Saturday, July 17, 2010

Inception 2010 கதை/விமர்சனம்.


பொதுவாகாவே எனக்கு அறிவியல் புனைவுகள் பிடிக்காது ,ஆக இது நான் விரும்பிப்பார்க்கும் ஒரு வகை படமல்ல.ஆனால் நோலன் தனது சிருஷ்டியால் நமது மூளைக்குள் சதுரங்கம் ஆடியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல , ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சில கேள்விகளை எழுப்பிவிட்டு விடை தேடும் முன் அடுத்தகட்ட நகர்வுக்கு தாவும் திரைக்கதை யுக்தி ,கனவுகளுக்குள் இருக்கும் நிஜங்களையும் , நிஜங்களுக்குள் இருக்கும் கனவுகளையும் ஒரு பிரிவின் மூலம் இதில் அவர் சொல்லியிருப்பதே இந்த படத்தில் என்னை பாதித்த விஷயம்.

இப்பொழுது கதை ,முதல் சீனில் சில பாதுகாவலர்கள் காப்பை ( டீ காப்ரியோ) ஒரு வயதான முதியவரிடம் அழைத்து செல்கிறார்கள் அங்கே ஒரு உரையாடலுக்கு பிறகு வெட்டிவிட்டு காப் , அர்தர் ( காப்பின் அணியில் ஒருவன்) மற்றும் சைடோ ( ஒரு தொழிலதிபர்) மூவரும் சாப்பிடும் ஒரு காட்சி வருகிறது.காப் கனவுக்குள் நுழைந்து ஆழ்மன ரகசியங்களை திருடும் வல்லமை படைத்தவன்.சைட்டோவின் ரகசியத்தை கண்டறிய ஒருவரிடம் காசு வாங்கிவிட்டு அவரின் கனவுக்குள் வருகிறான் , அங்கே அவன் தனது ஆழ்மன ( sub-conscious) உருவைமாவான (projection) தனது மனைவியை காண்கிறான்.அவளை கட்டிபோட்டு விட்டு ரகசியம் இருக்கும் லாக்கரை நெருங்கும் பொழுது மால் ( காப்பின் மனைவி) ஆர்தரை சுட்டு விடுகிறாள் அப்பொழுது தான் சைட்டோ சொல்கிறான் நாம் இருப்பது ஒரு கனவென்று.ம்ம் ஹ்ம்ம் ஒரே குழப்பமா இருக்கா? கஷ்டமில்லை ,சில விஷயங்கள் நோலன் விளக்க நேரம் எடுத்து கொள்கிறார் , எல்லா அறிவியல் புனைவுகளுக்கும் தனக்கென்று சில நியதிகள் இருக்கும்.அது போலவே இதுக்கும் , அதை முதலில் பார்த்துவிட்டால் பின்பு எளிது.

உருவமைவு என்றால் என்ன? (Projection)

*எல்லா கனவுகளுக்கு ஒரு சப்ஜெக்ட் இருப்பார் , அவரால் உருவாக்கபடும் கதாபாத்திரங்கள் தான் உருவமைவுகள் .

*கனவில் ஒருவர் இறக்க நேரிட்டால் பெரிய பாதகமில்லை , அவர் நிஜ வாழ்க்கையில் விழித்துக்கொள்வார்.

*கனவுகளை கட்டமைக்க ஒரு சிற்பி உண்டு ,நிஜத்தில் கனவுகளை வடிவமைத்து கனவு காண்பவர்களுக்கு அதை சொல்லிக்கொடுப்பவர் அவர்.

*டோட்டம் - ஒரு தாயமாக இருக்கலாம் ஒரு மூடியாக இருக்கலாம்.இதை நீங்கள் நிஜ உலகத்தில் சுத்திவிட்டீர்கள் என்றால சுத்திவிட்டு நின்றுவிடும் , கனவுலகில் நிற்காமல் சுத்தும்.இதை கனவில் அல்லது நினைவில் இருக்கிறீர்களா எனக்கண்டறிய ஒரு கருவியாக பயன்படுத்தலாம்.

*புதிர்நெறி ( maze) என்பது கணவுகளின் கட்டம்.இது போல எண்ணற்ற கனவுகளை ஒரு சிற்பியால் அமைக்க இயலும்.

* நிஜ உலகில் ஐந்து நிமிடம் என்பது கனவுலகில் 1 மணி நேரம்.முதல் நிலை கனவில் ஐந்து நிமிடல் என்பது இரண்டாம் நிலை கணவில் 1 மணி நேரம்.எக்ஸ்பொனன்ஷியலாக இவ்வாறு கூடிக்கொண்டே போகும்.

