று வைத்துக்கொள்வோம் நம் கல்வி முறை நமக்கு கற்றுக்கொடுப்பது அது எப்படி வேலை செய்கிறது என்பதை,it teaches us how stuffs work. ஆனால் அது அல்ல அறிவியல்,ஆராய்பவர் இந்த பொருள்களுக்குள் நடக்கும் இந்த வேதியல் மாற்றத்தை இப்படியான பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என்று யோசித்திருப்பார் பார்த்தீர்களா , அந்த சிந்தனா முறையை உருவாக்குவது தான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்.Education is not about giving thoughts but a thought process. அந்த சிந்தனா முறையை வந்தடைய நமக்கு அடிப்படைகள் தான் உதவும்.அதை எப்படி வரலாற்றுப்பூர்வமாகவும் முழுப்பரிமானத்தோடும் பார்க்கிறோம் என்பது தான் முக்கியம் என நினைக்கிறேன்.

மதுரை சரவணன் ,நன்றி :)

H said...

உங்களுடைய அவதானிப்புகளை நிச்சயம் விரிவாக எழுதுங்கள், பயன்படும்.

ஐரோப்பிய பாடத்திட்டங்கள் கேள்வி கேட்பதை ஊக்கப்படுத்தினாலும் கூட, நிறய விசயங்களில் ஒருவித நோர்மாட்டிவிட்டி அமுலில் இருப்பதை உணர்த்திவிட்டே அக்கேள்விகளின் வெளிப்பாட்டை அவர்கள் அனுமதிப்பது உண்டு.

உதாரணமாய் இங்கே ஐக்கிய இராச்சியத்தில் நியூ லேபர் வந்த பொழுது அவர்கள் blackboardபோன்ற வார்த்தைகளைக் கூட racially sensitive ஆனதாய்க் கருதி நீக்க முனைந்தபொழுது நிறையவே சிக்கல்கள் எழுந்தன. ஒருவித அசாதாரணமான, பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் மூடிமறைப்புகள், சாட்டுச்சொல்லல்கள் தான் இங்கே வழக்கம். க்ரியேஷனிசம் கற்பிப்பதா, டார்வினிசம் கற்பிப்பதா விவாதங்கள். Faith schoolsகளுக்கு வழங்கப்படும் autonomy என்று இவர்களுடைய communitity based வாக்கு வங்கிகளைத் தக்க வைக்கும் சிஸ்டத்தில் ஏகப்பட்ட கோளாறு. நான் இங்கு சொல்பவை வெளிப்படையாகத் தெரியும் உதாரணங்கள் மட்டுமே. இன்னும் அப்ஸ்ராக்ட்-ஆகப் பேசப்போனால் பாவ்லோ ஃப்ரெய்ரே-இன் `pedagogy of the opressed' நூலில் சொல்லப்படும் கருத்துக்களை அடிப்படையாய்க் கொண்டெழக் கூடிய விமர்சனங்களே என்னுடையவை.

நிறைய விஷயங்களில் இவர்கள் ப்ரிஸ்கிரிப்டிவ். எனது அனுபவத்தில் எல்லாம் தலைகீழாய் இருக்கிறது. சர்வதேச அபிவிருத்தி தொடர்பான எனது கற்கைநெறி மொடியூல்கள் கோல்ட்மான் சாக்ஸ் இனால் பரிந்துரைக்கப்பட்ட ஐடியாக்களின்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கேள்வி கேட்கப் போனால் `பாடநெறியைத் தேர்வு செய்வது உன்னுடைய விருப்பம்` என்பார்கள். போலித் தெரிவுச் சுதந்திரம். பாடநெறிக்கு அப்புறம் ஏன் `Third World Studies' என்று பெயர்வைத்தாய் என்று கேட்க அதிகாரம் கிடையாது.

இதேமாதிரி வெறுத்துப்போய் சுரேஷ் கனகராஜா கோபம் கொப்பளிக்க ஒரு புத்தகமே போட்டிருக்கார். Geopolotics of academic writing என்று. யுனிவர்ஸிட்டி ஒஃப் பிற்ஸ்பேர்க் வெளியீடாய்க் கிடைக்கிறது.

Prakash said...

ஹரி ,கேள்வி கேட்பது என்ற அடிப்படை மிக முக்கியமானதாக நான் முன்வைக்க சமூக கலாச்சார காரணங்கள் உண்டு.ஐரோப்பிய சமூகத்தில் சில முக்கியமான ஜனநாயக ஒழுங்குகள் எனக்கு பிடித்தமானவை.வார்சாவில் ஒரு வகுப்பு 45 நிமிடம்,மேலே ஆசிரியர் எடுக்க நினைத்தால் மாணவரின் அனுமதி வேண்டும்.மாணவரின் நேரத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

த.நாவில் வாத்தியார் என்றாலே கையைக்கட்டிக்கொண்டு பாடம் கேட்க வேண்டும் சில இடங்களில்,கேள்விகளே அடிக்கும் தொனியில் இருக்கும் எனது முதுகலை வகுப்புகளில் கேள்வி எழுப்பவதே தடித்தனம் அங்கே.இது பாடத்திட்டம் அல்லாத சமூக கலாச்சார பிரச்சனை.பாடத்திட்டதின் பிரச்சனையைத்தான் நான் பதிவில் பேசியுள்ளேன்.

