Saturday, July 17, 2010

Inception 2010 கதை/விமர்சனம்.


பொதுவாகாவே எனக்கு அறிவியல் புனைவுகள் பிடிக்காது ,ஆக இது நான் விரும்பிப்பார்க்கும் ஒரு வகை படமல்ல.ஆனால் நோலன் தனது சிருஷ்டியால் நமது மூளைக்குள் சதுரங்கம் ஆடியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல , ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சில கேள்விகளை எழுப்பிவிட்டு விடை தேடும் முன் அடுத்தகட்ட நகர்வுக்கு தாவும் திரைக்கதை யுக்தி ,கனவுகளுக்குள் இருக்கும் நிஜங்களையும் , நிஜங்களுக்குள் இருக்கும் கனவுகளையும் ஒரு பிரிவின் மூலம் இதில் அவர் சொல்லியிருப்பதே இந்த படத்தில் என்னை பாதித்த விஷயம்.

இப்பொழுது கதை ,முதல் சீனில் சில பாதுகாவலர்கள் காப்பை ( டீ காப்ரியோ) ஒரு வயதான முதியவரிடம் அழைத்து செல்கிறார்கள் அங்கே ஒரு உரையாடலுக்கு பிறகு வெட்டிவிட்டு காப் , அர்தர் ( காப்பின் அணியில் ஒருவன்) மற்றும் சைடோ ( ஒரு தொழிலதிபர்) மூவரும் சாப்பிடும் ஒரு காட்சி வருகிறது.காப் கனவுக்குள் நுழைந்து ஆழ்மன ரகசியங்களை திருடும் வல்லமை படைத்தவன்.சைட்டோவின் ரகசியத்தை கண்டறிய ஒருவரிடம் காசு வாங்கிவிட்டு அவரின் கனவுக்குள் வருகிறான் , அங்கே அவன் தனது ஆழ்மன ( sub-conscious) உருவைமாவான (projection) தனது மனைவியை காண்கிறான்.அவளை கட்டிபோட்டு விட்டு ரகசியம் இருக்கும் லாக்கரை நெருங்கும் பொழுது மால் ( காப்பின் மனைவி) ஆர்தரை சுட்டு விடுகிறாள் அப்பொழுது தான் சைட்டோ சொல்கிறான் நாம் இருப்பது ஒரு கனவென்று.ம்ம் ஹ்ம்ம் ஒரே குழப்பமா இருக்கா? கஷ்டமில்லை ,சில விஷயங்கள் நோலன் விளக்க நேரம் எடுத்து கொள்கிறார் , எல்லா அறிவியல் புனைவுகளுக்கும் தனக்கென்று சில நியதிகள் இருக்கும்.அது போலவே இதுக்கும் , அதை முதலில் பார்த்துவிட்டால் பின்பு எளிது.

உருவமைவு என்றால் என்ன? (Projection)

*எல்லா கனவுகளுக்கு ஒரு சப்ஜெக்ட் இருப்பார் , அவரால் உருவாக்கபடும் கதாபாத்திரங்கள் தான் உருவமைவுகள் .

*கனவில் ஒருவர் இறக்க நேரிட்டால் பெரிய பாதகமில்லை , அவர் நிஜ வாழ்க்கையில் விழித்துக்கொள்வார்.

*கனவுகளை கட்டமைக்க ஒரு சிற்பி உண்டு ,நிஜத்தில் கனவுகளை வடிவமைத்து கனவு காண்பவர்களுக்கு அதை சொல்லிக்கொடுப்பவர் அவர்.

*டோட்டம் - ஒரு தாயமாக இருக்கலாம் ஒரு மூடியாக இருக்கலாம்.இதை நீங்கள் நிஜ உலகத்தில் சுத்திவிட்டீர்கள் என்றால சுத்திவிட்டு நின்றுவிடும் , கனவுலகில் நிற்காமல் சுத்தும்.இதை கனவில் அல்லது நினைவில் இருக்கிறீர்களா எனக்கண்டறிய ஒரு கருவியாக பயன்படுத்தலாம்.

*புதிர்நெறி ( maze) என்பது கணவுகளின் கட்டம்.இது போல எண்ணற்ற கனவுகளை ஒரு சிற்பியால் அமைக்க இயலும்.

* நிஜ உலகில் ஐந்து நிமிடம் என்பது கனவுலகில் 1 மணி நேரம்.முதல் நிலை கனவில் ஐந்து நிமிடல் என்பது இரண்டாம் நிலை கணவில் 1 மணி நேரம்.எக்ஸ்பொனன்ஷியலாக இவ்வாறு கூடிக்கொண்டே போகும்.

*கனவுக்குள் கனவு அதனுள் கனவு என்று எண்ணிக்கையே இல்லாமல் கனவுகள் கானலாம் , முதல் தளத்தில் கனவு காண்பவர் இரண்டாம் தளத்திலும் காண முடியாது.அவ்வளவே.இது போக இன்னும் சில உள்ளன , போகும் போக்கில் பார்க்கலாம்.

சைட்டோவிடம் இருக்கும் ரகசியத்தை திருட நினைத்து அவரை கனவு காண வைக்கிறாரன் காப் , அந்த கனவுக்குள் நடக்கும் கனவு தான் மேலே சொன்ன பத்தி.ஆர்தரை மால் சுட்டு கொல்வதால் அவர் விழித்துக்கொள்கிறார் எவ்வளவு முயன்றும் சைட்டோவின் முக்கியமான ரகசியத்தை காப்பால் அறிந்து கொள்ள முடியவில்லை ,கடைசியில் தப்பி செல்கிறார் ( அட , நிஜத்தில் தான்)

காப்பால் அமேரிக்காவில் தங்க இயலாது.மால் தற்கொலை செய்ததற்கு காப் தான் காரணம் என்று சந்தேகமுள்ளது.சைட்டோ காப்பை கண்டுபிடித்து விடுகிறான் அவனிடம் தொடக்கம் (inception) என்னும் ஒரு திட்டதை செய்துகொடுக்குமாறு சொல்கிறான்.தொடக்கம் என்பது ஒரு சிந்தனையை விதைக்கும் காரியம் ( to plant an idea) லேசாப்பட்டதில்லை , அது நடக்காத விஷயம் என்று ஆர்தர் மறுக்க ,காப் இது செய்ய முடிந்த ஒன்று என்று திட்டத்துக்கு ஒப்புக்கொள்கிறான்.
இதற்க்கென்று காப்புக்கு மூவர் தேவைப்படுகிறார்கள் , ஒருவர் தன் தந்தையிடம் படிக்கும் மானவியான அரிடேன்.இவள் ஒரு தலை சிறந்த சிற்பி.இன்னொருவன் ஏம்ஸ் , இவனால் கனவுக்குள் மற்றவரை போல் உருமாற முடியும் (impersonate) கடைசியில் யூசூப் , அதிக நேரம் தூங்க வைக்க ஒரு விதமான மருந்தை ( sedative) வைத்திருப்பவன்.

இதில் ஆர்டேனுக்கு பயிற்ச்சி அளிக்கப்படுகிறது.அவள் கனவுகளை கட்டமைக்க கற்றுக்கொள்கிறாள் , எப்படி ஒருவர் மற்றொருவர் கனவில் தனது ஆழ்மனத்தை கொண்டு வர இயலுமென காப் விளக்குகிறான்.அப்பொழுது காப்பின் ஆழ்மனத்தின் காரணமாக மீண்டும் மால் வருகிறார் , அட்ரீனை தாக்குகிறாள் அவள் திடுக்கிட்டு விழித்துகொள்கிறாள்.