*கனவுக்குள் கனவு அதனுள் கனவு என்று எண்ணிக்கையே இல்லாமல் கனவுகள் கானலாம் , முதல் தளத்தில் கனவு காண்பவர் இரண்டாம் தளத்திலும் காண முடியாது.அவ்வளவே.இது போக இன்னும் சில உள்ளன , போகும் போக்கில் பார்க்கலாம்.

சைட்டோவிடம் இருக்கும் ரகசியத்தை திருட நினைத்து அவரை கனவு காண வைக்கிறாரன் காப் , அந்த கனவுக்குள் நடக்கும் கனவு தான் மேலே சொன்ன பத்தி.ஆர்தரை மால் சுட்டு கொல்வதால் அவர் விழித்துக்கொள்கிறார் எவ்வளவு முயன்றும் சைட்டோவின் முக்கியமான ரகசியத்தை காப்பால் அறிந்து கொள்ள முடியவில்லை ,கடைசியில் தப்பி செல்கிறார் ( அட , நிஜத்தில் தான்)

காப்பால் அமேரிக்காவில் தங்க இயலாது.மால் தற்கொலை செய்ததற்கு காப் தான் காரணம் என்று சந்தேகமுள்ளது.சைட்டோ காப்பை கண்டுபிடித்து விடுகிறான் அவனிடம் தொடக்கம் (inception) என்னும் ஒரு திட்டதை செய்துகொடுக்குமாறு சொல்கிறான்.தொடக்கம் என்பது ஒரு சிந்தனையை விதைக்கும் காரியம் ( to plant an idea) லேசாப்பட்டதில்லை , அது நடக்காத விஷயம் என்று ஆர்தர் மறுக்க ,காப் இது செய்ய முடிந்த ஒன்று என்று திட்டத்துக்கு ஒப்புக்கொள்கிறான்.
இதற்க்கென்று காப்புக்கு மூவர் தேவைப்படுகிறார்கள் , ஒருவர் தன் தந்தையிடம் படிக்கும் மானவியான அரிடேன்.இவள் ஒரு தலை சிறந்த சிற்பி.இன்னொருவன் ஏம்ஸ் , இவனால் கனவுக்குள் மற்றவரை போல் உருமாற முடியும் (impersonate) கடைசியில் யூசூப் , அதிக நேரம் தூங்க வைக்க ஒரு விதமான மருந்தை ( sedative) வைத்திருப்பவன்.

இதில் ஆர்டேனுக்கு பயிற்ச்சி அளிக்கப்படுகிறது.அவள் கனவுகளை கட்டமைக்க கற்றுக்கொள்கிறாள் , எப்படி ஒருவர் மற்றொருவர் கனவில் தனது ஆழ்மனத்தை கொண்டு வர இயலுமென காப் விளக்குகிறான்.அப்பொழுது காப்பின் ஆழ்மனத்தின் காரணமாக மீண்டும் மால் வருகிறார் , அட்ரீனை தாக்குகிறாள் அவள் திடுக்கிட்டு விழித்துகொள்கிறாள்.

பிறதொருமுறை காப்பின் கனவுக்குள் நுழைகிறாள் அர்டேன் ,காப் கனவு முழுவதும் மால் இருக்கிறாள் , நினைவுகளாக.இல்லாத ஒருவரை நாம் நினைவில் தானே சிறை வைப்போம்? அப்படி தனது காதலியை தன் நினைவில் சிறை வைக்கிறான்.எனக்கு படத்திலேயே இது பிடித்த பகுதி , காப்பால் ஒரு கனவை கட்டமைக்க முடியாத காரணத்தை அர்டேன் கண்டுகொள்கிறாள் , அவனின் கனவும் கனவுக்குள் இருக்கும் நினைவும் அவனது காதலி தான்.தன்னால் எந்த கனவையும் தனது காதலி இல்லாமல் கட்டமைக்க முடியாத நிலையில் காப் இருக்கிறான்.தொழிலுக்கு இது பலத்த ஆபத்து , இதை மற்றவர்களிடம் சொல்லுமாறு அர்டேன் வலியுறுத்துகிறாள்.இது ஆபத்து என்பதால் அவன் சொல்ல மறுக்கிறான்.இத்தோடு அவர்கள் தங்களது திட்டத்துக்கு தயாராகிறார்கள்.

திட்டம் இது தான் , ஃபிஷர் என்னும் ஒரு மாபெரும் பணக்காரன் அவனுக்கென்று ஒரு சாம்ராஜ்ஜியம் அதில் அவன் தந்தை இறந்து விட அவன் காட் ஃபாதருடன் இருக்கிறான் , தனது சாம்ராஜ்ஜியத்தை தானே சிதைத்துக்கொள்ளும் ஒரு சிறு சிந்தனையை அவன் தலைக்குள் போட வேண்டும்.விமானத்தில் 10 மணி நேரம் ஒன்றாக செல்லும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கிறது.

