Thursday, February 11, 2010

நித்தம் பிறக்கும் ஓர் பாடல் - கைலாஷ் கெரின் தேரி தீவாணி

இந்த பாடலை முதல் முறை எப்பொழுது கேட்டேன் என்று நினைவில்லை. ஆனால் கேட்ட முதல் முறையே நிரம்பு மண்டலத்தின் உள் சென்று என்னை தூக்கியடித்த பாடல் இது. இதை கேட்காதவர்கள் ஒருமுறை கேட்டு விடவும்.




பாகிஸ்தானிய இசையை பற்றியும் அதன் பிறகு நான் தொடர்ந்து கேட்டுவரும் சூபி / கவ்வாலி வகை இசையை பற்றியும் தனி பதிவெழுத ஆசை. அதற்குமுன் நான் இந்த பாடலை பற்றி ஒரு சிறு குறிப்பாவது எழுத வேண்டும் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன்.

இந்திய இசையை தொடர்ந்து பின் தொடர்பவர்கள் கண்டிப்பாக கைலாஷ் கெரைஅறிந்திருப்பார்கள்.பதபடுத்தபட்ட இனிமையான குரல்களுக்கிடையில் நாட்டுப்புற இசையின் அடையாளமான கம்பீரமான குரலை இந்திய சினிமா இசைக்கு இன்று அளித்துக்கொண்டிருப்பவர் கைலாஷ். அவரது தந்தை ஒரு நாட்டுப்புற இசை கலைஞர் , பல்வேறு தடைகளையும் வறுமையும் தாண்டி மிகவும் சிரமபட்டே கைலாஷ் சினிமாவிற்குள் நுழைந்தார்.


அல்லா கே பந்தே பாடல் வந்தது தான் தாமதம் மொத்த இந்தி திரையிசை உலகமும் திரும்பி பார்த்தது.எப்படி கீழிருந்து மேல் வரை இவ்வளவு ஆளுமையுடன் ஒரு குரல் ஒலிக்கிறது என்ற ஆச்சரியம் அன்று அனைவருக்குமே இருந்தது. பல்வேறுதரப்பிலிருந்து கைலாஷுக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டே வந்தன. இன்றளவிலும் மண்ணின் இசையை அவர் பிரதிபலிப்பதாக ரஹ்மானிலிருந்து ஆமீர் கான் வரை பாராட்டி வருகின்றனர்.இசைக்கடவுளான நுஸ்ரத் பத்தே அலி கானை தனது மானசீக குருவாக கருதும் கைலாஷ் இந்திய பாப் சூபி இசை வடிவத்தில் கொடுத்துள்ள பாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை

ஆனால் கைலாஷின் குரலில் வீரியமும் வீச்சும் உலகிற்கு உணர்த்திய பாடல் தேரி தீவாணி தான் என்பேன்.சூபி இசையை அடித்தளமாக கொண்டு பாப் இசையின் வடிவம் போல் இந்த பாடல் இருக்கும். பாடல் அளிக்கும் பரவசம் வார்த்தையில் இல்லாமல் இருக்கும் என்பதால் பாடலை ஒருமுறை கேட்பதே உசித்தம் .

இவ்வளவுக்கு பிறகே நான் பதிவின் மையத்திற்கு வருகிறேன். வெகு நாட்களாக எனக்கிருக்கும் கோபம் தமிழில் வரும் குரல் தேர்வுக்கான போட்டிகளில் யாரும் தயார் நிலையில் இருக்கும் பாடகர் இல்லை என்பது தான்.இதை பற்றிய விவாதம் கண்டிப்பாக தனிப்பதிவாக இடுவேன்.இங்கே இதை குறிப்பிடுவது ஹிந்தியில் வந்த ரியாலிட்டி ஷோக்களில் இந்த பாடல் எத்தகைய பரிமாணங்களை எல்லாம் அடைந்திருக்கிறது என்பதை சுட்டி காட்ட தான்.

முதலில் தோஷி பாடியது ( தோஷியின் அபார உழைப்பை பற்றியே அதிகம் சொல்லலாம் ) . இந்த பாடலை மட்டும் எடுத்து கொள்ளலாம் வாய்ஸ் ஆப் இந்தியாவில் தோஷி மிக முக்கியமான போட்டியாளர்.தோஷி தனது விளையாட்டை 2.16 இலே ஆரம்பித்து விடுகிறார் தாள கட்டுகளுக்கு அடங்காமல் அனாயசமாக தனது கட்டுபாட்டில் பாடலை வளைப்பது இவரின் சிறப்பு. 3.21 இல் இருந்து இவர் சரணத்தில் செய்யும் அட்டகாசம் பார்ப்பவர் அனைவரயும் வியப்பில் ஆழ்த்தியது , விளைவு ஜக்ஜீத் சிங் (பிரபல கசல் பாடகர்) ஒரே வரியில் சொன்னார் "நீ ஒரிஜினல் பாடலை காட்டிலும் நன்றாக பாடினாய் ".