பிறதொருமுறை காப்பின் கனவுக்குள் நுழைகிறாள் அர்டேன் ,காப் கனவு முழுவதும் மால் இருக்கிறாள் , நினைவுகளாக.இல்லாத ஒருவரை நாம் நினைவில் தானே சிறை வைப்போம்? அப்படி தனது காதலியை தன் நினைவில் சிறை வைக்கிறான்.எனக்கு படத்திலேயே இது பிடித்த பகுதி , காப்பால் ஒரு கனவை கட்டமைக்க முடியாத காரணத்தை அர்டேன் கண்டுகொள்கிறாள் , அவனின் கனவும் கனவுக்குள் இருக்கும் நினைவும் அவனது காதலி தான்.தன்னால் எந்த கனவையும் தனது காதலி இல்லாமல் கட்டமைக்க முடியாத நிலையில் காப் இருக்கிறான்.தொழிலுக்கு இது பலத்த ஆபத்து , இதை மற்றவர்களிடம் சொல்லுமாறு அர்டேன் வலியுறுத்துகிறாள்.இது ஆபத்து என்பதால் அவன் சொல்ல மறுக்கிறான்.இத்தோடு அவர்கள் தங்களது திட்டத்துக்கு தயாராகிறார்கள்.

திட்டம் இது தான் , ஃபிஷர் என்னும் ஒரு மாபெரும் பணக்காரன் அவனுக்கென்று ஒரு சாம்ராஜ்ஜியம் அதில் அவன் தந்தை இறந்து விட அவன் காட் ஃபாதருடன் இருக்கிறான் , தனது சாம்ராஜ்ஜியத்தை தானே சிதைத்துக்கொள்ளும் ஒரு சிறு சிந்தனையை அவன் தலைக்குள் போட வேண்டும்.விமானத்தில் 10 மணி நேரம் ஒன்றாக செல்லும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கிறது.

முதல் கட்ட கனவில் அனைவரும் ஃபிஷரை கடத்துகிறார்கள்.ஃபிஷரின் ஆழ்மனம் கனவுத்திருட்டுக்கு வருபவரை எதிர்க்க தயார்செய்யப்பட்டுள்ளது.அதனால் துப்பாக்கி ஏந்தி இவர்களை ஃபிஷரின் ஆட்கள் தாக்குகிறார்கள் , இதை கண்டுபிடித்திருக்க வேண்டியது ஆர்தரின் கடமை
அதை சரிவர செய்யாததால் ஆர்தர் மேல் கோபம் கொள்கிறான் காப்.இதனூடே தாக்குதலில் சைட்டோக்கு பலத்த அடி , அவனை கொன்று விடலாம் விழித்துக்கொள்ளட்டும் என ஆர்தர் சொல்கிறான்.

அப்பொழுது தான் காப் ஒரு ரகசியத்தை வெளியிடுகிறான் , இந்த முறை மருந்து கொஞ்சம் வலுவானது கொல்லும்பட்சத்தில் விழித்துக்கொள்ளப்போவதில்லை , எந்த கனவு நிலையில் யார் இறந்தாலும் அவர்கள் முழுமறதி நிலை ( limbo) என்னும் சூனியத்திற்கு போய்விடுவார்கள்.கனவிலிருந்து எந்திரிக்கும் பொழுது அவர்களுக்கு மனம் பிளாங் அவுட் ஆகியிருக்கும்.இதை கேட்ட அனைவரும் கோபம் கொள்கிறார்கள் , வேறு வழியின்றி மீண்டும் திட்டத்தை தொடர்கிறார்கள்.

ஈம்ஸ் , ப்ரொவுனிங் ( ஃபிஷரின் காட்ஃபாதர்) போல் உருமாறிக்கொண்டு தன்னை இவர்கள் துன்புறுத்துவதாக சொல்லி ஃபிஷரிடம் போகிறான்.இருவரையும் கட்டிப்போடுகிறார்கள்.ப்ரொவுனிங்க் ஃபிஷரின் தந்தை வேறொரு உயில் எழுதி வைத்ததாகவும் அதில் இந்த சாம்ராஜ்ஜியத்தை கலைக்க சொன்னதாகவும் சொல்கிறான் , தன்னுடைய சொந்த உழைப்பில் இன்னொன்று உருவாக அவனது தந்தை ஆசைப்பட்டார் என்றும் சொல்கிறான்.ஃபிஷரின் ஆட்களின் தாக்குதல் அதிகமாகிறது ,அடுத்த கட்ட கனவுக்கு இவர்கள் தயாராகிறார்கள்.முதல் கனவு யூசூப்புடையது.

இரண்டாம் கட்ட கனவு ஆர்த்தருடையது , ஆர்த்தரும் அர்டேனும் சேர்ந்து வடிவமைத்தது.இரண்டாம் கட்ட கனவு ஒரு ஹோட்டலில் நடக்கிறது , அங்கே ஃபிஷர் கனவில் இருப்பதாக காப் அவனிடம் சொல்கிறான் , அவனை காப்பாற்ற வந்ததாகவும் சொல்கிறான் , இந்த கடத்தலுக்குப்பின் ப்ரொவுனிங் இருக்கலாம் என்னும் சந்தேகத்தை ஃபிஷரின் தலைக்குள் விதைக்கிறான்.ஃபிஷரின் சொந்த மனம் ப்ரொவுனிங்கை கெட்டவனாக காட்டுகிறது , ஆக ப்ரொவுனிங்கின் ரகசியத்தை நாம் தெரிந்து கொள்ள கனவு கான்போம் வா என்று அப்துல் கலாம் போல் அடுத்த கட்ட கனவுக்கு ஃபிஷரை தயார்படுத்துகிறான் காப்.ப்ரொவுனிங்கின் கனவுக்குள் செல்வதாக சொல்லி அழைத்துசெல்கிறார்கள்.மூன்றாவது கட்ட கனவு ஈம்சினுடையது.

மூன்றாம் கட்டம் ஒரு பனிமலையில் நடக்கிறது , ப்ரொவுனிங்கின் ஆட்கள் தாக்க வருவதாக ஃபிஷரின் ஆழ்மனம் உருவமைக்கிறது.இங்கே மால் வருகிறாள் , அவளை கொல்லவும் முடியாமல் காப் தடுமாறுகிறான்.அவள் ஃபிஷரை கொன்று விடுகிறாள் , இனி ஆட்டம் அம்பேல் என முடிவு செய்கிறார்கள் , இல்லை இன்னுமொரு ஆழத்துக்கு சென்றால் அவனை மீட்டெடுக்கலாம் என்கிறாள் ஆர்டேன்.அவள் கனவு கான்கிறாள்.சைட்டோவும் இறக்கிறான்.

நான்காம் கட்டம் தான் முக்கிய திருப்பமே , மீண்டும் மால்லை எதிர்கொள்கிறான் காப்.உண்மையை சொல்கிறான் , மாலும் காப்பும் கனவின் அடி ஆழத்துக்கு சென்று பல காலம் வாழ்ந்து வருகிறார்கள் இது கனவென்றே மாலுக்கு தெரியாமல் இருக்கிறது.அவளுக்கு புரிய வைக்க அவள் தலைக்குள் இது உண்மையான நிலை இல்லை என இன்ஷெப்ஷன் செய்கிறான் காப்.இதனால் தான் இன்ஷெப்ஷன் சாத்தியம் என்றும் காப்புக்கு தெரியவருகிறது.துருதஷடவசமாக அவள் நிஜத்திற்க்கு வந்தும் இது அழியவில்லை நாம் கனவில் இருக்கிறோம் என்றே நினைத்துக்கொள்கிறாள்.இதன் காரணமாக தற்கொலையும் செய்துகொள்கிறாள்.இந்த உண்மையை சொல்லும்போது (நான்காம் கட்ட கனவில்) காப்பை குத்திவிடுகிறாள் மால் , அர்டேன் மாலலை சுட்டுவிடுகிறாள்.ஃபிஷரை ஒரு மாடியிலிர்ந்து தள்ளிவிட்டு சாவடிக்கிறாள்.நான்காம் நிலையில் செத்தால் எங்கே எந்திரிப்பான்? அதே , அதே! மூன்றாம் நிலையில் எந்திரிக்கிறான் , ஒரு வழியாக தலைக்குள் சிந்தனையை விதைக்கிறார்கள்.அர்டேனும் மரித்து மூன்றாம் நிலைக்கு போகிறாள்.இங்கே இவர்கள் இறந்து அடுத்து இரண்டாம் நிலையில் ஆர்தர் லிஃப்ட்டை வெடிக்க செய்து சாவடிக்கிறான் , ஆக முதல் நிலையில் விழிக்கிறார்கள்.