முதல் கட்ட கனவில் அனைவரும் ஃபிஷரை கடத்துகிறார்கள்.ஃபிஷரின் ஆழ்மனம் கனவுத்திருட்டுக்கு வருபவரை எதிர்க்க தயார்செய்யப்பட்டுள்ளது.அதனால் துப்பாக்கி ஏந்தி இவர்களை ஃபிஷரின் ஆட்கள் தாக்குகிறார்கள் , இதை கண்டுபிடித்திருக்க வேண்டியது ஆர்தரின் கடமை
அதை சரிவர செய்யாததால் ஆர்தர் மேல் கோபம் கொள்கிறான் காப்.இதனூடே தாக்குதலில் சைட்டோக்கு பலத்த அடி , அவனை கொன்று விடலாம் விழித்துக்கொள்ளட்டும் என ஆர்தர் சொல்கிறான்.

அப்பொழுது தான் காப் ஒரு ரகசியத்தை வெளியிடுகிறான் , இந்த முறை மருந்து கொஞ்சம் வலுவானது கொல்லும்பட்சத்தில் விழித்துக்கொள்ளப்போவதில்லை , எந்த கனவு நிலையில் யார் இறந்தாலும் அவர்கள் முழுமறதி நிலை ( limbo) என்னும் சூனியத்திற்கு போய்விடுவார்கள்.கனவிலிருந்து எந்திரிக்கும் பொழுது அவர்களுக்கு மனம் பிளாங் அவுட் ஆகியிருக்கும்.இதை கேட்ட அனைவரும் கோபம் கொள்கிறார்கள் , வேறு வழியின்றி மீண்டும் திட்டத்தை தொடர்கிறார்கள்.

ஈம்ஸ் , ப்ரொவுனிங் ( ஃபிஷரின் காட்ஃபாதர்) போல் உருமாறிக்கொண்டு தன்னை இவர்கள் துன்புறுத்துவதாக சொல்லி ஃபிஷரிடம் போகிறான்.இருவரையும் கட்டிப்போடுகிறார்கள்.ப்ரொவுனிங்க் ஃபிஷரின் தந்தை வேறொரு உயில் எழுதி வைத்ததாகவும் அதில் இந்த சாம்ராஜ்ஜியத்தை கலைக்க சொன்னதாகவும் சொல்கிறான் , தன்னுடைய சொந்த உழைப்பில் இன்னொன்று உருவாக அவனது தந்தை ஆசைப்பட்டார் என்றும் சொல்கிறான்.ஃபிஷரின் ஆட்களின் தாக்குதல் அதிகமாகிறது ,அடுத்த கட்ட கனவுக்கு இவர்கள் தயாராகிறார்கள்.முதல் கனவு யூசூப்புடையது.

இரண்டாம் கட்ட கனவு ஆர்த்தருடையது , ஆர்த்தரும் அர்டேனும் சேர்ந்து வடிவமைத்தது.இரண்டாம் கட்ட கனவு ஒரு ஹோட்டலில் நடக்கிறது , அங்கே ஃபிஷர் கனவில் இருப்பதாக காப் அவனிடம் சொல்கிறான் , அவனை காப்பாற்ற வந்ததாகவும் சொல்கிறான் , இந்த கடத்தலுக்குப்பின் ப்ரொவுனிங் இருக்கலாம் என்னும் சந்தேகத்தை ஃபிஷரின் தலைக்குள் விதைக்கிறான்.ஃபிஷரின் சொந்த மனம் ப்ரொவுனிங்கை கெட்டவனாக காட்டுகிறது , ஆக ப்ரொவுனிங்கின் ரகசியத்தை நாம் தெரிந்து கொள்ள கனவு கான்போம் வா என்று அப்துல் கலாம் போல் அடுத்த கட்ட கனவுக்கு ஃபிஷரை தயார்படுத்துகிறான் காப்.ப்ரொவுனிங்கின் கனவுக்குள் செல்வதாக சொல்லி அழைத்துசெல்கிறார்கள்.மூன்றாவது கட்ட கனவு ஈம்சினுடையது.

