இது முழுக்க முழுக்க கற்பனை பதிவு.இப்பதிவில் இருக்கும் அனைத்து கதாப்பாத்திரங்களும் கற்பனையே.தப்பி தவறி நீங்கள் சம்பந்தம்படுத்தி கொண்டால் நான் அதற்க்கு பொறுப்பில்லை.
விண்வெளி வீரர் என்ற பெயர் இவருக்கு வர என்ன காரணம் என்பதை நானறியேன். விவரம் அறிந்தவர்கள் சிலரிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன்.
விண்வெளி ஒரு பிரபல ஆராய்ச்சி கூடத்தின் மிகப்பெரிய விஞ்ஞானி.இவரை ஞான குருவாக ஏற்று கொண்டு கோடிக்கணக்கான மாணவர்கள் உலகெங்கும் இருக்கின்றனர் .
வகுப்பறையில் அவர் பாடம் நடத்த அனைவரும் நித்திரை கொள்ளும் வேளையில் திடுமென எல்லாரையும் ஒற்றை சொல்லாடலில் எழுப்பினார்.
எதோ ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தார், ஒரு கப்பல் கட்டுமான நிறுவனம் தனது செய்கைகளில் உள்ள குளறுபடியால் Shipping turn over ஐ இழந்துவிட்டது என்றார். சரி தான் என்று மீண்டும் நித்திரைக்கு போவதற்குள் அதற்க்கு ஞான குரு விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் "தம்பி அந்த கட்டுமான கம்பனி தனது கப்பலை சரியாக கரையில் நிறுத்தி வைக்கவில்லை.ஆதாலால் அதை ஸ்டியரிங் போட்டு திருப்பையில் பிரச்சனை இது தான் Shipping turn over problem" என்றார்
அந்த மாபெரும் ஆராய்ச்சி கூடம் இவரின் அறிவை பயன்படுத்திக்கொள தவறவிட்டதற்கு இன்னொரு உதாரணம்.நாம் பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியலில் Scanning electron microscope (SEM) என்று ஒன்றை படித்திருப்போம். சின்னது எதுவோ அதை பெருசாக பார்க்கலாம் என்ற ரத்தின சுருக்கமாக அதற்க்கு ஞான குரு முதலில் விளக்கமளித்தார் .
ஆனால் அது அவ்வளவு எளிதில்லை என்பதற்கு ஒரு கதை சொன்னார்.நாம் படிக்கவேண்டிய ஒரு பெரிய விஷயத்திற்கான சாம்பிளாக அதில் இருந்து சின்னதாக பெயர்த்தெடுத்து கொடுத்தால் தான் அதை அந்த கண்ணாடி வழியாக பார்த்து ஆராய முடியும் என்று யாரோ சொல்லிவிட்டார்களாம்.சரி என்று கான்கிரீட் கட்டிடங்களை ஆராயும் இவர் அதிலிருந்துஒரு செங்கலை பெயர்த்தெடுத்து கொண்டுபோய் கொடுத்தார்.அரண்டு போன ஆராய்ச்சியாளர்கள் ஒருவாரம் விடுமுறை எடுத்து வேப்பிலை அடித்துக்கொண்டதாக தகவல்.
இன்றளவிலும் யாருமே இல்லாத தெருவிற்குள் இன்டிகேடர் போட்டு செல்லும் ஒரு சிடிசன் இவர்.தூங்கும்போது மட்டுமே ஹெல்மெட்டை கழட்டுவார் என்பது தனி சிறப்பு.
மதிப்பெண் வழங்குவதில் மட்டும் ஏனோ ஏக கறாராக இருப்பார் .இவர் சாப்பிடும் எக்ஸ்ட்ரா இட்லியை கண்டுக்கொள்ளாத மெஸ் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு கூட கம்மியான மதிப்பெண்களே அளித்து வருபவர் .திருப்பூரிலிருந்து பனியன் , திருநெல்வேலியில் இருந்து அல்வா மற்றும் சிறப்பு ஜெயின்சன் வேட்டிகள் அளிப்பவருக்கு மட்டும் போனால் போகிறது என்று முன்னுரிமை கொடுத்து நேர்மைக்கு இலக்கனாமாக திகழ்பவர்.
ஞான குருவுக்கென்று ஒரு சிறப்பான சீடன் உண்டு அந்த சீடனின் வீட்டுக்கே சென்று பங்குசந்தையை பற்றி தனது விரிவான அறிவை பகிர்ந்திருக்கிறார்.எப்படிப்போட்டால் காசை லாவகமாக இழக்கலாம் என்று இவர் சொல்லியிருக்கும் விஷயங்களை புத்தகமாக கொண்டுவரும் முயற்ச்சி நின்றுபோய் இன்று தஞ்சாவூர் கல்வெட்டுகளில் இவரது சாகசங்கள் பதியப்பட்டு வருகின்றன.
ஆங்கில புலமையை பற்றி அடிக்கடி பேசி நம்மை மூர்ச்சை அடைய வைப்பார்.வேலை கிடைக்காமல் போவதற்கே மாநாக்களிடம் இருக்கும் ஆங்கில அறிவின் போதாமை தான் காரணம் என்றார் .நீங்கள் வேலைக்கு சேரும் கம்பெனியில் என்ன எதிர்பார்ப்பீர்கள் என்று ஒரு நாள் வினவினார் ,சீடன் எழும்பி "Package" என்றான்.இப்படி சிறிய வயதிலேயே packaging கம்பனிக்கு போவேன் என்று நீ அடம்பிடிப்பது நல்லதில்லை என்றார்,குருவே என்று பொற்பாதங்கள் தொட்டு வணங்கினான் சீடன்.
இதுபோக இவரது ஆராய்ச்சி கூடத்தில் இதுகாலம் வரை இவரை பார்த்தவர்கள் அனைவரும் இவர் அனந்தசயனத்தில் இருக்கும்போதே பார்த்திருக்கின்றனர்.இவர் கண்விழிக்கும் நேரமெல்லாம் தேனீர் இடைவேளையாக இருப்பது விஞ்ஞானத்தால் விளக்க இயலாத ஆச்சரியம்
இதுபோல் குருவின் இன்னும் சில சாகசங்களை தொகுக்க அவரது சீடர்களிடம் உதவி நாடியுள்ளேன்.வந்ததும் தொகுக்கிறேன்.படிச்சிட்டு சாவுங்க