இப்பொழுது தான் முதல் சீன் வருகிறது , சைட்டோவிற்கு வயதாகி விடுகிறது காரணம் அவன் லிம்போவில் இருக்கிறான்.தான் லிம்போவில் இருப்பதை உணர்ந்து கொண்டே காப் அவனிடம் செல்கிறான்.நாம் கனவில் இருக்கிறோம் என்று சொல்லி சாவடித்துக்கொண்டு நிஜத்துக்கு திரும்புகிறார்கள் , இமிகிரேஷனில் பிரச்சனையில்லாமல் வீடு சென்று தன் குழந்தைகளை காண்கிறான் காப்.

கடைசி காட்சியில் டோட்டம் சுத்துகிறது , நிஜமா கனவா என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு விடப்படுகிறது.


நோலனின் இந்த படம் படைப்பு என்னும் பட்சத்தில் தனிப்புதுமையுடைய ஒன்றாகவும் , அதீத நேர்த்தியுடைய ஒன்றாகவும் பாராட்டப்படும்.இதில் நான் கதையில் இருக்கும் சில கேள்விக்குறிய அம்சங்களை சொல்லாமல் , பொதுவான ஒரு கதையை தான் எழுதியிருக்கிறேன்.இந்த கதையை அறிவியல் புனைவாக அல்லாமல் ஒரு காதலனின் ஏக்கமாகவும் ஒரு தந்தையின் பாசமாகவும் பார்க்கலாம்.தான் கற்ற அறிவியல் தன் மனைவின் உயிரை பலி வாங்கும்போதும் சரி , தன் குழந்தைகளின் முகத்தை தன்னால் பார்க்க இயலாமல் போகும்போதும் சரி , டீ காப்ரியோ பிரமாதமாக நடித்தியிருக்கிறார்.தனது காதலியை நினைவில் சிறை வைத்துவிட்டு உண்மையை மறக்க நினைத்து தோற்கும் ஒரு காதலனின் கதையாக இதை பார்க்கிறேன்.எப்படியாயினும் இதன் நேர்த்திக்கு கண்டிப்பாக பார்க்கலாம்.



Friday, June 11, 2010

பிட்டோகோரஸ் தியரம்


சரியாக நினைவு இருக்கிறது , நான் பத்தாம் கிளாசில் தான் பிட்டு முதல் வாதத்தை கடைபிடித்தேன்.இந்த பொருள் முதல்/கருத்து முதல் வாதம் போல் பிட்டு முதல் வாதம் கஷ்டமில்லை.எளிதாக புரியும் மொழி நடையில் நாமளே எழுதிக்கொள்வது தான் பிட்.

நான் பத்தாம் கிளாசில் எல்லாம் அம்புட்டு தைரிய சாலி இல்லை ( இன்றளவிலும் இல்லை தான்) ஆனால் எங்களுக்கு வழக்கமாக எடுக்கும் புவியியல் ஆசிரியை நீண்ட விடுப்பு எடுத்து விட்டார் , அவருக்கு பதில் படு திராபையாக எடுக்கும் ஒரு ஆசிரியை வந்தார்.அந்த மாடெல் பரீட்சையில் ஒரு எழவும் தெரியவில்லை.அப்பொழுது மைக்ரோ செராக்ஸ் , சின்ன பிட் எல்லாம் என் பள்ளியில் அம்புட்ட்டு பிரசித்தி இல்லை.நண்பன் ஒருவன் ஓம் , பிள்ளையார் சுழி எல்லாம் போடு பெரிய நோட்டில் இருந்து கிழித்து பிட் எழுதி கொண்டுவந்திருந்தான்.எல்லாரும் எழுதி முடித்த பிறகே எனக்கு கொடுத்தார்கள் அதை.எனக்கு எழுத நேரமில்லை , அதை அப்படியே கட்டி பேப்பருடன் கொடுத்திவிட்டேன். டின் கட்டிவிட்டார்கள்.

ஆனால் நணபன் ஒருவன் படு நேர்த்தியாக பத்தாம் கிளாசிலேயே பிட் அடிப்பான். வரலாற்று பாடத்தில் ஒவ்வொரு பிட்டையும் ஒவ்வொரு இடத்தில் வைப்பான்.இடம் மறந்து விட்டால்? எந்தெந்த பிட் எங்கெங்கு உள்ளது என்பதற்க்கே ஒரு பிட் எழுதுவான்.அது எங்கே இருக்கும் என்னும் செய்தியை கையில் எழுதிக்கொள்வான். இப்படியாக உலகப்போரை உள்ளாடைக்குள் வைத்த புகழ் அவனையே சாரும்.

அதன் பிறகு நான் +1,+2 ஒரு ஜெயிலில் படித்தேன் அங்கே இதுக்கெல்லாம் கசையடியில் இருந்து அனைத்து அநாகரீக தண்டனைகளும் உண்டு.அதற்கு பயந்தே அடிக்கவில்லை.

என் கல்லூரியில் ஜீவிக்க ,காற்று , நீர் , சாப்படு , தங்குமிடம் போல் பிட் அடிப்பது ஒரு இன்றியமையாத விஷயம்.முன்னாடி இருந்தவர்களி பற்றி தெரியாது , ஆனால் நான் படித்த 4 ஆண்டுகளில் எனக்கு தெரிந்து ஒரு வகுப்பில் ஒன்றிருவரை தவிர அனைவரும் அடிப்பார்கள் என்றே சொல்லலாம்.

பல நேரங்களில் வகுப்பில் அனைவருமே ஒரே பதில் எழுதி ஆசிரியரை மண்டை காய வைத்திருக்கிறோம்.நம்க்கு தெரிந்த பதிலை கேள்விதாளில் எழுதி விடலாம் , அடுத்தவனிடம் அவனுக்கு தெரிந்ததை எழுதசொல்லி மாற்றிக்கொள்ளலாம்.பிட் பேப்பரை பார்த்து சந்தேகப்படுகிறார்களா? முந்தய கேள்விதாளில் பிட் எழுதி ,அதை எடுத்துக்கொண்டு போய் விடலாம். பார்ப்பவர்கள் நாம் கேள்வித்தாளில் விடை எழுதி பழகியதாக நினைப்பார்கள்..கொஞ்சம் படித்து கொஞ்சம் பிட் எழுதுதல் நலம். இல்லாவிடின் காலை பரீட்சைக்கு மதியத்தில் எழுத வேண்டிய பதிலை எழுதும் அபாயம் உள்ளது.

நிற்க.

பிட் அடிப்பது சரியா தவறா? இது அறிவு திருட்டு இல்லையா? நம்மிடம் இல்லாத அறிவை இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு நேர்மையற்ற செயல் தான்.இந்த கேள்விக்கு என்னிடம் விடையே இல்லை. இங்கே நான் முதுகலையில் பல திறந்த புத்தகம் பரீட்சைகளை எதிர்க்கொள்கிறேன்.பார்த்து எழுதவது என்னும் தேவையே இங்கே இல்லை.இந்திய கல்விமுறையில் அப்படியா என்ற கேள்விக்கு பொதுவான விடை இருப்பதாக எனக்கு தெரியவில்லை.ஆனால் என் கல்லூரியை வைத்து என்னால் தீர்க்கமாகவே பேச முடியும்.ஒரு ஐம்பது எண்களை கொடுத்து இந்த கனிமத்துக்கு இந்த எழவு குனம் இதை மொன்னைத்தனமாக மனப்பாடம் செய் இதை இப்படியே எழுது போன்ற கேள்விகள் உலக நாடுகளில் எங்கேனும் கேட்கப்படுகிறதா என தெரியவில்லை.பெரும்பாலுமான சூத்திரங்கள் பெரியது , சமன்பாடுகள் பல்லை உடைக்க கூடியது நடக்கும் தொழில்நுட்பங்கள் தேர்ந்த அனுபவத்தால் மட்டுமே மனதில் நிற்க கூடியது , இதை அனைத்தயும் நினைவில் நிறுத்து பின் வாந்தியெடு என்னும் அதிகாரத்தனமான கேள்விகள் கல்விமுறையை அதள பாதாள்த்துக்கு கொண்டு செல்லும் வல்லமை கொண்டுவை.