மூன்றாம் கட்டம் ஒரு பனிமலையில் நடக்கிறது , ப்ரொவுனிங்கின் ஆட்கள் தாக்க வருவதாக ஃபிஷரின் ஆழ்மனம் உருவமைக்கிறது.இங்கே மால் வருகிறாள் , அவளை கொல்லவும் முடியாமல் காப் தடுமாறுகிறான்.அவள் ஃபிஷரை கொன்று விடுகிறாள் , இனி ஆட்டம் அம்பேல் என முடிவு செய்கிறார்கள் , இல்லை இன்னுமொரு ஆழத்துக்கு சென்றால் அவனை மீட்டெடுக்கலாம் என்கிறாள் ஆர்டேன்.அவள் கனவு கான்கிறாள்.சைட்டோவும் இறக்கிறான்.

நான்காம் கட்டம் தான் முக்கிய திருப்பமே , மீண்டும் மால்லை எதிர்கொள்கிறான் காப்.உண்மையை சொல்கிறான் , மாலும் காப்பும் கனவின் அடி ஆழத்துக்கு சென்று பல காலம் வாழ்ந்து வருகிறார்கள் இது கனவென்றே மாலுக்கு தெரியாமல் இருக்கிறது.அவளுக்கு புரிய வைக்க அவள் தலைக்குள் இது உண்மையான நிலை இல்லை என இன்ஷெப்ஷன் செய்கிறான் காப்.இதனால் தான் இன்ஷெப்ஷன் சாத்தியம் என்றும் காப்புக்கு தெரியவருகிறது.துருதஷடவசமாக அவள் நிஜத்திற்க்கு வந்தும் இது அழியவில்லை நாம் கனவில் இருக்கிறோம் என்றே நினைத்துக்கொள்கிறாள்.இதன் காரணமாக தற்கொலையும் செய்துகொள்கிறாள்.இந்த உண்மையை சொல்லும்போது (நான்காம் கட்ட கனவில்) காப்பை குத்திவிடுகிறாள் மால் , அர்டேன் மாலலை சுட்டுவிடுகிறாள்.ஃபிஷரை ஒரு மாடியிலிர்ந்து தள்ளிவிட்டு சாவடிக்கிறாள்.நான்காம் நிலையில் செத்தால் எங்கே எந்திரிப்பான்? அதே , அதே! மூன்றாம் நிலையில் எந்திரிக்கிறான் , ஒரு வழியாக தலைக்குள் சிந்தனையை விதைக்கிறார்கள்.அர்டேனும் மரித்து மூன்றாம் நிலைக்கு போகிறாள்.இங்கே இவர்கள் இறந்து அடுத்து இரண்டாம் நிலையில் ஆர்தர் லிஃப்ட்டை வெடிக்க செய்து சாவடிக்கிறான் , ஆக முதல் நிலையில் விழிக்கிறார்கள்.


இப்பொழுது தான் முதல் சீன் வருகிறது , சைட்டோவிற்கு வயதாகி விடுகிறது காரணம் அவன் லிம்போவில் இருக்கிறான்.தான் லிம்போவில் இருப்பதை உணர்ந்து கொண்டே காப் அவனிடம் செல்கிறான்.நாம் கனவில் இருக்கிறோம் என்று சொல்லி சாவடித்துக்கொண்டு நிஜத்துக்கு திரும்புகிறார்கள் , இமிகிரேஷனில் பிரச்சனையில்லாமல் வீடு சென்று தன் குழந்தைகளை காண்கிறான் காப்.

கடைசி காட்சியில் டோட்டம் சுத்துகிறது , நிஜமா கனவா என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு விடப்படுகிறது.


நோலனின் இந்த படம் படைப்பு என்னும் பட்சத்தில் தனிப்புதுமையுடைய ஒன்றாகவும் , அதீத நேர்த்தியுடைய ஒன்றாகவும் பாராட்டப்படும்.இதில் நான் கதையில் இருக்கும் சில கேள்விக்குறிய அம்சங்களை சொல்லாமல் , பொதுவான ஒரு கதையை தான் எழுதியிருக்கிறேன்.இந்த கதையை அறிவியல் புனைவாக அல்லாமல் ஒரு காதலனின் ஏக்கமாகவும் ஒரு தந்தையின் பாசமாகவும் பார்க்கலாம்.தான் கற்ற அறிவியல் தன் மனைவின் உயிரை பலி வாங்கும்போதும் சரி , தன் குழந்தைகளின் முகத்தை தன்னால் பார்க்க இயலாமல் போகும்போதும் சரி , டீ காப்ரியோ பிரமாதமாக நடித்தியிருக்கிறார்.தனது காதலியை நினைவில் சிறை வைத்துவிட்டு உண்மையை மறக்க நினைத்து தோற்கும் ஒரு காதலனின் கதையாக இதை பார்க்கிறேன்.எப்படியாயினும் இதன் நேர்த்திக்கு கண்டிப்பாக பார்க்கலாம்.