இவர் எழுதிய புத்தகத்தை படிக்க வேண்டுமா ,குப்பை இது என்றெல்லாம் ஒரு ஆட்டோனோமஸ் கல்லூரியில் இங்கே கேட்கவே முடியாது.அரியர் போட்டு உட்கார வைத்துவிடும் அளவுக்கு வெறுப்பு வளரும்.பாட திட்டங்களில் தேர்வு சுதந்திரம் என்பது முழுமையானது அல்ல தான்,ஆனால் கேள்விகள் அனுமதிக்கப்படும் சூழலில் வரையுறைக்குட்பட்டு பாடத்திட்டங்கள் இருந்தாலுமே அது பரந்த வாசிப்புக்கு நம்மை உந்தித்தள்ளும் எல்லாவற்றையும் சிஸ்டம் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.அது கொடுக்கவேண்டியது சிந்தனா முறையை , நீங்கள் பார்ப்பது சிந்தனை வேறுபாடுகளை.The thought process which results from an education which gives space for questions (however debatable the limitations of the space are) is commendable and questioning the system ultimately comes from the thought process.You can even reject the system.Am calling the system back home perilous as it just puts the facts on your face ,on which basis you perceive it? you dont have any background to accept or reject it ,all you can do it is to comprehend it in the best way you can and thats not what a good education system does.

Anonymous said...

உண்மைதான், என்னதான் விமர்சனமிருந்தாலும் உங்கள் பார்வையுடன் எமது சூழல்களில் இதுபோன்ற மாற்றுக்களுக்கான தேவையுடன் உடன்படுகிறேன். நீங்கள் மேலும் இதுகுறித்து எழுதவேண்டும்.

ஆனால், அதற்காய் ஐரோப்பிய ஸிஸ்டங்களை ஆதரிக்க நான் தயாராயில்லை. நான் முன்சொன்னவை போக, எங்களுடைய சமூகங்களில் இருப்பது போதாது என்று வந்துசேர்ந்திருக்கிற competition driven கல்வியூட்டல்முறை கூட ஐரோப்பிய/அமெரிக்கத்தர அந்தஸ்து நோக்கிய சமூக மேல்நிலையாக்கத்தின் ஒரு அங்கம்தானே?

அன்புடன்
ஹரி

Unknown said...

உங்க ட்விட்டைப் பார்த்துட்டு இங்க இதைப் பதிகிறேன். வரலாறு முக்கியம்கிறதால: நான் தான் மத்தவங்களை அடிச்சிருக்கேன் சின்ன வயசில:-)

மிகுந்த விருப்பப்பட்டு, +2 முடிய நான் செய்தது, வருடத் தொடக்கத்தில், தமிழ்மூலம் படிக்கும் தோழிகளிடம் இருந்து அறிவியல்/புவியியல் தொடர்பான பாடங்களை வாங்கிப் படித்து விடுவேன். (என் தந்தையின் தொந்திரவால், ஆங்கிலமூலம் படிப்பு). இது எனக்கு நிசமாவே ஒரு தெளிவைக் கொடுத்தது (கணக்கு ரொம்பப் பிடிக்கும், ஆங்கிலத்தில் இருந்தாலும் சட்னு படிச்சிருவேன்).

ஓரிரு வாரங்களுக்குமுன், ஒரு பதிவு போட்டேன், ஏன் இந்த மாற்றம், எப்ப இந்த மாற்றம்னு. தெளிவாப் படித்தவர்கள் இன்னும் இந்தியாவில் வந்தால் தான் நாடு முன்னேறும் என்பது எ.தா.அ. அமெரிக்காவில், பொதுப் பள்ளிகளில் 5வது முடிய போட்டியே சுத்தமாக இல்லை. உயர்நிலைப் பள்ளி அளவில் தான், கொக்கியிட்டு, முன்னேறும் விருப்பம் இருக்கும் குழந்தைகள் விரும்பிப் படிக்கின்றனர் அல்லது விளையாடுகின்றனர்.... Essentially, வாழ்வில் போட்டியிடும் மனப்பான்மையோடு (படிப்பில் ஜெயிக்கிறதை விட வாழ்க்கையில ஜெயிக்கிற போட்டிமனப்பான்மை) வளர்கின்றனர்...

ராம்ஜி_யாஹூ said...

அருமை பகிர்விற்கு நன்றிகள்.