அறிவு நேர்மை இருப்பது அவசியம்.அதனினும் அவசியம் அதை உருவாக்கும் கல்வி முறை என்று நினைக்கிறேன்.இதை நான் முடிவாகவோ நியாயப்படுத்தவோ எல்லாம் சொல்லவில்லை.இப்படியான பாடத்திட்டம் இருக்கும்வறை இது ஏதோ ஒரு வழியில் நடக்கும். மதிப்பெண்கள் தான் வாழ்க்கை என்பது போல் ஒரு சூழலில் எல்லாரையும் தள்ளிவிட்டு தப்புசெய்யதூண்டும் ஒரு விஷயத்தை மறுபரிசீலனையாவது செய்ய வேண்டும்.

Wednesday, June 9, 2010

குறுமலாப்பேரி கிரிக்கெட் டீம்

அன்றைக்கு என்று பார்த்து உச்சி வெயில் மண்டையை பிளந்தது என்று சொன்னால் அது பொய்யாகிவிடும் ,என்றைக்கும் போல் அன்றைக்கும்.ஆனால் குறுமலாப்பேரியில் காற்றுக்கு பஞ்சமே கிடையாது.சில்லென்று முகத்தில் அடிக்கும் , மூட்டையை சைக்கிளில் கொண்டு வரும் காளி அண்ணன் இதுக்கென்றே சில நேரம் எதிர் காற்றில் கூட வண்டி ஓட்டுவதுண்டு.

காத்து தெக்க பாத்து தாம்ல அடிக்கு , அப்ப்றம் ஏன் ஸ்டிக்க அங்குன கொண்டு போய் நடுத? என்ற கூப்பாடோடு வந்தார் அண்ணன் குமார் , கேப்டன் குமார் , கடுதக் குமார்.கடுதக் என்றால் என்ன என்று இன்றளவும் யாருக்கும் தெரியாது .

எலே செத்த மூதி சாரம் கட்டி ஆட வராதன்னு எத்தனை தடவைல சொல்ல , நாளைக்கு மேட்சாட வரலையோ டே? என்றான் விக்கட் கீப்பர் பிரியன்.

சாரம் கட்டி தானடே கீழப்பாவூர்ல மணியன்னே பேட்டிங் புடிச்சாப்புல , அவுக கப் வைக்காங்கன்னா அவுக மட்டும் சாரம் கட்டி ஆடலாமோ , பிராக்டிஸ் தாண்டே இது.ஸ்டிக்க நட்டாச்சு டீம் பிரிங்கடே.

டீம் பிரிப்பது அசாதாரனமான விஷயம்.அங்கே இருப்பவர்களில் இரண்டு சிறுசுகளைதான் எப்பொழுது பிரிக்க சொல்வார்கள்.இரண்டு பேரும் முதலிலேயே காட்டானை எடுக்க துடிப்பார்கள்.காட்டான் சூப்பர் ஃபாஸ்ட் குறுமலாப்பேரி எக்ஸ்பிரஸ்.பந்தை பள்ளிக்கூட கிரவுண்டில் தூக்கி அடித்து தொலைத்த ஒரே ஜந்து அவன் தான்.அதன் பிறகு மணி , முப்பிடாதி , சசி , சோலை , மருது , வெள்ளைச்சாமி , வேல்ப்பாண்டி,இப்படி கடைசியில் குமார்.குமாருக்கு பேட்டிங் வராது , பவுலிங்க சுத்தம்.இது வரை ச்லிப் கேட்ச் மட்டும் அவர் எடுத்ததில்லை , சிலிப்பை தவிர எங்குமே நிக்க மாட்டார் உருவம் அப்படி.கேப்டன் எப்படி? ஏனென்றால் பார்ட்டி டப்பு பார்ட்டி. கப் நடத்த , நுழைவுக்கட்டனம் கட்ட ,ஸ்டிக் வாங்க , பேட் வாங்க , வாட்டர் பாக்கெட் வாங்க , குச்சி ஐஸ் வாங்க எல்லாவற்றுக்கும் அந்த ஊரில் காசு கேட்டார்கள்.குமாரிடம் இருந்தது.

நாளை நடக்கப்போகும் செமியில் தான் குறுமலாப்பேரி வெர்ஸஸ் கீழப்புலியூர்.இன்னொரு செமியில் மேலப்பாவூர்/சுரண்டை.எப்பொழுதுமே கப் நடத்துபவர்கள் ஃபைனல்ஸ் வருவார்கள்.ஆக செமியில் ஜெயித்து வருபவர்கள் கண்டிப்பாக திரும்பி தங்களுக்குள் மோதிக்கொள்ள் வேண்டும்.அப்போ என்ன எழவுக்கு செமின்னு கேக்குறீங்களா? அதெல்லாம் கேட்கப்புடாது!

ஏ பந்த தேடுறே , எவ்வளவு நேரம் அங்கனையே நிப்ப , இது சசி.

ஏல் நொட்டி , பேசுதேல்ல , ரப்பர் செருப்புதாம்ல போட்டிருக்கேன் அடிச்சேல்ல , வந்து எடுத்துக்குடு என்றான் முப்பிடாதி.

அன்று ஒருவழியாக இருந்த ஒரு பந்தையும் வெற்றிகரமாக தொலைத்து விட்டதாலும் , பாலாஜி அண்ணன் கடையில் இதுக்குமேல் ரப்பர் பந்து இல்லாததாலும் ஆட்டை நின்று போனது.செமி போவதர்க்குண்டான ஸ்ட்ராடஜி பேச்சுக்கள் ஆரம்பமானது.

ஏ காட்டான் அன்னிக்கு மாதிரி விசுறாதே டே விக்கெட் வேனும் , நீ எல்லா பந்தையும் வெளிய அடிக்க பார்த்தேன்னா அப்பறம் ஸ்டிக் புட்டுக்கும்.அன்னிக்கி புட்டுக்குச்சு பார்த்தீயளா சத்திரம் புவலிங்கில ஹா ஹா என்று கடியில் இருந்த காட்டானுக்கு வெறியேத்தினான் வேல்ப்பாண்டி.

ஏல் அவன் எறிஞ்சாண்ட்டே சத்தியமா சொல்லுதேன் , நீ அம்பயர் அண்ணன் கிட்ட வேனும்னாலும் கேட்டுப்பாரு , அன்னிக்கு காலேஜ் படிக்கில்லா சங்கர் அண்ணே அதான் நின்னுச்சு.

கடுதக் , புரோட்டா கடை தொரந்திருக்கோடே? என்றான் வெள்ளை. நீ காசு வெச்சிருந்தா தொரந்திருக்கும்டே என்று இன்று கடுதக்கிடமிருந்து உஷார் பதில் வந்தது. பல வயிறை புரோட்டா போட்டு நிறப்பிய வள்ளலவர்.

ஏ ஒன்னும்மில்லடே புலியூர்ல மணி , சிங்கமுத்து , தொரை ,மாடு நாலு பேர் விக்கட் எடுத்துட்டா போதும் என்று சசி சொல்லிமுடிப்பதற்குள் வேல் கத்த ஆரம்பித்தான் , ஏல் மாடு என்ன விளையாடினான்? போன கப்புல எல்லாம் கீப்பர் கேட்ச் , அம்சமா எடுக்கலாம்டே நிக்க வெச்சு. ஏல் காட்டன் ஆஃப்ல நாலு பந்தாவது போடு ஃபர்ஸ்ட் ஓவர் எல்லாமே காலுக்குள்ள எறக்க பாக்காத.