பலமுறை போட்டியில் வரிகளை மறந்து சொதப்பிக்கொண்டிருப்பதே அந்த சிறுவனுக்கு வாடிக்கையாக இருந்தது.நல்ல இசையறிவு இருந்தும் இப்படி சொதப்புகிரானே என்று சுரேஷ் வாடேகரும் சோனு நிகாமும் வெளிப்படையாகவே சொன்னார்கள்.அதற்க்கு அமீர் ஹபீஸ் என்ற அந்த சிறுவன் அளித்த பதில் தேரி தீவாணி ! பெரியவர்களே தயங்கி தயங்கி பாடும் கீழ் நோட்சை பயமறியா இந்த சிறுவன் சுளுவாக பாடி அசத்தினான்.3.37 இல் சோனுவின் முகபாவனையே இவனின் திறனை உணர்த்தும் .

அந்தக்குரலை கேட்ட எல்லாருரிடத்திலும் நிம்மதி சந்தோசம் பொறாமை வியப்பு பிரமிப்பு, அண்ணாந்து தான் பார்த்தார்கள் , குரலுக்கு சொந்தக்காரர் ராஜா ஹாசன். சுக்விந்தர் சிங்கின் குரலுக்கு சரியான மாற்றாக ராஜா வருவார் என்று சொல்லலாம்.உச்ச ஸ்தாயியில் இவர் தய்யா தய்யாவை பாடிய பொழுது மொத்த அரங்கமும் அசந்துப்போனது.இந்த பாடலில் பெரிய அளவு மாறுதல்களை காட்டவில்லை என்றாலும் ( சரனத்தில் ஒரு சிறிய ஹர்கத்தை தவிர ) ராஜாவின் குரலில் இந்த பாடல் மிக புதுமையாக ஒலித்தது.

எல்லவாற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தால் போல் இருந்தது சமீபத்தில் ஷதாப் பாடியது. இந்த பாடலக்கு வேறு வடிவமே ஷதாப் கொடுத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. இப்பாடலில் இடங்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டியதில்லை அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட பொழுது பாடியது.ஒரு நிலையில் கமகங்களை அவர் பாடும்பொழுது மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டும்.மொழி புரிய வேண்டாம் உள்ளிருக்கும் நுட்பமான இசை சார்ந்த விஷயங்களும் தேவையில்லை பாடலுக்கு ஒரு உயிர் இருக்க வேண்டும் அது நமது மனங்களை தொட வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தும் பாடல் இது.


பி.கு : ஷதாபே இதை கவ்வாலியாகவும் உருமாற்றி பாடியுள்ளார். அதை காண





7 comments:

அண்ணாமலையான் said...

அப்பா.. என்னா ஒரு ரசனை.. பிரமாதம்..

Prakash said...

மிக்க நன்றி அண்ணாமலையான் :)

Prasanna Rajan said...

எதுனாச்சும் ஹிந்தி பாட்டை போட்டால் என் ரூம்மேட் சண்டைக்கு வருகிறான். இதில் எப்படி இதை கேட்க. சூஃபி இசையைப் பற்றி இசை விமர்சகர் ஷாஜி உயிர்மையில் எழுதியிருக்கிறார். அதில் கைலாஷ் கேரை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இப்படி அழகாகப் பாடும் பாடகர்கள் ஹிந்தியிலேயே பாடட்டும். தமிழில் பாடினால் அனேகமாக விஜய் ஆண்டனி குத்து பாட்டு பாட வைத்து விடுவார்கள்.

Surya here!! said...

படித்து முடிக்கும் போது உன் இசை ஆர்வம் மட்டும் தான் தெரிந்தது .. பாடலை கேட்ட பின் இசை மெய் சிலிர்க்க வைத்து விட்டது.. Good one..

Prakash said...

பிரசன்னா காரு , படிக்க வேண்டும்.நான் உயிர்மை படிப்பதில்லை.நன்றி

சுரேஷ் , நன்றி

drongo said...

எனக்கு ஹிந்தியில் ‘முஜே ஹிந்தி நஹி மாலும்’ அளவு மட்டுமே தெரியும். ஆனால் ‘தேரி தீவானி’ கேட்டபின், பாத்ரூமில் பாடுவதற்காகவே மொத்த லிரிக்சையும் மனப்பாடம் செய்தேன்! என்ன ஓர் அபூர்வ இசை!

Prakash said...

உங்களைப்போல் தான் நானும்.ஆனால் ஹிந்தி போன்று கற்றுக்கொள்வதற்க்கு (பேச்சுவழக்கில்) எளிமையான மொழி எதுவும் இருப்பதுபோல் தெரியவில்லை.

நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)