சரியாக நினைவு இருக்கிறது , நான் பத்தாம் கிளாசில் தான் பிட்டு முதல் வாதத்தை கடைபிடித்தேன்.இந்த பொருள் முதல்/கருத்து முதல் வாதம் போல் பிட்டு முதல் வாதம் கஷ்டமில்லை.எளிதாக புரியும் மொழி நடையில் நாமளே எழுதிக்கொள்வது தான் பிட்.
நான் பத்தாம் கிளாசில் எல்லாம் அம்புட்டு தைரிய சாலி இல்லை ( இன்றளவிலும் இல்லை தான்) ஆனால் எங்களுக்கு வழக்கமாக எடுக்கும் புவியியல் ஆசிரியை நீண்ட விடுப்பு எடுத்து விட்டார் , அவருக்கு பதில் படு திராபையாக எடுக்கும் ஒரு ஆசிரியை வந்தார்.அந்த மாடெல் பரீட்சையில் ஒரு எழவும் தெரியவில்லை.அப்பொழுது மைக்ரோ செராக்ஸ் , சின்ன பிட் எல்லாம் என் பள்ளியில் அம்புட்ட்டு பிரசித்தி இல்லை.நண்பன் ஒருவன் ஓம் , பிள்ளையார் சுழி எல்லாம் போடு பெரிய நோட்டில் இருந்து கிழித்து பிட் எழுதி கொண்டுவந்திருந்தான்.எல்லாரும் எழுதி முடித்த பிறகே எனக்கு கொடுத்தார்கள் அதை.எனக்கு எழுத நேரமில்லை , அதை அப்படியே கட்டி பேப்பருடன் கொடுத்திவிட்டேன். டின் கட்டிவிட்டார்கள்.
ஆனால் நணபன் ஒருவன் படு நேர்த்தியாக பத்தாம் கிளாசிலேயே பிட் அடிப்பான். வரலாற்று பாடத்தில் ஒவ்வொரு பிட்டையும் ஒவ்வொரு இடத்தில் வைப்பான்.இடம் மறந்து விட்டால்? எந்தெந்த பிட் எங்கெங்கு உள்ளது என்பதற்க்கே ஒரு பிட் எழுதுவான்.அது எங்கே இருக்கும் என்னும் செய்தியை கையில் எழுதிக்கொள்வான். இப்படியாக உலகப்போரை உள்ளாடைக்குள் வைத்த புகழ் அவனையே சாரும்.
அதன் பிறகு நான் +1,+2 ஒரு ஜெயிலில் படித்தேன் அங்கே இதுக்கெல்லாம் கசையடியில் இருந்து அனைத்து அநாகரீக தண்டனைகளும் உண்டு.அதற்கு பயந்தே அடிக்கவில்லை.
என் கல்லூரியில் ஜீவிக்க ,காற்று , நீர் , சாப்படு , தங்குமிடம் போல் பிட் அடிப்பது ஒரு இன்றியமையாத விஷயம்.முன்னாடி இருந்தவர்களி பற்றி தெரியாது , ஆனால் நான் படித்த 4 ஆண்டுகளில் எனக்கு தெரிந்து ஒரு வகுப்பில் ஒன்றிருவரை தவிர அனைவரும் அடிப்பார்கள் என்றே சொல்லலாம்.
பல நேரங்களில் வகுப்பில் அனைவருமே ஒரே பதில் எழுதி ஆசிரியரை மண்டை காய வைத்திருக்கிறோம்.நம்க்கு தெரிந்த பதிலை கேள்விதாளில் எழுதி விடலாம் , அடுத்தவனிடம் அவனுக்கு தெரிந்ததை எழுதசொல்லி மாற்றிக்கொள்ளலாம்.பிட் பேப்பரை பார்த்து சந்தேகப்படுகிறார்களா? முந்தய கேள்விதாளில் பிட் எழுதி ,அதை எடுத்துக்கொண்டு போய் விடலாம். பார்ப்பவர்கள் நாம் கேள்வித்தாளில் விடை எழுதி பழகியதாக நினைப்பார்கள்..கொஞ்சம் படித்து கொஞ்சம் பிட் எழுதுதல் நலம். இல்லாவிடின் காலை பரீட்சைக்கு மதியத்தில் எழுத வேண்டிய பதிலை எழுதும் அபாயம் உள்ளது.
நிற்க.
பிட் அடிப்பது சரியா தவறா? இது அறிவு திருட்டு இல்லையா? நம்மிடம் இல்லாத அறிவை இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு நேர்மையற்ற செயல் தான்.இந்த கேள்விக்கு என்னிடம் விடையே இல்லை. இங்கே நான் முதுகலையில் பல திறந்த புத்தகம் பரீட்சைகளை எதிர்க்கொள்கிறேன்.பார்த்து எழுதவது என்னும் தேவையே இங்கே இல்லை.இந்திய கல்விமுறையில் அப்படியா என்ற கேள்விக்கு பொதுவான விடை இருப்பதாக எனக்கு தெரியவில்லை.ஆனால் என் கல்லூரியை வைத்து என்னால் தீர்க்கமாகவே பேச முடியும்.ஒரு ஐம்பது எண்களை கொடுத்து இந்த கனிமத்துக்கு இந்த எழவு குனம் இதை மொன்னைத்தனமாக மனப்பாடம் செய் இதை இப்படியே எழுது போன்ற கேள்விகள் உலக நாடுகளில் எங்கேனும் கேட்கப்படுகிறதா என தெரியவில்லை.பெரும்பாலுமான சூத்திரங்கள் பெரியது , சமன்பாடுகள் பல்லை உடைக்க கூடியது நடக்கும் தொழில்நுட்பங்கள் தேர்ந்த அனுபவத்தால் மட்டுமே மனதில் நிற்க கூடியது , இதை அனைத்தயும் நினைவில் நிறுத்து பின் வாந்தியெடு என்னும் அதிகாரத்தனமான கேள்விகள் கல்விமுறையை அதள பாதாள்த்துக்கு கொண்டு செல்லும் வல்லமை கொண்டுவை.
அறிவு நேர்மை இருப்பது அவசியம்.அதனினும் அவசியம் அதை உருவாக்கும் கல்வி முறை என்று நினைக்கிறேன்.இதை நான் முடிவாகவோ நியாயப்படுத்தவோ எல்லாம் சொல்லவில்லை.இப்படியான பாடத்திட்டம் இருக்கும்வறை இது ஏதோ ஒரு வழியில் நடக்கும். மதிப்பெண்கள் தான் வாழ்க்கை என்பது போல் ஒரு சூழலில் எல்லாரையும் தள்ளிவிட்டு தப்புசெய்யதூண்டும் ஒரு விஷயத்தை மறுபரிசீலனையாவது செய்ய வேண்டும்.