ஏ மணி , கிட்ட வந்தி நில்லுடே , சிரிலங்கால எல்லாம் நிப்பாங்க தெரியுமா பாஸ்ட்ட்கே நிப்பாய்ங்கடே.


ஏல் அவன் எம்புட்டு ஏறியுதான் தெரியுமா? கீப்பிங்க் நிக்கியா நீ? பேசனும்னு பேசாத , ரப்பர் பந்துனாலும் பட்டா வலிக்காதோல உனக்கு?

சரிடே நான் சிலிப் நிக்கேன் இந்த வாட்டி , போன வாட்டியே குமார் அண்ணே மூனு காட்ச் மிஸ் பன்னிட்டாப்புல என்றான் முப்பிடாதி.

முப்பிடாதி , நீ கேட்சே விட்டதில்லயோ டே? ராஜா பவுலிங்கில லாங்குல விட்டியே டே போன ஃபைனல்சுல

கடுதக் , ராஜா போன ஃபைனல் விளையாடவே இல்லை என்று மேலும் வெந்த புல்லில் ஆசிட்டை ஊற்றினான் முப்பிடாதி.சிறிது நேரம் மவுனம்.குமாருக்கு கோபமோ என்று உள்ளூர வெள்ளைக்கு பயம் , புரோட்டாக்கு பங்கம் விளைவித்த முப்பிடாதியை கருவிக்கொண்டான்.காட்டான் மவுனத்தை கலைத்தான்.

கொடுக்கமாட்டாங்கடே கீழப்பாவூர் காரைங்க அவ்வ்ளவு சீக்கரம் கீப்பர் கேட்ச் ,அம்பயரிங்கிலையே நம்ம்ள தொரத்த பாப்பய்ங்க.நம்ம ஃபைனல் வந்தா டஃப் அவங்களுக்கு.

சுத்தி இருக்கும் அனைவருக்கும் கொஞ்சம் சிரிப்பு வரத்தான் செய்தது.சரி இருந்தாலும் காட்டான் மனசு நோக வேண்டாமே என்று விழுந்து விழ்ந்து சிரித்தார்கள்.

டேய் என்னடே குறைச்சல் சொல்லுடே ஒருத்தன் சொல்லுடே , ம்ம் ஹ்ம்ம் சிரிப்பொலி நிக்க வேண்டுமே

Saturday, June 5, 2010

பிராஹாவில் கோயிஞ்சாமி


உங்களில் யார் செய்த பாவமோ எனக்கு எழுத நேரம் கிடைத்திருக்கிறது.

வார்சாவில் நிறைய விடுமுறை நாட்கள் உண்டு.அது போக நான் கல்லூரி இருக்கும் திசைக்கு மாற்று திசையில் தான் இந்த ஆறு மாதம் தலையனையை வைத்து படுத்தேன்.மே மாத விடுமுறையில் ( அது என்ன மே மாத விடுமுறை? அதெல்லாம் தெரியாது , விடுமுறை அய்யா) என் வகுப்பில் எட்டு பேர் செக் நாடுக்கு செல்வது என முடிவானது , நான்கு ஆண்கள்.மிச்சம் நான்கு பெண்கள்.விகிதாச்சாரம் தானாக மட்டுமே அமைந்தது!

போகும் பொழுது ஒரு பாதி வித் அவுட்டில் போனோம் , வண்டியில் இருக்க இடம் உண்டு ஆனால் அமர அல்ல.முதலில் பப்பரப்பே என்று உக்காந்தாச்சு. பிறகு டிக்கட் வாங்கிய ஒருவர் மாத்தி ஒருவராக வந்து எழுப்பிவிட ஆரம்பித்தனர்.கடைசியில் இரண்டு இருக்கையில் ஐந்து பேர் சமாளித்து போலந்தில் எல்லை வரை வந்து விட்டோம்.ரயிலில் நகர இடமில்லை.கடைசியில் போலந்து எல்லையில் இருந்து செக் தலைநகர் ப்ராஹாவிர்க்கு வேறு ரயிலில் தாவிக்கொண்டு போனோம்.


உண்மையில் பிராஹா எழில் கொஞ்சும் நகரம்.முதலில் நாங்கள் போனது பிராஹா கோட்டைக்கு , உலகிலேயே மிகப்பெரிய கோட்டையாம்.பசி வயிற்றை கிள்ளியதால் அதை அடுத்த நாளுக்கு வைத்துவிட்டு வந்துவிட்டோம்.மதியம் பழைய நகரம் , புதிய நகரம் என்று அனைத்து இடத்தையும் சுத்தி காட்ட ஒரு கைட் கிடைத்தார் , இலவசமாக! பிரித்தானிய ஆங்கிலம் நுனி நாக்கில் தாண்டவமாடியது.வரலாறு , கலை , இலக்கியம் என அனைத்தையும் பிரித்து மேய்ந்தார்.

அவர் சொன்னதில் இரண்டு முக்கியமாக பட்டது , ஒன்று வென்செலாஸ் சதுரம் இன்னொன்று யூத கல்லறைகள்.வென்செலாஸ் சதுரத்துக்கு ஒரு வரலாறு உண்டு.1969இல் ஜான் பலாக்ஸ் என்னும் மாணவர் நம் முத்துக்குமார் போல் தன்னையே தீக்கு இரையாக்கினாராம்!

1968க்கு பிறகு டூப்செக் செக் குடியரசுத்தலைவராக இருந்த காலம் பிராஹாவின் வசந்தமாம். அவர் குடிமக்களுக்கும் , பத்திரிக்கையாளர்களுக்கு பல சுதந்திரம் அளிக்க ஆரம்பித்தார்.இன்னும் பத்து ஆண்டுகளில் கம்மியூனிச ஆட்சி முறையில் இருந்து விலகி ஒரு முழு ஜனநாயகத்தை நோக்கி நகர்வோம் என்னும் பிரகடனம் வைத்தார்.நாட்டு மக்களிடம் மிக நல்ல வரவேற்பு இருந்தது.சேதி தெரிந்த உடன் சோவியத்திலிருந்து டேங்க்குக்ள் உருள ஆரம்பித்து விட்டதாம்! இதை எதிர்த்து தான் அறவழி போராட்டத்தில் ஜான் பலக்ஸ் மற்றும் ஜான் சஜிக் என்னும் இரண்டு மாணவர்க்ள் தங்களையே சாம்பலாக்கிக்கொண்டனர்.

அதன் பிறகு சார்லஸ் பிரிட்ஜ் மற்றும் பல இடங்களில் நான் தன்னந்தனியாக சுத்தி திறிந்தேன். ஒருவர் வித்தியாசமான வாசிப்பு கருவியில் உலகத்தர இசையை கொடுத்து கொண்டிருந்தார் , மற்றொரு பக்கம் நம்மூர் பொம்மலாட்டம் போல் ஒரு கலை.அதையும் ரசித்து கண்டுகளித்து விட்டு வீடு திரும்பினேன்.அடுத்த நாள் எல்லோரும் கோட்டை போக அடம் பிடித்தார்கள் ,அந்த புன்னியவான் கோட்டையை எஙகயோ உச்சியில கட்டி வெச்சிருக்கான் , எனக்கு ஏறுவதர்க்குள் டவுசர் கழண்டுவிட்டது.நண்பன் ஒருவன் மட்டுமே ஒரு மூச்சில் ஏறினான்.அட என்று அடுத்ததாக நான் ஏறி பக்கத்தில் போனால் கைத்தாங்கலாக் புடியேன் என்றான் , சரி அவனும் தான் எவ்வள்வு நேரம் வலிக்காத மாதிரியே நடிப்பான்.

ஒரு தெரு முழுவதும் ஷாப்பிங்கிற்கென ஒதுக்கியிருந்தார்கள் , செதேன் தொலைந்தேன் என்று வேறு இடம் ஓட ஆரம்பித்தேன்.அங்கே நின்றவர்கள் கடைசியாக கொடுத்த ஆய்வறிக்கைப்படி அங்கே மட்டுமே நான்கு மணி நேரமாம்.முந்தய தினம் யூத கல்லறைகள் பற்றி கேள்விபட்டபடியால் அங்கே போக நினைத்து வழிகண்டுகொண்டு போனேன்.ஒரு சுவர் அது முழுக்க நுனுக்கி நுனுக்கி எழுதபட்ட பெயர்கள் சுவரையே பல நூறு பெயர்கள் மறைத்தன. இது போல் பல சுவர்கள் ,இரண்டு அறை முழுவதும்! அனைத்தும் நாஜிக்க்ள் படுகொலை செய்யபட்ட யூதர்களின் பெயர்கள்.

நாஜி வதைமுகாம்களில் இருந்த குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் காட்சிக்காக வைக்கபட்டிருந்தது.ஒவ்வொன்றிலும் ஒரு வித செய்தி , வெறுமை. பெரும்பாலான குழந்தைகள் மனபிறழ்வு உடையவர்களாம். அங்கே ஒரு குழந்தை ”ஷவர்” காட்சியை ஓவியமாக்கியிருந்தது , அது என்ன என்று "Life is beautiful" படம் பார்த்தவர்களுக்கு தெரியும் .இதயம் கணக்க வெளியேறினேன்.


அடுத்து செஸ்கி குர்ம்யோவ் என்ற சின்ன நகரத்துக்கு பயணமானோம்.அநியாயத்துக்கு அழகு , ட்ரெட்லின்க் என்று ஒரு செக் உணவு வைக உண்டு , ரசித்து அனைவரும் சாப்பிட்டோம்.இது போக எனக்கு கோடுலிச் என்று ஒரு வகை பிரட்டும் மிகவும் பிடித்திருந்தது.நதிக்கரையோரம் அந்த கால செக் உணவு வகைகள் கொடுக்கும் உணவகத்தில் சாப்பிட்டோம்.சைவமே ஆனாலும் மிக வித்தியாசமான ருசி.க்ரும்யோவின் அழகு எளிதில் வார்த்தைகளில் சொல்ல முடியாது ,பல வயதான கொரிய சீன தம்பதிகளை பார்த்தேன்.சில முக்கியமான புத்துகங்கள் வாங்கினேன்.ஃப்ரான்ஸ் கஃப்காவின் சிலையை அங்கே பார்த்தும் அவரை பற்றி ஏற்கனவே கேள்விபட்டிருந்தும் அவர் புத்தகம் எதுவும் வாங்கவில்லை.

வெளியேறிய பொழுது ஜான் சாஜிக்கின் வாசகம் ஒன்றை காண நேர்ந்தது

But I want a lot for you, for everyone, so I have to pay a lot. Do not lose your heart after my sacrifice, tell Jacek to study harder and Marta too. You must never accept injustice, be it in any form, my death will bind you. I am sorry that I will never see you or that, which I loved so much. Please forgive me that I fought with you so much. Do not let them make me a madman.

Say hi to the boys, the river and the forest

Friday, February 12, 2010

விண்வெளி வீரரின் அசகாய சாகசங்கள்


இது முழுக்க முழுக்க கற்பனை பதிவு.இப்பதிவில் இருக்கும் அனைத்து கதாப்பாத்திரங்களும் கற்பனையே.தப்பி தவறி நீங்கள் சம்பந்தம்படுத்தி கொண்டால் நான் அதற்க்கு பொறுப்பில்லை.

விண்வெளி வீரர் என்ற பெயர் இவருக்கு வர என்ன காரணம் என்பதை நானறியேன். விவரம் அறிந்தவர்கள் சிலரிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன்.

விண்வெளி ஒரு பிரபல ஆராய்ச்சி கூடத்தின் மிகப்பெரிய விஞ்ஞானி.இவரை ஞான குருவாக ஏற்று கொண்டு கோடிக்கணக்கான மாணவர்கள் உலகெங்கும் இருக்கின்றனர் .

வகுப்பறையில் அவர் பாடம் நடத்த அனைவரும் நித்திரை கொள்ளும் வேளையில் திடுமென எல்லாரையும் ஒற்றை சொல்லாடலில் எழுப்பினார்.

எதோ ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தார், ஒரு கப்பல் கட்டுமான நிறுவனம் தனது செய்கைகளில் உள்ள குளறுபடியால் Shipping turn over ஐ இழந்துவிட்டது என்றார். சரி தான் என்று மீண்டும் நித்திரைக்கு போவதற்குள் அதற்க்கு ஞான குரு விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் "தம்பி அந்த கட்டுமான கம்பனி தனது கப்பலை சரியாக கரையில் நிறுத்தி வைக்கவில்லை.ஆதாலால் அதை ஸ்டியரிங் போட்டு திருப்பையில் பிரச்சனை இது தான் Shipping turn over problem" என்றார்

அந்த மாபெரும் ஆராய்ச்சி கூடம் இவரின் அறிவை பயன்படுத்திக்கொள தவறவிட்டதற்கு இன்னொரு உதாரணம்.நாம் பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியலில் Scanning electron microscope (SEM) என்று ஒன்றை படித்திருப்போம். சின்னது எதுவோ அதை பெருசாக பார்க்கலாம் என்ற ரத்தின சுருக்கமாக அதற்க்கு ஞான குரு முதலில் விளக்கமளித்தார் .


ஆனால் அது அவ்வளவு எளிதில்லை என்பதற்கு ஒரு கதை சொன்னார்.நாம் படிக்கவேண்டிய ஒரு பெரிய விஷயத்திற்கான சாம்பிளாக அதில் இருந்து சின்னதாக பெயர்த்தெடுத்து கொடுத்தால் தான் அதை அந்த கண்ணாடி வழியாக பார்த்து ஆராய முடியும் என்று யாரோ சொல்லிவிட்டார்களாம்.சரி என்று கான்கிரீட் கட்டிடங்களை ஆராயும் இவர் அதிலிருந்துஒரு செங்கலை பெயர்த்தெடுத்து கொண்டுபோய் கொடுத்தார்.அரண்டு போன ஆராய்ச்சியாளர்கள் ஒருவாரம் விடுமுறை எடுத்து வேப்பிலை அடித்துக்கொண்டதாக தகவல்.


இன்றளவிலும் யாருமே இல்லாத தெருவிற்குள் இன்டிகேடர் போட்டு செல்லும் ஒரு சிடிசன் இவர்.தூங்கும்போது மட்டுமே ஹெல்மெட்டை கழட்டுவார் என்பது தனி சிறப்பு.

மதிப்பெண் வழங்குவதில் மட்டும் ஏனோ ஏக கறாராக இருப்பார் .இவர் சாப்பிடும் எக்ஸ்ட்ரா இட்லியை கண்டுக்கொள்ளாத மெஸ் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு கூட கம்மியான மதிப்பெண்களே அளித்து வருபவர் .திருப்பூரிலிருந்து பனியன் , திருநெல்வேலியில் இருந்து அல்வா மற்றும் சிறப்பு ஜெயின்சன் வேட்டிகள் அளிப்பவருக்கு மட்டும் போனால் போகிறது என்று முன்னுரிமை கொடுத்து நேர்மைக்கு இலக்கனாமாக திகழ்பவர்.

ஞான குருவுக்கென்று ஒரு சிறப்பான சீடன் உண்டு அந்த சீடனின் வீட்டுக்கே சென்று பங்குசந்தையை பற்றி தனது விரிவான அறிவை பகிர்ந்திருக்கிறார்.எப்படிப்போட்டால் காசை லாவகமாக இழக்கலாம் என்று இவர் சொல்லியிருக்கும் விஷயங்களை புத்தகமாக கொண்டுவரும் முயற்ச்சி நின்றுபோய் இன்று தஞ்சாவூர் கல்வெட்டுகளில் இவரது சாகசங்கள் பதியப்பட்டு வருகின்றன.

ஆங்கில புலமையை பற்றி அடிக்கடி பேசி நம்மை மூர்ச்சை அடைய வைப்பார்.வேலை கிடைக்காமல் போவதற்கே மாநாக்களிடம் இருக்கும் ஆங்கில அறிவின் போதாமை தான் காரணம் என்றார் .நீங்கள் வேலைக்கு சேரும் கம்பெனியில் என்ன எதிர்பார்ப்பீர்கள் என்று ஒரு நாள் வினவினார் ,சீடன் எழும்பி "Package" என்றான்.இப்படி சிறிய வயதிலேயே packaging கம்பனிக்கு போவேன் என்று நீ அடம்பிடிப்பது நல்லதில்லை என்றார்,குருவே என்று பொற்பாதங்கள் தொட்டு வணங்கினான் சீடன்.

இதுபோக இவரது ஆராய்ச்சி கூடத்தில் இதுகாலம் வரை இவரை பார்த்தவர்கள் அனைவரும் இவர் அனந்தசயனத்தில் இருக்கும்போதே பார்த்திருக்கின்றனர்.இவர் கண்விழிக்கும் நேரமெல்லாம் தேனீர் இடைவேளையாக இருப்பது விஞ்ஞானத்தால் விளக்க இயலாத ஆச்சரியம்

இதுபோல் குருவின் இன்னும் சில சாகசங்களை தொகுக்க அவரது சீடர்களிடம் உதவி நாடியுள்ளேன்.வந்ததும் தொகுக்கிறேன்.படிச்சிட்டு சாவுங்க

Thursday, February 11, 2010

நித்தம் பிறக்கும் ஓர் பாடல் - கைலாஷ் கெரின் தேரி தீவாணி

இந்த பாடலை முதல் முறை எப்பொழுது கேட்டேன் என்று நினைவில்லை. ஆனால் கேட்ட முதல் முறையே நிரம்பு மண்டலத்தின் உள் சென்று என்னை தூக்கியடித்த பாடல் இது. இதை கேட்காதவர்கள் ஒருமுறை கேட்டு விடவும்.




பாகிஸ்தானிய இசையை பற்றியும் அதன் பிறகு நான் தொடர்ந்து கேட்டுவரும் சூபி / கவ்வாலி வகை இசையை பற்றியும் தனி பதிவெழுத ஆசை. அதற்குமுன் நான் இந்த பாடலை பற்றி ஒரு சிறு குறிப்பாவது எழுத வேண்டும் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன்.

இந்திய இசையை தொடர்ந்து பின் தொடர்பவர்கள் கண்டிப்பாக கைலாஷ் கெரைஅறிந்திருப்பார்கள்.பதபடுத்தபட்ட இனிமையான குரல்களுக்கிடையில் நாட்டுப்புற இசையின் அடையாளமான கம்பீரமான குரலை இந்திய சினிமா இசைக்கு இன்று அளித்துக்கொண்டிருப்பவர் கைலாஷ். அவரது தந்தை ஒரு நாட்டுப்புற இசை கலைஞர் , பல்வேறு தடைகளையும் வறுமையும் தாண்டி மிகவும் சிரமபட்டே கைலாஷ் சினிமாவிற்குள் நுழைந்தார்.


அல்லா கே பந்தே பாடல் வந்தது தான் தாமதம் மொத்த இந்தி திரையிசை உலகமும் திரும்பி பார்த்தது.எப்படி கீழிருந்து மேல் வரை இவ்வளவு ஆளுமையுடன் ஒரு குரல் ஒலிக்கிறது என்ற ஆச்சரியம் அன்று அனைவருக்குமே இருந்தது. பல்வேறுதரப்பிலிருந்து கைலாஷுக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டே வந்தன. இன்றளவிலும் மண்ணின் இசையை அவர் பிரதிபலிப்பதாக ரஹ்மானிலிருந்து ஆமீர் கான் வரை பாராட்டி வருகின்றனர்.இசைக்கடவுளான நுஸ்ரத் பத்தே அலி கானை தனது மானசீக குருவாக கருதும் கைலாஷ் இந்திய பாப் சூபி இசை வடிவத்தில் கொடுத்துள்ள பாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை

ஆனால் கைலாஷின் குரலில் வீரியமும் வீச்சும் உலகிற்கு உணர்த்திய பாடல் தேரி தீவாணி தான் என்பேன்.சூபி இசையை அடித்தளமாக கொண்டு பாப் இசையின் வடிவம் போல் இந்த பாடல் இருக்கும். பாடல் அளிக்கும் பரவசம் வார்த்தையில் இல்லாமல் இருக்கும் என்பதால் பாடலை ஒருமுறை கேட்பதே உசித்தம் .

இவ்வளவுக்கு பிறகே நான் பதிவின் மையத்திற்கு வருகிறேன். வெகு நாட்களாக எனக்கிருக்கும் கோபம் தமிழில் வரும் குரல் தேர்வுக்கான போட்டிகளில் யாரும் தயார் நிலையில் இருக்கும் பாடகர் இல்லை என்பது தான்.இதை பற்றிய விவாதம் கண்டிப்பாக தனிப்பதிவாக இடுவேன்.இங்கே இதை குறிப்பிடுவது ஹிந்தியில் வந்த ரியாலிட்டி ஷோக்களில் இந்த பாடல் எத்தகைய பரிமாணங்களை எல்லாம் அடைந்திருக்கிறது என்பதை சுட்டி காட்ட தான்.

முதலில் தோஷி பாடியது ( தோஷியின் அபார உழைப்பை பற்றியே அதிகம் சொல்லலாம் ) . இந்த பாடலை மட்டும் எடுத்து கொள்ளலாம் வாய்ஸ் ஆப் இந்தியாவில் தோஷி மிக முக்கியமான போட்டியாளர்.தோஷி தனது விளையாட்டை 2.16 இலே ஆரம்பித்து விடுகிறார் தாள கட்டுகளுக்கு அடங்காமல் அனாயசமாக தனது கட்டுபாட்டில் பாடலை வளைப்பது இவரின் சிறப்பு. 3.21 இல் இருந்து இவர் சரணத்தில் செய்யும் அட்டகாசம் பார்ப்பவர் அனைவரயும் வியப்பில் ஆழ்த்தியது , விளைவு ஜக்ஜீத் சிங் (பிரபல கசல் பாடகர்) ஒரே வரியில் சொன்னார் "நீ ஒரிஜினல் பாடலை காட்டிலும் நன்றாக பாடினாய் ".

பலமுறை போட்டியில் வரிகளை மறந்து சொதப்பிக்கொண்டிருப்பதே அந்த சிறுவனுக்கு வாடிக்கையாக இருந்தது.நல்ல இசையறிவு இருந்தும் இப்படி சொதப்புகிரானே என்று சுரேஷ் வாடேகரும் சோனு நிகாமும் வெளிப்படையாகவே சொன்னார்கள்.அதற்க்கு அமீர் ஹபீஸ் என்ற அந்த சிறுவன் அளித்த பதில் தேரி தீவாணி ! பெரியவர்களே தயங்கி தயங்கி பாடும் கீழ் நோட்சை பயமறியா இந்த சிறுவன் சுளுவாக பாடி அசத்தினான்.3.37 இல் சோனுவின் முகபாவனையே இவனின் திறனை உணர்த்தும் .

அந்தக்குரலை கேட்ட எல்லாருரிடத்திலும் நிம்மதி சந்தோசம் பொறாமை வியப்பு பிரமிப்பு, அண்ணாந்து தான் பார்த்தார்கள் , குரலுக்கு சொந்தக்காரர் ராஜா ஹாசன். சுக்விந்தர் சிங்கின் குரலுக்கு சரியான மாற்றாக ராஜா வருவார் என்று சொல்லலாம்.உச்ச ஸ்தாயியில் இவர் தய்யா தய்யாவை பாடிய பொழுது மொத்த அரங்கமும் அசந்துப்போனது.இந்த பாடலில் பெரிய அளவு மாறுதல்களை காட்டவில்லை என்றாலும் ( சரனத்தில் ஒரு சிறிய ஹர்கத்தை தவிர ) ராஜாவின் குரலில் இந்த பாடல் மிக புதுமையாக ஒலித்தது.

எல்லவாற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தால் போல் இருந்தது சமீபத்தில் ஷதாப் பாடியது. இந்த பாடலக்கு வேறு வடிவமே ஷதாப் கொடுத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. இப்பாடலில் இடங்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டியதில்லை அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட பொழுது பாடியது.ஒரு நிலையில் கமகங்களை அவர் பாடும்பொழுது மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டும்.மொழி புரிய வேண்டாம் உள்ளிருக்கும் நுட்பமான இசை சார்ந்த விஷயங்களும் தேவையில்லை பாடலுக்கு ஒரு உயிர் இருக்க வேண்டும் அது நமது மனங்களை தொட வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தும் பாடல் இது.


பி.கு : ஷதாபே இதை கவ்வாலியாகவும் உருமாற்றி பாடியுள்ளார். அதை காண





Wednesday, February 10, 2010

இலங்கையில் சீனாவின் தவறான ஆளுமை


டெலிக்ராபில் வந்த பீட்டர் போஸ்டரின் இந்த கட்டுரையின் தமிழாக்கம்

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் மீண்டுமொருமுறை தனது சகிப்புதனமில்லாத போக்கை காட்டியிருக்கிறது , சரத் பொன்சேகாவின் கைது மூலம். பொன்சேகா தனது ராணுவ ஜெனரல் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு தற்பொழுது நடந்த தேர்தலில் மகிந்தா ராஜபக்சேவிற்கு எதிராக நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது நண்பர் டீன் நில்சன் பொன்சேகாவின் கைதை ஒட்டி நடந்த சம்பவங்களை இங்கே தொகுத்துள்ளார்.பொன்சேகாவை ராணுவ வீரர்கள் விசாரணைக்கு விடாப்பிடியாக இழுத்து சென்றிருக்கின்றனர்.

சமீபத்தில் இலங்கையில் நடந்த மிக மோசமான சம்பவம் இது.கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கை ராஜபக்ஷே ஆட்சியின் கீழ் சர்வாதிகார நாடாக உருமாறி வருவதற்கு இது ஒரு உதாரணம்

அரசாங்கத்துக்கு எதிரான குரல்கள் சமீபகாலமாக அதிகம் ஒடுக்கபட்டு வருகின்றன.இலங்கை, பத்திரிக்கையாளர்கள் இயங்குவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக மாறி வருகின்றது.இதற்க்கு பிரபல பத்திரிக்கையாளர் லசந்தா விக்ரமது ங்கேவின் மரண சாசனமே எடுத்துக்காட்டாகும். அதை படிக்காதவர்கள் உடனடியாக இங்கே படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சரி இது எல்லாவற்றிற்கும் சீனாவிற்கும் என்ன சம்பந்தம்? சீனாவின் மக்கள் ஜனநாயக சர்வாதிகார (!!) அரசு புதிதாக முளைத்திருக்கும் இலங்கையின் "மக்கள் சர்வாதிகார " அரசிற்கு பொருளாதார ரீதியில் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. இது உலகளாவிய ரீதியில் சீனாவின் மோசமான நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது .

பூகோள ரீதியில் இலங்கை விடயம் சிறியது தான் , ஆனால் கிழக்காசியாவில் ஜனநாயக நாடாக இருந்து வந்த இலங்கை இப்பொழுது ஊழல் நிறைந்த எதேச்சிகார சர்வாதிகார நாடாக மாறி வருவது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விடயமாகும் .

பல காலமாக இலங்கையின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாமல் தான் இருந்து வந்தது ( மிக கவனமாக இந்தியாவை சங்கடப்படுத்தாமல் ) ஆனால் 2007 ஆம் ஆண்டு ராஜபக்ஷேவின் பீஜிங் பயணத்தில் இருந்து இது மாறத்தொடங்கியது . அவரின் வருகை பொருளாதார மற்றும் சில ராணுவ ரீதியான உதவியை இலங்கைக்கு சீனா அளிப்பதற்கு வழிவகுத்தது.

இந்த வருகைக்கு பிறகு இரண்டு அரசாங்கங்களும் " தீவிரவாதம் , பிரிவினைவாதம் , பயங்கரவாதம்" ஆகிய மூன்று அழிவு சக்திகளுக்கு எதிராக போராட ஒப்பந்தம் போட்டுக்கொண்டன. இத்தகைய வார்த்தை பிரயோகங்களின் மூலமே ராஜபக்ஷே சமீபத்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக நடத்தி காட்டினார்.

சீனாவின் அரசிற்கு சொந்தமான China Harbour Engineering Company (CHEC) என்னும் கட்டுமான பெருநிறுவனம் ஒன்று தற்ச்சமயம் இலங்கையின் தெற்கு மூலையில் உள்ள ஹம்பண்டோடாவில் புது துறைமுகம் , விமான நிலையம் மற்றும் கொழும்புவுடன் இணைக்கும் ஒரு எக்ஸ்பிரஸ் பாதையையும் கட்டி வருகிறது.

சில ஆப்ரிக்க நாடுகளுடன் செய்வது போல் நேரடியாக ஈடுபடாமல் ஆளுங்கட்சியின் கையை பலப்படுத்துவது மூலம் இதை சீனா செய்துவருகிறது. இங்கே நாம் ஹம்பண்டோட்டா ராஜபக்ஷவின் சொந்த தொகுதி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான கண்டனகள் , இலங்கையின் மீது அழுத்தம் கொடுக்காமல் இருக்க சீனாவின் பணமும் மனிதமற்ற தன்மையும் காரணிகளாக இருக்கின்றன.

இலங்கயின் சமீப போர் குற்றங்களை விசாரிக்க நடந்த ஐநா சபை விவாதத்தில் இலங்கயின் புதிய நண்பரான ரஷ்யா இலங்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டியது.இப்பொழுது இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் அமெரிக்கன் டாலர்களுக்கு ஆயுதம் கொடுப்பது பற்றியான பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது . சீனாவின் கூட்டாளியான ஈரானும் மலிவு விலைக்கு எண்ணெய் மற்றும் சில பொருளாதார உதவிகளைத்தர முன்வந்திருக்கிறது .

பிரிட்டின் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்தும் பொருளாதார உதவிகளை ரத்து செய்தும் வருகிறது ஆனால் அந்த பணம் சொற்பம் என்பதால் இலங்கை உதறித்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.அமெரிக்கா அடிக்கடி நிலைமை மோசம் என்று மட்டும் கூறிக்கொண்டே இருக்கிறதே ஒழிய அதன் பங்கிற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை.

இந்த வெள்ளியன்று ஐரோப்பிய கூட்டமைப்பு இலங்கையுடனான வர்த்தகத்திற்கு இலங்கயின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி ரத்து செய்துள்ளது.ஆனால் இதை நடைமுறைபடுத்தும் தாமத்தை சீனாவின் பொருளுதவி ஈடுகட்டிவிடும் போல் தெரிகிறது.

சீனாவை பற்றி இந்த மாத இறுதியில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு , சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மா சாவோக்சு இலங்கை தனது சமூக ஸ்திரத்தன்மையை பேண வேண்டும் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.இப்படி தான் வெள்ளை வேன்களுடன் கொடுமை புரிந்த ராஜபக்ஷே அரசிற்கு ஆதரவாக சீனா சப்பை கட்டு கட்டுகிறது



இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த இந்த உலகம் விழித்துக்கொண்டால் தான் முடியும் , ஆனால் அது நடக்கும் என்பது சந்தேகமே